full screen background image

களவாணி-2 – சினிமா விமர்சனம்

களவாணி-2 – சினிமா விமர்சனம்

ஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களாலும் மிகவும் விரும்பப்படும்.

அந்த வகையில் இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான ‘களவாணி’ திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம்.

ஒவ்வொரு முறையும் அந்தப் படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்குக் காரணமாகும். இப்போது அதே குழு இணைந்து ‘களவாணி-2’ படத்தை உருவாக்கியிருக்கிறது.

வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சற்குணமே, இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டிருக்கிறது.

இது ‘களவாணி’ படத்தின் தொடர்ச்சி இல்லை. ஆனால் அதில் வரும் சில கதாபாத்திரங்கள் இதிலும் இருக்கிறார்கள்.

வேலைக்குப் போகாமல் வெட்டியாய் ஊருக்குள், களவாணித்தனம் செய்து திரிந்து கொண்டிருக்கிறார் நாயகன் விமல். அதே நேரம் உள்ளூரில் கட்சிப் பிரமுகரான ராஜின் மகளான ஓவியாவையும் காதலித்து வருகிறார்.

அப்போது நடக்கவிருக்கும் உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவிக்கு விமலின் தாய் மாமனான துரை சுதாகர் போட்டியிடுகிறார். இதேபோல் ஓவியாவின் தந்தையான ராஜூவும் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரிடமிருந்தும் பணம் பறிக்கத் திட்டமிடும் விமல் தானும் தலைவர் பதவியில் போட்டியிடுகிறார். இதனால் விமலின் குடும்பத்திற்குள்  குழப்பம் ஏற்படுகிறது.

ஆனால், விமலால் ஒரு பைசாவைக்கூட அவர்களிடமிருந்து வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஒரு கோபத்தில் தாய் மாமனான துரை சுதாகரிடம் தான் தலைவர் பதவியில் தோற்றுவிட்டால் ஊரைவிட்டே ஓடிவிடுவதாக சவால் விடுகிறார் விமல்.

அந்த சவால் என்ன ஆனது..? விமலின் சபதம் ஜெயித்ததா..? காதல் ஜெயித்ததா..? என்பதுதான் இந்தக் ‘களவாணிப் பயபுள்ளை’யின் திரைக்கதை.

விமலுக்கு ஏற்ற கேரக்டர்தான். ஆனால் ‘களவாணி’ முதல் பாகத்தில் இருந்தது போன்ற அழுத்தமான திரைக்கதை அமையாததால் கிடைத்த கேப்பில் கெடா வெட்டியிருக்கிறார். வழக்கம்போல பஞ்சாயத்து நபரான கஞ்சா கருப்புவை இவரும் விக்னேஷ் காந்தும் ஏமாற்றி காசை சுரண்டும் காட்சிகளில் கொஞ்சம் கலகலப்பு.

தேர்தலில் நிற்க கஞ்சா கருப்புவையும் உசுப்பிவிட்டுவிட்டு இருந்த வீட்டையும் விற்க வைத்துவிட்டு அவரை புலம்ப வைக்கும் விமலின் செயல் போகப் போக நமக்கே எரிச்சலையூட்டுகிறது. இப்படியொரு கேரக்டர் உள்ள நபர் தலைவர் பதவிக்கு வந்து என்ன செய்யப் போகிறார் என்று..?!

விமலுக்கு பக்கபலமாக நடித்திருக்கும் விக்னேஷ் காந்த் சில இடங்களில் டைமிங் காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார்.

ஓவியாவின் ஆர்மியினருக்கு இதில் பெருத்த ஏமாற்றம்தான். பிக்பாஸில் கலர், கலர் நவீன உடைகளில் பார்த்த ஓவியாவை இதில் பாவடை தாவணியில் நடிக்க வைத்திருக்கிறார் சற்குணம். விமலுக்கு “தேர்தலில் நிச்சயமாக ஜெயிப்பாய்…” என்று தைரியம் சொல்லும் காட்சி உட்பட சில காட்சிகளில் நடிப்பிலும் கவனிக்க வைத்திருக்கிறார் ஓவியா.

வழக்கமான ஆதர்ச தம்பதிகளாக இளவரசுவும், சரண்யாவும் ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் விமலை விட்டுக் கொடுக்காமல் கடைசிவரையிலும் மகனுக்காக ஓட்டுக் கேட்கும் அளவுக்குச் சென்று பாசத்தைக் கொட்டுகிறார் சரண்யா. இதேபோல் இப்படியொரு கண்டிப்பான அப்பா நமக்கு இருந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தையும் உருவாக்குகிறார் இளவரசு.

புதிய வில்லன் நடிகரான துரை சுதாகர் அந்த குணச்சித்திரம் கலந்த வில்லன் கதாபாத்திரத்துக்கு மிக சரியாக பொருந்தியிருக்கிறார். இயக்குநரின் இயக்குதல் சிறப்பாக இருந்தமையால் இவரும், ஓவியாவின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜூவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

மசானியின் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் அழகாக பதிவாகியிருக்கிறது. பெரும்பாலும் பகல் நேரக் காட்சிகளை இருப்பதால் பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. நடராஜன் சங்கரனின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. மணி அமுதவன், வி-2, ரொனால்டு ரீகன் கூட்டணியில் உருவாகியிருக்கும் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. படத் தொகுப்பாளர் ராஜா முகமதுவின் படத் தொகுப்பில் குறையில்லை.

முதல் பாகத்தில் இருந்த புதுமையும், திரைக்கதை நேர்த்தியும் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை என்பது வருத்தமான விஷயம்.

‘களவாணி-1’ டிரெண்ட் செட்டர் என்றழைக்கப்படும் வகையில் உருவான திரைப்படம். அதன் திரைக்கதையின் பாதிப்பில் பல படங்கள் அந்தாண்டு வெளியாகின. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் திரைக்கதையில் அழுத்தமில்லாமல் கோட்டைவிட்டதால் படம் மிகச் சிறப்பு என்று சொல்ல முடியவில்லை.

படத்தின் நாயகனை திருட்டுப் பயல் என்றே காண்பித்துவிட்டதால் ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது. சினிமாவுக்கான அழகியல் காட்சிகள்கூட படத்தில் இல்லை. கிராமத்து பஞ்சாயத்து தேர்தல்களை வைத்து இன்னும் நிறையவே சுவாரஸ்யமாக திரைக்கதையை எழுதியிருக்கலாம்.  கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

கடைசி அரை மணி நேரத்தில் மட்டும் லாஜிக் பார்க்காத அளவுக்கு கலகலப்பாக படத்தை நகர்த்தி சிரிக்க வைத்திருக்கிறார்கள். இதை படம் முழுக்க இருக்கும்படி செய்திருந்தால் படம் சூப்பர் ஹிட்டாகியிருக்கும்..!

Our Score