‘காற்றின் மொழி’ படத்திற்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் A.H.காஷிஃப்.

‘காற்றின் மொழி’ படத்திற்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் A.H.காஷிஃப்.

‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’  ஆகிய  படங்கள் மூலம் ஹாட்ரிக்  அடித்த  ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்சியில்  ‘துமாரி சுலு’ என்ற  சூப்பர் ஹிட் இந்தி  படத்தின் தமிழ்  ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து வருகிறார்.

‘மொழி’ படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குநர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி  ‘காற்றின் மொழி’-யில் மீண்டும் இணைந்து  களமிறங்கியுள்ளனர். இதுவே இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவனாக நடிக்கிறார். லட்சுமி மஞ்சு மற்றுமொரு  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மற்றும் குமாரவேல், பாஸ்கர், மனோபாலா, மோகன்ராமன், உமா பத்மநாபன்  உட்பட  பலர் நடித்துள்ளனர்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய…  A.H. காஷிஃப் இசையமைத்துள்ளார். பாப்ட்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BOFTA MEDIA WORKS INDIA PVT. LTD.,) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் G.தனஞ்ஜயன், S.விக்ரம்குமார், மற்றும் லலிதா  தனஞ்ஜயன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த ‘காற்றின் மொழி’ படம் பற்றி படத்தின் இசையமைப்பாளர் A.H.காஷிஃப் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவர் ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் இந்த ‘காற்றின் மொழி’ படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசைப் பயில ஆரம்பித்தேன். எனது மாமா A.R.ரகுமானிடம்தான் ‘Internship’ செய்தேன். பல படங்களில் அவருடன் பணி புரிந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் இசையமைத்த ஆல்பம் பாடல்களை ‘Youtube’-ல் பதிவேற்றினேன்.

அதைப் பார்த்துவிட்டுத்தான் தனஞ்செயன் ஸார் என்னிடம் ‘சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறதா..?’ என்று கேட்டார். அப்படிதான் இந்த பயணம் தொடங்கியது. 

ஹிந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படம்தான் ‘காற்றின் மொழி’. பின்னணி இசையைப் பொறுத்தவரையில் படத்தின் முதல்பாதி மிகவும் சுலபமாக முடிந்துவிட்டது. இரண்டாம் பாதியில் பல காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால், தரமான இசையைத் தரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

இப்படம் எளிமையான வாழ்க்கை, அதில் இருக்கும் உணர்ச்சிகரமான சம்பங்கள் போன்ற கதைக்கருக்கேற்ப இசை அமைந்திருக்கும். இப்படத்தின் சிறப்பைப் பற்றிக் கூற வேண்டுமானால், கதைக்கு என்ன தேவையோ, மேலும் ராதாமோகன் என்ன எதிர்பார்த்தாரோ அதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.

முதல் பாடல் மதன் கார்க்கி இணைந்து பணியாற்றினேன். ‘டர்ட்டி பொண்டாட்டி’ (Dirty Pondatti) பாடலைத்தான் இசையமைத்து முடித்தோம். இப்பாடல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

அடுத்த பாடல் ‘கௌம்பிட்டாளே விஜயலட்சுமி’, இந்தப் பாடல் ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் எவற்றையெல்லாம் பார்த்து ரசிப்பாள் என்பதை பற்றி சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக அமைந்திருக்கும். இயக்குநர் ராதாமோகன் முதலிலேயே இந்தப் பாடல்தான் இப்படத்தின் அடித்தளம் என்று சொல்லிவிட்டார். ஆகையால், அதை மனதில் வைத்து அந்தப் பாடலின் இசையாகட்டும், வரிகள் ஆகட்டும் இயக்குநர் கூறியபடிதான் அமைந்திருக்கிறது.

இன்னொரு சிறப்பு பாடல் ‘றெக்கைத் துளிர்த்த பச்சைக்கிளி, இனிமேல் நான்தான் காற்றின் மொழி’. தலைப்புப் பாடலாக அமைந்திருக்கும் இப்பாட்டின் உள்ளே படத்தின் மையக் கருவைக் கொண்டிருக்கும். பாடலைப் பார்க்கும்போது அதை நன்றாக உணரலாம்.

அடுத்ததாக இந்த படத்தின் க்ளைமாக்ஸ் மட்டுமல்லாமல் முழுப் படத்தின் கதையையுமே அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வது ‘போ உறவே’ பாடல்தான். இருப்பினும், ‘கௌம்பிட்டாளே விஜயலட்சுமி’ பாடல்தான் படத்தின் அடையாளமாக இருக்கும்.

பாடல்களை இசையமைத்து முடித்ததும் முதலில் எனது பாட்டியிடம் கொடுத்தேன், அடுத்து A.R.ரகுமானிடம்தான் கொடுத்தேன். ‘மாமா’ என்ற உறவைத் தாண்டி அவர் பள்ளியில் பயின்றதால் அவர் எனக்கு குரு. ஆனால், பாடல்களை அவர் கேட்டாரா என்று தெரியவில்லை.

மேலும், இப்படத்திற்கு புதுமுகமான என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தனஞ்செயனுக்கும், ராதாமோகனுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜோதிகா பாடல்களைக் கேட்டுவிட்டு ‘நன்றாக இருக்கிறது’ என்று பாராட்டினார்.

இதன் பிறகு மலையாளத்தில் அகஸ் சினிமாஸ் தயாரிப்பில் ‘பதினெட்டாம் படி’ என்ற படத்தில் இசையமைக்கவிருக்கிறேன்.

‘காற்றின் மொழி’ படத்தின் இசை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். இளைஞர்கள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நவம்பர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது…” என்றார் பெருமிதத்தோடு..!
error: Content is protected !!