“நீங்கள் இல்லையேல் இந்த வெற்றி இல்லை…” – மீடியாக்களுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

“நீங்கள் இல்லையேல் இந்த வெற்றி இல்லை…” – மீடியாக்களுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

நேற்று நடைபெற்ற ‘பாபநாசம்’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசியதில் இருந்து சில பகுதிகள் :

“இது ஒரு வித்தியாசமான விழா. இந்த விழாவை நடத்த வேண்டுமா என்று முதலில் யோசித்தேன். ஆனாலும், 40 நாட்களில் ஒரு நல்ல படம் கொடுத்துள்ளோம். தயாரிப்பாளரும் லாபம் அடைந்துள்ளார். எனவே வெற்றி விழாவை நடத்துவது ஏற்கத்தக்கதுதான் என்று நினைத்து ஏற்பாடு செய்தோம்.

Papanasam Thanks Meet Event Stills (16)

சில படங்களில் வியாபார ரீதியாக சமரசம் செய்து கொள்வதுண்டு. ஆனால் ‘பாபநாசம்’ படம் அப்படி அல்ல. எங்களுக்கு முழு மன திருப்தியை அளித்துள்ள படம்.

நான், ‘அவள் ஒரு தொடர் கதை’ படத்தில் இருந்து இப்படி ஒரு வெற்றியை மீடியாக்களுடன் சேர்ந்து கொண்டாடவில்லை. இப்போதுதான் கொண்டாடுகிறேன்.

இந்த விழா வெற்றி விழா அல்ல. நான் வெற்றி விழா கொண்டாடி வெகு நாட்களாகிவிட்டது. அது வேறு விஷயம். ஆனால் இது நன்றி அறிவிப்பு விழா. யாருக்கு..? உங்களுக்கு..! இந்த நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இது.

நீங்கள் இல்லையேல் இந்தப் படத்திற்கு இத்தனை பெரிய பாராட்டும், வெற்றியும் கிடைத்திருக்காது. இதேபோல் வரும் காலங்களிலும் என் படத்தை மட்டுமின்றி, நல்ல படங்களை கை தூக்கி பிடிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் சிறந்த படங்கள் தொடர்ந்து வர வாய்ப்பு ஏற்படும். இதே சமயம், ‘பாபநாசம்’ படத்தை கொண்டாடும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு விஷயத்தை கேள்விப்பட்டேன். இதை மோகன்லால் என்னிடம் நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் அவர் சொல்லி அது என் காதுக்கு வந்த விஷயம். திரிஷ்யம்’ படத்தை தமிழில் ‘ரீ–மேக்’ செய்ய முடிவெடுத்ததும், ‘இந்த படத்துக்கு கமல்ஹாசன்தான் பொருத்தமாக இருப்பார்’ என்று மோகன்லால் கூறி உள்ளார். அவரது பெருந்தன்மைக்கும், பரிந்துரைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘பாபநாசம்’ படப்பிடிப்பில் படக் குழுவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டனர். இயக்குநர் ஜீத்து ஜோஸப்பிற்கு தமிழ் திரையுலகம் புதியது. பலவித வேலைகள்.. பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. அனைத்தையும் கவனித்துக் கொண்டேயிருப்பார்.

காட்சிகளை சொல்லும்போது மலையாளத்தில் இருந்து அப்படியே எடுக்காமல், ‘இதுல இப்படியிருந்தா நல்லாயிருக்குமே’ன்னு ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொல்லி குழப்பியிருக்கோம். எல்லாத்தையும் அக்கறையா கேட்பார். ஆனால் கடைசியாக தனக்கு எது பிடிக்கிறதோ அது போலத்தான் படம் பிடித்தார்.

படப்பிடிப்பு முடிந்து பிரியும்போது, எங்கள் அனைவரின் கண்களும் நனைந்தன. அந்த அளவுக்கு ஒரு குடும்பம்போல நாங்கள் பழகிவிட்டோம். இந்த படத்தில் நடித்த பலரும் எனது அடுத்த படமான ‘தூங்காவனம்’ படத்திலும் என்னுடன் நடிக்கிறார்கள்.

அத்தனை பேருமே திறமையானவர்கள். என் கதாபாத்திரம் மட்டுமின்றி, மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக இருந்தால்தான் படம் வெற்றி பெறும். இந்த படத்தில் அது அமைந்தது. அனைவரின் வியர்வைக்கும் பரிசாக வெற்றி கிடைத்துள்ளது..” என்றார்.