full screen background image

காவியன் – சினிமா விமர்சனம்

காவியன் – சினிமா விமர்சனம்

2M சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.V.சபரிஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில்  கதையின் நாயகனாக நடிகர் ஷாம் நடித்திருக்கிறார். ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் அறிமுகமான ஆத்மியா, இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீதேவி குமாரும் மற்றொரு ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, ஹாலிவுட்டில் இருந்து ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகிய  நடிகர்களும் படத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். 

ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ்குமார், இசை – ஸ்யாம் மோகன் M.M., படத் தொகுப்பாளர் – அருண் தாமஸ், கலை இயக்கம் – T.N.கபிலன், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சிவா, பாடல்கள் – மோகன்ராஜ், சவுண்ட் டிசைனர் – M.J.ராஜு, மக்கள் தொடர்பு – புவன், ஒப்பனையாளர் – P.S.குப்புசாமி, காஸ்ட்யூம் டிசைனர் – ஷேர் அலி, எழுத்து, இயக்கம் – சாரதி.

இந்தப் படத்தை SDC Picturez நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.

தமிழகக் காவல்துறையில் அதிகாரிகளாகப் பணியாற்றுபவர்கள் ஷாமும், ஸ்ரீநாத்தும். இவர்களுக்கு அமெரிக்காவில் நடக்கும் பன்னாட்டு போலீஸ் உயர் அதிகாரிகளின் பயிற்சிக்கு வரும்படி அழைப்பு வருகிறது. இதற்காக அமெரிக்காவுக்கு வருகிறார்கள் இருவரும்.

சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸ் போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த ஊர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஒரு அதிகாரியாகப் பணியாற்றுபவர் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி குமார். இவருக்கும், ஷாமுக்கும் ஏற்கெனவே தமிழகத்திலேயே பழக்கம் உண்டு.

தன் தங்கையின் மரணத்திற்குக் காரணம் ஷாம்தான் என்று நினைத்து, அவருடனான நட்பை முறித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு கிளம்பியவர்தான் ஸ்ரீதேவி குமார். இப்போது எதிர்பாராதவிதமாக, எதிர்பாராத இடத்தில் இருவரும் சந்தித்தில் இருவருக்கும் அதிர்ச்சி.

இந்த நேரத்தில் லாஸ் வேகாஸில் ஒரு சைக்கோ பல இடங்களில் பெண்கள் மீது மோதுவதுபோல் நடித்து அவர்களது கையில் காயத்தை உண்டாக்கி அவர்களது ரத்த மாதிரியை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து சோதனை செய்கிறான். இவனால் ஒரு பெண் கொல்லப்படுகிறாள்.

அந்தப் பெண்ணைக் காப்பாற்ற ஸ்ரீதேவி குமார், அனைத்துவித வழிகளையும் போனிலேயே சொல்லியும் காப்பாற்ற முடியாமல் போகிறது. இதனால் பெரிதும் மனவருத்தமடையும் ஸ்ரீதேவி குமார் வேலையில் இருந்து ராஜினாமா செய்வதாகச் சொல்கிறார். ஆனால், ஷாம் ஸ்ரீதேவி குமாரை சந்தித்து அந்தக் கொலைக்கு தார்மீக ரீதியாக யாரும் பொறுப்பேற்க முடியாது என்று சமாதானம் செய்து அவரைத் திரும்பவும் பணிக்கு அழைத்து வருகிறார்.

ஸ்ரீதேவி பணிக்கு வந்தவுடனேயே மீண்டும் ஒரு போன் அழைப்பு. இம்முறை இன்னொரு நாயகியான ஆத்மியா ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருந்து அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்படுகிறார். அதிர்ஷ்டவசமாக ஆத்மியாவிடம் செல்போன் இருந்ததால் அதை வைத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்து தன் நிலைமையைச் சொல்கிறார் ஆத்மியா.

அவரைக் காப்பாற்றத் துடிக்கிறார் ஸ்ரீதேவி குமார். இவருக்கு லாஸ் வேகாஸ் போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்யும் டெபுடி சார்ஜெண்ட் தலைமையில் ஷாமும், ஸ்ரீநாத்தும் உதவுகிறார்கள்.

ஆத்மியாவைக் காப்பாற்றினார்களா.. இல்லையா.. அந்த சைக்கோ எதற்காக ஆத்மியாவைக் கடத்தினான் என்பதுதான் இந்தக் ‘காவியன்’ படத்தின் திரைக்கதை.

2017-ம் ஆண்டு துவக்கப்பட்டு 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்சார் சான்றிதழ் பெற்று ஒன்றே முக்கால் வருடங்கள் கழித்து இத்திரைப்படம் இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களின் தற்போதைய நிலைமை என்ன என்பதற்கு இத்திரைப்படம் மிகச் சிறந்த சான்று.

நமது இந்தியாவில் இருக்கும் அவசர போலீஸூக்கான தொடர்பு எண் 108-ஐ போல, அமெரிக்காவில் 911. அமெரிக்க போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு வரும் அவசர அழைப்புகளுக்கு அவர்கள் எப்படி பதில் சொல்கிறார்கள்.. என்ன தீர்வு சொல்கிறார்கள்.. எவ்வளவு நிமிட இடைவெளியில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகிறார்கள்.. மக்கள் பிரச்சினைகளை எப்படித் தீர்க்கிறார்கள்… என்பதையெல்லாம் கச்சிதமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இந்தியாவை நினைத்தால் கடுப்பாதான் இருக்கு மை லார்ட்…!

ஷாமுக்கு மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு படம். அவர் நடிப்புக்கான ஸ்கோப் அதிகம் இல்லாமல் சண்டை காட்சிகளில்தான் அவருடைய உழைப்பு தெரிகிறது. இயக்குதல் தனித்து இல்லாமல் கதை, திரைக்கதையோடு சேர்ந்தே வருவதால் தனித்த நடிப்புத் திறனை யாருமே காட்டவில்லை.

ஸ்ரீநாத்தின் மொக்கை காமெடிகள் எங்கும் எடுபடவில்லை. அதிலும் சில சமயங்களில் கடுப்பைத்தான் கிளப்புகிறார். போலீஸ் அதிகாரி என்னும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் விருந்தினர்கள் நாட்டுக்குப் போய் அங்கேயிருக்கும் சக காவல் துறை அதிகாரிகளை அசிங்கப்படுத்தும்விதமாய் பேசுவதெல்லாம் காமெடியில் வராது இயக்குநரே..! 

ஸ்ரீதேவி குமார்.. இதுதான் முதல் படமா..? அலட்டிக் கொள்ளாத அதே சமயம் பயமுறுத்தாத.. மென்மையான குரலில் பிரச்சினைகளைத் தீர்க்க வழி சொல்லும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். நன்று. இத்தனையாண்டுகள் கழித்து சந்தித்தாலும் ஷாமின் தன்னிலை விளக்கத்தைக் கேட்டவுடன் காதலிப்பதெல்லாம் சினிமாத்தனமாகிவிட்டது.

உண்மையில் நடித்திருப்பவர்கள் வில்லனாக நடித்த அந்த ஆங்கில நடிகரும், ஆத்மியாவும்தான். ஆத்மியாவின் பயம், படபடப்பு.. பதட்டம்.. கதறல்.. அழுகை எல்லாம் சேர்ந்து படத்தில் அடுத்து என்ன என்று கேட்கவும், பார்க்கவும் வைத்திருக்கிறது. ‘மாதங்கி’ என்னும் ஈழத்துப் பெண்ணாக அவரது ஈழத்து வசனங்கள் சரியென்றாலும், டப்பிங் கொடுத்தவரின் இடறலால் பல காட்சிகளில் டப்பிங் சொதப்பலாகிவிட்டது.

சைக்கோ ஆளின் விசித்திரமான பிரச்சினைக்கு அவர் செய்யும் விசித்திரமான முட்டாள்தனமான செயல் அதிர்ச்சியடைய வைக்கிறது. சண்டை காட்சிகளை மட்டும் ஆவேசமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் சூதாட்ட சொர்க்கபுரி, தூங்கா நகரமான லாஸ் வேகாஸ் ஊரையே கலர்புல்லாக படமாக்கியிருக்க வேண்டாமா..? நகரைக் கொஞ்சமாகக் காண்பித்துவிட்டு நிவேடா பாலைவனப் பகுதிகளிலேயே காட்சிகளை அதிகமாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டும் கொட்டும்..

ஒரு டூயட் பாடல் தேவையில்லாத இடத்தில் தேவையில்லாமல் வந்து ஒலித்துவிட்டுப் போகிறது. ஆனால் பின்னணி இசை சற்றும் இடைஞ்சல் செய்யவில்லை. அதற்காக ஒரு நன்றி.

அமெரிக்க போலீஸின் செயல்பாடுகளைப் பற்றிச் சொல்ல வந்தத் திரைப்படம், அமெரிக்க போலீஸாரைவிடவும் இந்தியாவின் அதிலும் தமிழகப் போலீஸார் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் என்பதாகச் சொல்வதுதான் நகை முரண். காமெடியானது.

சைக்கோவின் கதை, தேடுதல் வேட்டை.. என்கிற பகுதிகளாலேயே படத்தை இறுதிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். அவ்வளவுதான்..!!!

 

Our Score