“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..!

“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..!

MDPC கிரியேஷன்ஸ் அண்டு புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் எம்.டி.சுரேஷ் பாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘காதல் அம்பு’.

இந்தக் ‘காதல் அம்பு’ படத்தில் ஸ்ரீனிவாச நாயுடு, பரத், கிரண், ரேஷ்மா, மணீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – விக்னேஷ் நாகேந்திரன், இசை – சன்னி டான், படத் தொகுப்பு – சுரேஷ் பாபு, இணை தயாரிப்பு – நவீன் குமார், தயாரிப்பு – Dr.எம்.டி.சுரேஷ் பாபு, தயாரிப்பு -நிறுவனம் – MDPC கிரியேஷன்ஸ் அண்டு புரொடெக்சன்ஸ், எழுத்து, இயக்கம் – பிரவீன்.

‘காதல் அம்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

DSC_8407 (FILEminimizer)

இந்த விழாவில் ‘கில்டு’ அமைப்பின் கவுரவச் செயலாளரான ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்’ என்ற கூற்றுக்கேற்ப தமிழ்ச் சினிமாவிற்குள் வரும் அனைவரையும் நாம் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இனிமேல் எடுக்கும் படங்களில் மது குடிப்பது போல காட்சிகளை வைக்க வேண்டாம் என்று இயக்குநர் பிரவீனிடம் வேண்டுகோள் வைக்கிறேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்…” என்றார்.

DSC_8372 (FILEminimizer)

நடிகர் ஆரி பேசும்போது, “இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வர வேண்டும்.

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக, கவின் ‘பிக் பாஸில்’ இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது சுபஸ்ரீயின் மரணம்தான்.

யாருக்கோ வைத்த பேனர் மீது காற்றடித்ததில், அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி அவர் இறந்துவிட்டார்.

இந்த விபத்திற்குப் பிறகு தி.மு.க.-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன். அவர்களுக்கு ஓட்டுப் போடுவேன்.

அதேபோல், சினிமாத் துறையைச் சார்ந்தவர்களும் இனிமேல் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். ‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்கக் கூடாது என்று ரஜினியே கூறினால் நன்றாக இருக்கும்…” என்றார்.

DSC_8412 (FILEminimizer)

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழராக இருந்தாலும் கன்னடத்தில் 3 படங்களில் பணியாற்றியிருக்கிறார், தமிழில் இதுதான் அவரது முதல் படம். பிறமொழி திரைப்படங்களிலும் பணியாற்றுங்கள். பிற மொழிகளில் வெற்றி பெற்றால் அது வெறும் வியாபார வெற்றி. ஆனால், தாய் மொழியில் வெற்றியடைவதுதான் நமக்கு ஆத்ம திருப்தியைத் தரும்.

இந்தப் படத்தின் இயக்குநரான பிரவீன் வெளிப்படையாக பேசினார். ஆள் பார்க்க சிறிய பையனாக இருந்தாலும், அவருக்குள் சினிமா அறிவு நிறைய இருக்கிறது. ‘காதலிக்க நேரமில்லை’, ‘இன்று போய் நாளை வா’ என்று காதலை நகைச்சுவையாகக் கூறிய படங்கள் வெற்றியடைந்திருக்கிறது. அதேபோல், இப்படமும் வெற்றியடையும்.

இப்போது எந்தக் காரணமாக இருந்தாலும் மது அருந்துவதுதான் இப்போதைய கலாச்சாரம் என்று எல்லோர் மனதிலும் பதிந்து விட்டது. ஆகையால், இது போன்ற காட்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளைவிட சினிமாக்காரர்களுக்குத்தான் பொறுப்பு அதிகம். அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம்…”  என்றார்.

மேலும் நடிகர் ‘ஜூனியர்’ பாலையா, பி.ஆர்.ஓ. சங்கத்தின் செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பி.ஆர்.ஓ. சங்கத்தின் தலைவரான விஜய முரளி ஆகியோரும் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.

விழாவின் இறுதியில், ‘காதல் அம்பு’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது.




error: Content is protected !!