காதலிக்க பெண் தேடும் கதைதான் ‘கடலை போட பொண்ணு வேணும்’ திரைப்படம்

காதலிக்க பெண் தேடும் கதைதான் ‘கடலை போட பொண்ணு வேணும்’ திரைப்படம்

ஆர்.ஜி. மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கடலை போட பொண்ணு வேணும்’ திரைப்படம்.

படத்தில் நாயகனாக அசார் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு,  செந்தில்,  மன்சூர் அலிகான், ‘லொல்லு சபா’ மனோகர் மற்றும் சுவாமிநாதன், ‘ஃபைட்டர்’ தீனா, ‘பிக்பாஸ்’ காஜல் போன்ற பல நகைச்சுவை  நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ளனர்.  

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் இனியன்.  ஜுபின் இசையமைக்கிறார். சந்துரு படத் தொகுப்பு செய்துள்ளார். பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.  பாட்டிற்கு உயிருட்டும்விதமாக சங்கர் மஹாதேவன் மற்றும் வைக்கம்  விஜயலக்ஷ்மி இருவரும் பாடல்களைப் பாடியுள்ளனர். பாடல்களின் தாளத்திற்கேற்ப ஆடியிருக்கும் நடனத்தை தீனா மற்றும்  ராதிகா இருவரும் இயக்கியுள்ளனர். 

இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஆனந்தராஜன், “காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வம்சத்தில் பிறந்த கடைசி வாரிசுதான் இந்தப் படத்தின் கதாநாயகன்.  தன் இலட்சியத்தை எப்படி அடைகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

நாயகனான அசார், காதல் செய்வதற்காக கதாநாயகியை தேடி வரும் இளைஞனாக நடித்துள்ளார்.  காதலின் அடிப்படையே பழகிப் பார்த்து கல்யாணம் செய்வது என்பதே இந்தப் படத்தின் கதையின் மையம்.  காதல் என்பதே புரிதல்தான். இதைத்தான் ’கடலை’ என்று படத்தில் விவரிக்கிறோம்.

என்னுடைய கதாநாயகன் காதலியை கண்டறிந்தாரா..? அல்லது வெறுமனே கடலை போட்டாரா..? கடைசியாக கல்யாணம் செய்தாரா… என்பதுதான் மீதி கதை.

காதலித்து கல்யாணம் செய்வதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட கதாநாயகனாக அசார் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்.. யோகிபாபு வரும் காட்சிகள் திரையரங்கை சிரிப்பால் நிறைய வைப்பது உறுதி

ஜனரஞ்சகமும் சுவாரஸ்யமும் கலந்த படம் இது. குடும்பத்துடன் பார்க்க கூடிய விதத்தில் நகைச்சுவை ததும்ப இத்திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இரண்டாவது பாகம் முழுவதும்  ‘காதலர் தினம்’ அன்று  நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டது. மக்கள் முகம் சுளிக்கும் விதமான எந்த காட்சிகளும் இதில் இடம் பெறவில்லை…” என்றார் இயக்குநர் ஆனந்தராஜன்.