இந்தியப் பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள ‘ஜூவாலை’ திரைப்படம்

இந்தியப் பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள ‘ஜூவாலை’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள முதல் தமிழ்த் திரைப்படம் ‘ஜூவாலை’. 

இந்த ‘ஜூவாலை’ படத்தை தயாரிப்பாளர் மனுஷா தயாரிக்கிறார். நாயகனாக ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து படத்தை இயக்குகிறார்.

இயக்குநர் ரஹ்மான் ஜிப்ரீல்,  இயக்குநர்கள் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 

இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான மைக்முஸ் சாம்ப் ஆழ் கடல் காட்சிகளைப் படம் பிடித்து வருகிறார்.. இவர் லண்டனைச் சேர்ந்தவர். ‘பிரின்ஸ் ஆஃப் த சிட்டி’, ‘பைலட் கஃபே’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக இந்தத் தமிழ்ப் படத்திற்கு பணியாற்றுகிறார்.. 

தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார் நாயகனும், இயக்குநருமான ரஹ்மான் ஜிப்ரீல். 

இந்தப் படம் பற்றி இயக்குநர் ரஹ்மான் ஜிப்ரீல் பேசும்போது, “இந்தப் படத்தில் கடல் என்ற கதைக் களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்து அடங்கியுள்ளது.

நமக்கான வாழ்வாதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உடல், கடல் மாதிரி இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கும் உணர்வுகள்  நன்மை, தீமை அடங்கிய ஜூவாலையை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.

நமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும்போது அங்கு பழி வாங்கும் உணர்வு ஜூவாலையாக நமக்குள் பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது.

காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான். நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது.  அதில் பழி வாங்குதலும் ஒரு ஜூவாலைதான்.

ஹீரோ தனது வாழ்விடத்தின் பழி வாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான். அது கடல் என்ற கதைக் களத்தில் வெளிப்படுகிறது…” என்றார் இயக்குநர்  ரஹமான்.

படம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறு, சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது.




error: Content is protected !!