full screen background image

“எந்த அரசும் சினிமா துறைக்கு நல்லது எதையும் செய்யவில்லை” – கமல்ஹாசனின் பரபரப்பு பேச்சு..!

“எந்த அரசும் சினிமா துறைக்கு நல்லது எதையும் செய்யவில்லை” – கமல்ஹாசனின் பரபரப்பு பேச்சு..!

‘வாலிபராஜா’ படத்தின் பாடல்களை வெளியிட வந்த்து பத்மபூஷன் கமல்ஹாசன் என்பதால் அந்த விழாவில் பேச வந்தவர்கள் அனைவருமே கமல்ஹாசனை முதலில் பாராட்டிவிட்டுத்தான் ‘வாலிபராஜா’ படத்திற்கு வந்தார்கள்.

முதலில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஹெச்.முரளி இந்தப் படத்திற்கு மறைந்த இயக்குநர் இராம.நாராயணன் எந்த அளவுக்கு உதவிகளையும், ஊக்கமும் அளித்தார் என்பதை உருக்கமாகச் சொன்னார்.

இயக்குநர், நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது “கமல்ஹாசன் முதன் முதலில் தனி ஹீரோவாக நடித்த படம் உணர்ச்சிகள். அது வெளியான ஆண்டு 1976. அன்றிலிருந்து இன்றுவரையில் கிட்டத்தட்ட 44 ஆண்டு காலம் ஹீரோவாக நடித்து வரும் உலகத்திலேயே ஒரேயொரு நடிகர் கமல்ஹாசன் மட்டுமே..” என்றார்.

கே.ராஜன் பேசும்போது வழக்கம்போல திருட்டு விசிடி பிரச்சினையைத் தொட்டு, அரசுகள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கறாராக விமர்சனம் செய்தார். ஹீரோ, ஹீரோயின்கள் மூவருமே, “கமல் ஸார் தங்களது விழாவுக்கு வந்து பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்” என்றார்கள்.

உற்சாகமாக பேச வந்தார் கமல். நேற்றைக்கு அவருக்கு ‘உத்தமவில்லன்’ ஷூட்டிங்கும் இருந்த்தாம்.. அதையும் முடித்துவிட்டுத்தான் இந்த விழாவுக்கு வந்தாராம்.

“நான் இந்த விழாவுக்கு வந்ததையே பெரிய விஷயமா எல்லாரும் சொல்றாங்க.. நான் வந்த்துக்கு காரணமே இந்த இளைஞர்களை வாழ்த்தணும்னுதான்.. ஏன்னா எனக்கு இளைஞர்களை ரொம்பப் பிடிக்கும்.. அவங்க முயற்சிகளை வாழ்த்தணும், உற்சாகப்படுத்தணும்னு நினைக்கிறவன் நான்.

ஏன்னா என்னோட வாத்தியார் கே.பி.ஸாரும் இதைத்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அவரும் இளைஞர்களை ஊக்குவித்தவர்தான்.. அவரே தன்னை இன்னமும் இளைஞர்னுதான் சொல்லிக்குவார்.. அவருடைய வாழ்த்துக்கள் இருந்த்தால்தான் என்னை மாதிரியான ஆட்களால் இத்தனை காலம் இந்த்த் திரையுலகில் நீடிக்க முடிந்தது..!

‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படமெல்லாம் முடிஞ்ச நேரம். ஒரு நாள் ஒரு தெருவுல நடந்து போய்க்கிட்டிருந்தேன். அப்போ அந்தப் பக்கமா கார்ல வந்த கே.பி. என்னைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே ‘நாளைக்கு ஆபீஸுக்கு வந்திரு’ என்றார். என்னடா இவர் இவ்ளோ சிரிச்சுக்கிட்டே சொல்றாரேன்னு மறுநாள் போய் விசாரிச்சேன்.

‘அவள் ஒரு தொடர்கதை’ படத்துல நான் நடிச்ச கேரக்டருக்கு முதல்ல ஸ்ரீகாந்தைத்தான் கேட்டிருக்காங்க. அவர் கால்ஷீட் கிடைக்காத்தால யாரை போடலாம்னு பேசிக்கிட்டே கார்ல வந்திருக்கிட்டிருந்திருக்காரு கேபி. அப்போ ‘அவன் இல்லைன்னா.. ரோட்ல போறவனையா புக் செய்ய முடியும்?’ன்னு கேபி கேட்டிருக்காரு. அந்தச் சமயம்தான் நான் அவர் கண்ல பட்டிருக்கேன். அதுக்காகத்தான் அப்படி சிரிச்சாராம்..! நான் மட்டும் அன்னிக்கு தெருவுல நடந்து போகாமல் விட்டிருந்தால், அந்தக் கேரக்டர் எனக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும்..

சினிமா உலகம் ஒரு விசித்திரமான உலகம். புதியவர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.. சிலர் ஜெயிக்கிறார்கள்.. பலர் தோற்றுப் போகிறார்கள். நான் வியந்து பார்த்த பல திறமைசாலிகள் இப்போ எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.. பல திறமையாளர்கள் இங்கேயே இருக்கிறார்கள். சில திறமையாளர்கள் காணாமலேயே போயிருக்கிறார்கள்.. நல்லவேளை அப்போதே என்னை சினிமா உள்ளே இழுத்துவிட்டது. இல்லையென்றால் பரமக்குடி சீனிவாசய்யங்காரின் மகனான நான் எங்கப்பா, அண்ணன் சாருஹாசன் மாதிரி வக்கீலாகி பல குற்றவாளிகளுக்கு நிரபாரதிகள்ன்னு விடுதலை வாங்கிக் கொடுத்திருப்பேன்..

இந்த சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது எதையும் செய்யவில்லை. நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்தான் சொல்கிறேன். ஆனாலும் சினிமாவில் இருப்பவர்களால், இந்த சினிமா உலகம் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது…” என்றார் கமல்.

இந்தியா முழுக்க பதினைந்து அரசாங்கங்கள்தான் இருக்கி்ன்றனவா..? என்ன கணக்கு இது..?

Our Score