“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்

“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்

இயக்குநர் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’, திரைப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது.

இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “அயன்’, ‘மாற்றான்’ ஆகியப் படங்களுக்குப் பிறகு இயக்குநர் கே.வி.ஆனந்த்தின் இயக்கத்தில் 3-வது தடவையாக இந்தக் ‘காப்பான்’ படத்தில் நடித்துள்ளேன்.

எனக்கு தனி மனிதனின் வளர்ச்சி பற்றிய சுய முன்னேற்ற கதைகள் மிகவும் பிடிக்கும். சமூகத்தில் நடந்துகொண்டு இருக்கும் இதுவரை பதிவு செய்யாத களம் கிடைத்தால் உடனே ஒப்புக் கொள்வேன். அப்படி அமைந்ததுதான் இந்தக் ‘காப்பான்’ திரைப்படம்.

kappaan-press meet-stills-2

இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஹீரோதான். எல்லோருமே நமக்குத் தேவையானதைக் கற்றுக் கொண்டுதான் மேலே வருகிறோம். அப்படி சமூகத்துக்கு அதிகம் தெரியாத ஒரு பணியில் இருப்பவர்களை பற்றிய கதைதான் இந்தக் ‘காப்பான்’ திரைப்படம்.

விவசாயம், மற்றும் அரசியலை பின்னணியாக வைத்து இத்திரைப்படம் தயாராகி உள்ளது. தேசத்தின் முக்கியத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிற எஸ்.பி.ஜி., என்.எஸ்.ஜியை மையப்படுத்திய படம் இது.

படத்தில் நான் கமாண்டோ கதாபாத்திரத்தில் வருகிறேன். நமது கமாண்டோ படை வீரர்களின் உண்மையான உழைப்பை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம்.

டில்லியில் 2 ஆயிரம் ஏக்கரில் உள்ள என்.எஸ்.ஜி. தலைமை அலுவலகத்தில் சிறப்பு அனுமதி வாங்கி 3 நாட்கள் அங்கு தங்கி கமாண்டோ கதாபாத்திரத்துக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டேன். இந்தக் ‘காப்பான்’ படத்திற்காக நிறைய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

image (95)

‘காப்பான்’ இசை வெளீயீட்டு நிகழ்ச்சியில் ரஜினி ஸார் என்னிடம் ‘இது எத்தனையாவது படம்..?’ என்று கேட்டார். ‘37’ என்று சொன்னதும் ‘37-தானா..?’ என்று கேட்டார். ‘முன்பு எல்லாம் ஒரே ஆண்டில் ஒரே நடிகர் 20, 25 படங்களில் நடிப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை’ என சொன்னார்.

என் படத்தில் அரசியல் இருக்கலாம். ஆனால், எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்குத் துளிகூட கிடையாது.

இப்போதெல்லாம் தமிழ்ச் சினிமாவில் குழந்தைகள், பெண்களை மையமாக வைத்து தயாராகும் படங்கள் குறைவாக உள்ளன. எனவேதான் குழந்தைகள் படங்களை தயாரிக்கிறேன். நானும் ஜோதிகாவும் விரைவில் புதிய படத்தில் இணைந்து நடிப்போம்.

14 வருடங்களாக அகரம் கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். கல்வி பற்றிய ஒரு தெளிவு எனக்குள் இருப்பதால்தான் புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்தேன். கல்வி முறை பற்றிய எனது கருத்து 14, 15 ஆண்டுகளாக நான் தினம், தினம் பார்த்து அனுபவித்ததைதான் பேசினேன்.

kappaan-press meet-stills-1

நான் பேசியதில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் எனது கருத்து என் நேரடி அனுபவத்தில் இருந்து வந்தது. ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் மாணவர்களை பார்க்கிறோம். அவர்கள் எந்த சூழலில் இருந்து வருகிறார்கள் என்பது தெரியும். இந்த விஷயங்கள் வந்தால் பாதிக்கப்படுவோம் என்ற பயமும், கவலையும் அவர்களிடம் இருக்கிறது.

நான் அவர்களுக்காக பேச வேண்டிய இடத்தில் இருந்தும் பேசவில்லை என்றால் எப்படி? எனவே அவர்களது குரலாகத்தான் நான் பேசினேன். கல்வியாளர்கள் எல்லோரும் பேசிக் கொண்டு இருந்ததைத்தான், அந்த மேடையிலேயே அவர்கள் பேசிய பின்னர் நான் பேசினேன்.

நான் வெளிச்சத்தில் இருப்பதால் அது மக்களிடம் உடனேயே போய் சேர்ந்தது. தீமை நடக்கிறது என்று தெரிந்தும்கூட அதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதும் தீமைதான். கல்விக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அது எனது வீட்டில் நடப்பதுதான். அதற்காக நிச்சயம் குரல் கொடுப்பேன்.

சமீபத்தில் சென்னையில் நம் அனைவருக்கும் கவலையளிக்கும்விதமாக ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்னுடைய ரசிகர்கள், இரத்த தானம் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் செய்து வருவதை கவனித்து வருகிறேன்.

படம் வெளியாகும்போது கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரசிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். பேனர்கள் வைத்துதான் என்னை கவனிக்க வைக்க வேண்டும் என்பதில்லை. ‘பேனர் வைக்க வேண்டாம்’ என நான் அடிக்கடி எனது ரசிகர்களிடத்தில் கூறியிருக்கிறேன். இனிமேலும் அது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்…” என்று கேட்டுக் கொண்டார் நடிகர் சூர்யா.

‘காப்பான்’ படத்தில் நடித்துள்ள ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பிரேம், தலைவாசல் விஜய், கலை இயக்குநர், படத் தொகுப்பாளர் ஆண்டனி, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் இயக்குநர் கே.வி ஆனந்த் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
error: Content is protected !!