ரோம் திரைப்பட விழாவில் தனுஷின் ‘காக்கா முட்டை’ திரையிடப்படுகிறது..!

ரோம் திரைப்பட விழாவில் தனுஷின் ‘காக்கா முட்டை’ திரையிடப்படுகிறது..!

நடிகர் தனுஷும், இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'காக்கா முட்டை'. இந்தப் படம் ஏற்கெனவே டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது. இப்போது வரும் அக்டோபர் 16-ம் தேதியன்று இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறதாம்..

சத்தமேயில்லாமல் தனுஷும், வெற்றிமாறனும் கை கோர்த்து தயாரித்திருக்கும் இப்படம் பற்றி ஒரு சிறிய பத்திரிகை செய்தியைக்கூட சம்பந்தப்பட்டவர்கள் இதுவரையிலும் தெரிவிக்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்போ.. இசை வெளியீட்டு நிகழ்ச்சியோ நடத்தப்படவே இல்லை.. ஆனாலும் மாதம் ஒரு முறை இந்தப் படம் பற்றிய பேச்சு மட்டுமே கோடம்பாக்கத்தில் பரவிக் கொண்டேயிருக்கிறது.

'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி' போன்ற படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறாராம். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க எம்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படம் குழந்தைகளுக்கான படம் என்கிறார்கள். இரு சிறுவர்கள் தங்களது அம்மா, பாட்டியுடன் வசித்து வருகிறார்கள். மிகவும் ஏழ்மையான குடும்பமாம். அப்போது இவர்களது அம்மா எங்கிருந்தோ ஒரு பழைய டிவியை வாங்கி வருகிறார். அந்த டிவியில் ஒரு நாள் பீட்சா பற்றிய விளம்பரம் வருகிறது. இதைப் பார்த்த அந்த சிறுவர்களுக்கு பீட்சாவை சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது.. வீட்டில் அம்மாவும், பாட்டியும் பணம் கொடுக்க மறுக்க.. மேலும் மேலும் பீட்சா மீதான ஆசை அவர்களுக்குள் கூடுகிறது. அவர்களது அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதையாம்..

படம் சென்ற வருடமே முழுமையாக முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருந்தும் இன்னமும் இங்கே திரையிடப்படும் சூழல் வரவில்லையாம்.. உலகம் முழுக்க சுற்றிவிட்டு கடைசியாகத்தான் தமிழகத்திற்குக் கொண்டு வருவார்கள் போலிருக்கிறது..!