ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார்..!

ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார்..!

நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறாராம்.. இன்றைய ஹாட் நியூஸ் இதுதான்..!

கடந்த 2 மாதங்களாகவே இயக்குநர் பாண்டிராஜ் அவரை நடிக்க அழைத்திருக்கிறார் என்றும், வருவாரா மாட்டாரா என்பது தெரியவில்லை என்பதும்தான் கடைசிக்கட்ட நிலவரமாக இருந்தது.. ஆனால் இன்றைக்கு ஜோகிதா திரும்பவும் அரிதாரம் பூச வருகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

கோடம்பாக்கத்தில் திரும்பவும் வருகை செய்வதை மிக அழுத்தமான ஒரு படத்தின் மூலமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார் ஜோதிகா. அதற்கான ஒரு அம்சமான திரைப்படமாக அவருக்குக் கிடைத்திருக்கிறது மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடிப்பில் இந்த வருடம் மே 17-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘How Old Are You’ திரைப்படம். 

இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்களாம்.. இதில்தான் ஜோ, மஞ்சு செய்த ஹீரோயின் கேரக்டரில் நடிக்கப் போகிறாராம்.. மலையாளத்தில் இந்தப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸே தமிழிலும் இயக்கப் போகிறாராம். தயாரிக்கப் போவது நடிகர் சூர்யாவின் 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம்தான்..!

1999-ம் வருடம் ‘வாலி’ படத்தில் அறிமுகமாகி தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமானார் ஜோதிகா.. அதே ஆண்டே தனது காதல் கணவர் சூர்யாவை தனது இரண்டாவது படமான ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்தில் சந்தித்தார். அன்று தொடங்கிய காதல் 2006-ம் வருடம் கல்யாணத்தில் முடிவடைந்தது.

jyothika-surya-1

தனது காந்தக் கண்களாலேயே நடிப்பைக் காட்டிவிடும் அழகு கொண்ட ஜோதிகாவின் நடிப்பு கேரியர் பாதியில் முடிந்தது தமிழ்ச் சினிமாவுலகத்துக்கே பேரிழப்புதான்.. அதிலும் ‘வாலி’, ‘குஷி’, ‘தெனாலி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘தூள்’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘சந்திரமுகி’, ‘மொழி’ ஆகிய படங்களில் ஜோதிகாவே தனியாக தெரிவார். அந்த அளவுக்கு அவரது நடிப்பு பேசப்பட்டது.

jyothika-chandramuki

ரஜினியின் ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினியைவிடவும் அதிகமாகப் பேசப்பட்டது ஜோதிகாவும், அவரது கண்களும்தான்.. அந்த கிளைமாக்ஸ் காட்சியில் ஜோ ஆடிய, புயல்வேக நடனம்தான் அந்தப் படத்தைத் தூக்கி நிறுத்தியது என்பது மறுக்க முடியாதது..

காதலர் சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்ற நிலையில் மீண்டும் திரைக்கு வருவாரா மாட்டாரா என்று அனைவருமே கேட்டுக் கொண்டிருந்தார்கள். நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் ஜோவை திரையில் பார்க்கலாம் என்று சூர்யாவே சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்போது மிகச் சரியான ஒரு படத்தில், சரியான ஒரு வேடத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்குகிறார் ஜோ..

வெல்டன் ஜோ… அண்ட் வெல்கம்..!




error: Content is protected !!