“நாங்கதான் உயர்த்திவிட்டோம். எங்களையே ஆள்வோம் என்கிறாயா..?” – ரஜினியை சீண்டிய பாரதிராஜா..!

“நாங்கதான் உயர்த்திவிட்டோம். எங்களையே ஆள்வோம் என்கிறாயா..?” – ரஜினியை சீண்டிய பாரதிராஜா..!

‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் யுரேகா அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘காட்டுப் பய சார் இந்த காளி.’

இந்தப் படத்தில் ஜெய்வந்த் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இவரே இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்பதும் ஒரு கூடுதல் தகவல். ‘ஐரா’ என்னும் புதுமுக நடிகை நாயகியாக நடித்திருக்கிறார்.

மற்றும், ‘ஆடுகளம்’ நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, C.V.குமார், அபிஷேக், யோகி தேவராஜ், எமி, R.ரத்தினகுமார், டேவிட், காமாட்சி மோகன், ‘அம்மா கணக்கு’ விக்கி, முத்தையா கண்ணதாசன், மதன், அஸ்மிதா ஆகியோரும் நடித்துள்ளனர்,

தயாரிப்பு – V.G.ஜெய்வந்த், இயக்கம் – யுரேகா, இசை – விஜய் ஷங்கர், ஒளிப்பதிவு – மணி பெருமாள், படத் தொகுப்பு – வில்ஸி, கலை – மோகன மகேந்திரன், சண்டை பயிற்சி – பிரபு சந்திரசேகர், நடனம் – பூபதி, பாடல்கள் – பிறைசூடன், யுகபாரதி, யுரேகா, பேனா.பிரேம்ஜி, புரோடக்ஷன் எக்சிகுயுடிவ் – S.பெஞ்சமின், உடைகள் – பிரசாத், ஒப்பனை – கரிசூழ்ந்தான், ஸ்டில்ஸ் – மோதிலால், மக்கள் தொடர்பு – நிகில், டிசைன்ஸ் – பிலசன்.

KPSIK Audio Launch Stills (25)

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலையில் கமலா தியேட்டரில் நடைபெற்றது.

இயக்குநர் யுரேகா தமிழ் மொழி பற்றாளர். கூடவே தமிழ் இன உணர்வாளர். இது போதாதா..? அழைப்பு விடுக்கப்பட்டு மேடையேறியிருந்தவர்கள் அனைவருமே தமிழ் உணர்வாளர்கள் என்பதால் ஏதோவொன்று நடக்கப் போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.

முதலில் பேச வந்த இயக்குநர் யுரேகா, “தமிழ்நாட்டில் நாட்டுப் பண் இசைக்கப்பட்டால் ஒரு சாமியார் எழுந்து நிற்க மறுக்கிறான். அப்போ நாங்க மட்டும் தேசிய கீதம் இசைக்கப்படும்போது ஏன் எழுந்து நிற்க வேண்டும்..? நாங்களும் மறுப்போமே..” என்று துவக்கத்திலேயே கொழுத்திப் போட்டார்.

பின்பு அவர் தொடர்ந்து பேசும்போது, “வட நாட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து எந்தத் தொந்தரவும் இல்லாத நிலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

KPSIK Audio Launch Stills (26)

ஆனால் எங்களுடைய தொப்புள் கொடி சொந்தங்களான ஈழத்து மக்கள் அவர்களுடைய அகதி முகாம்களுக்கு இரவு 6 மணிக்குள்ளாக திரும்பிவிட வேண்டும் என்று அரசுகள் கட்டாயப்படுத்துகின்றன.  அவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் ஓடி, ஓடி உழைத்து வரும் வேளையில் அவர்களை இப்படி பிச்சையெடுக்க வைப்பது எந்த வகையில் நியாயம்..?

முதலில் தமிழகத்துக்குள் வரும் வட நாட்டுக்காரர்களுக்கு தனி உள் நாட்டு விசா கொடுக்க வேண்டும். காவிரிக்காக போராடுகிற விவசாயிகளின்  கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்…” என்று படபடப்பாய் பேசி முடித்தார்.

படத்தின் இசையை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட இயக்குநர்கள் ரமேஷ் கண்ணாவும், வா.கெளதமனும் பெற்றுக் கொண்டனர்.

வாழ்த்துரை வழங்கிய பாரதிராஜா வழக்கம்போல சீறித் தள்ளினார். இவருடைய பேச்சை மத்திய, மாநில உளவுத் துறையினர் மும்முரமாக பதிவு செய்தனர்.

பாரதிராஜா பேசும்போது, “எனது மொழி, கலாச்சாரம் மீது சிறு கீறல் விழுந்தாலும் நான் பொறுக்கமாட்டேன். எனது கடைசி மூச்சுவரை என் தமிழினத்துக்காகவே போராடுவேன்.. நான் அந்நியனாம். உனக்குத்தான் தமிழும், தமிழ்நாடும் அந்நியமாகி விட்டதே.. நீயே எனக்கு அந்நியன் என்கிறபோது, நான் உனக்கு அந்நியனாகத்தானே தெரிவேன்..?

KPSIK Audio Launch Stills (4)

நாமே வசனம் எழுதி ‘அப்படி பேசு’, ‘இப்படி பேசு’.. என சொல்லிக் கொடுத்து.. நடிப்பையும் சொல்லிக் கொடுத்து.. உச்சத்தில் கொண்டு போய் ஏற்றி வைத்தால்… ‘நான் நாட்டை ஆள வர்றேன்’கிறான். அவன் கட் அவுட்டுக்கு  பாலபிசேகம், மாலை போடுறது என்று  மக்களை நாம்தான் முட்டாளாக்கி வைத்திருக்கிறோம்…!

இப்போது நாட்டில் பாலியல் வன்முறை கொடுமை அதிகமாக நடக்கிறது. இந்த மத்திய ஆட்சி வந்த பிறகு இவைகள் நிறையவே நடக்கின்றன. பாலியல் வன்முறை நாய்களை நம்மால் திருத்தவே முடியாது. அவன்தான் அந்த கொடுமையை செய்தான் என தெளிவாக தெரிகிறபோது எதற்கு போலீஸ், கோர்ட், விசாரணை…?

பீச்சில் ஆயிரம் பேருக்கு மத்தியில் நிக்க வைத்து அவனை சுட்டுக் கொல்லு…! எட்டு வருடங்கள் கழித்து குற்றம் நிருபிக்கப்படவில்லை என சொல்லி விடுதலை பண்றதுக்காகவா விசாரணை…?

KPSIK Audio Launch Stills (27)

இப்போதெல்லாம் நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. ‘ஸ்கீம்‘ என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கேட்பதற்காகவெல்லாம் வாய்தா கேட்கிறார்கள். இவர்களின் ஆட்சி காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் வரும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. அப்படி வாரியம் அமைத்தாலும் அது நீர்த்துப் போய்விடும்.. இதற்கான அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்வார்கள்.. !

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா யார்..? நீங்க  வைத்த ஆளுதானே..! அவரிடமிருந்து எப்படி தீர்ப்பு வரும் என்பது எங்களுக்குத் தெரியாதா…? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடத்தப்படும் எங்களின் இந்த அறவழிப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்றால் நாங்கள் வேறு வழியை தேட வேண்டியிருக்கும்…” என எச்சரித்து முடித்தார் இயக்குநர் இமயம்.
error: Content is protected !!