‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்

‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்

நீட் எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், எட்டு வழி சாலை போராட்டம் என்று தமிழகத்தின் தற்போதைய அனைத்து உயிர்நாடியான பிரச்சினைகளுக்காக சூப்பர் ஸ்டார் நடிகர்களைவிடவும் அதிகமாக குரல் கொடுத்து தமிழக நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு இதனால் சிறைச்சாலைக்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருக்கிறார் நடிகர் மன்சூரலிகான்.

தன்னுடைய உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக போராடி வரும் அதே வேளையில் திரைப்படத் துறையிலும் தனது பங்களிப்பை செய்து கொண்டேதான் இருக்கிறார் மன்சூரலிகான்.

இப்போது  தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக ‘கடமான் பாறை’ என்னும் படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் மன்சூரலிகான்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி நாகரிக வாடையே அறிந்திராத ஒரு குகை வாழ் மனிதனாக நடிக்கிறார்.

நாயகிகளாக அனு ராகவி, ஜெனி பெர்ணாண்டஸ் இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சிவசங்கர் மாஸ்டர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல் கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளு சபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல் சுரேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவும் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு   –  மகேஷ்.T, இசை  – ரவிவர்மா, பாடல்கள்  –  விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான், கலை  –  ஜெயகுமார், நடனம் –  டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா,. சண்டை பயிற்சி – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர், ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார், ஆக்கம், இயக்கம்  – மன்சூரலிகான்.

kadamaan paarai movie stills

படம் பற்றி இயக்குநர் மன்சூரலிகான் பேசும்போது, “இப்போதெல்லாம் கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் நிறைய பேர் தவறான பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். படிப்பதைத் தவிர மற்றவைகளில்தான் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது.

இப்படியிருக்கும் ஒரு காதல் ஜோடி, ஒரு நாள் கல்லூரியை கட் அடித்துவிட்டு. கங்குவா ரெட்டி என்னும் மலைப் பகுதிக்கு செல்கிறார்கள்.  அந்த கங்குவாரெட்டி மலையை  தன் வசம் வைத்திருக்கிறான் சூரப்பன் என்னும் ஆதிவாசி மனிதன்.

அந்த மலையில் இருந்து ஒரு செம்மரக் கட்டையைக்கூட கடத்த முடியாது, கனிம வளங்களையும் திருட முடியாது. இப்படி காட்டிலிருந்து எந்த பொருளையும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கிறான் அந்த சூரப்பன் என்னும் மன்சூரலிகான்.

இவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் மாட்டிக் கொண்டால்கூட உயிரோடு திரும்ப முடியாது. அப்பேர்ப்பட்ட சூரப்பனிடம் இந்த காதல் ஜோடி சிக்கிக் கொள்கிறது.

அவனிடம் சிக்கிய ஜோடி தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த ‘கடமான் பாறை’ படத்தின் கதை. படத்தின் திரைக்கதையும் திகிலூட்டும் காட்சிகளும் மக்களை நிச்சயமாக ரசிக்க வைக்கும்.

இதன் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தின் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது…” என்றார்.