ராஜூ முருகன் இயக்கியிருக்கும் அரசியல் நையாண்டி படம் ‘ஜோக்கர்’

ராஜூ முருகன் இயக்கியிருக்கும் அரசியல் நையாண்டி படம் ‘ஜோக்கர்’

‘குக்கூ’ எனும் மாபெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘ஜோக்கர்’.

IMG_0084

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதியம் வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்தப் படத்தில் ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் பிரபலமான குரு சோமசுந்தரம் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், காயத்ரி கிருஷ்ணா, ரம்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுகபாரதி எழுதிய  பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்தில் பாடல்களைப் பாடிய பாடகர்களை அறிமுகப்படுத்தினார்.

அவர் பேசும்போது, “இந்தப் படத்தின் பாடல்கள் வெற்றி பெறுவதற்கு கவிஞர் யுகபாரதியின் பாடல் வரிகள்தான் முக்கிய காரணம். சினிமாவை மிகவும் விரும்பி தயாரிக்கக் கூடிய தயாரிப்பாளர்களில் ட்ரீம் வாரியர்ஸ் பிரபு சாரும் ஒருவர். இந்தப் படம் நிச்சயம் வெற்றியைப் பெறும்..” என்றார்.

IMG_9867

தயாரிப்பாளர் S.R.பிரபு பேசும்போது, “சகுனி’ படத்தைத் தொடர்ந்து நாங்கள் தயாரிக்கும் அடுத்த படம் இதுதான். இந்தக் கதையை படித்த பிறகு கண்டிப்பாக நாம் இதை தயாரிக்க வேண்டும் என்றே எனக்குள் தோன்றியது. படத்தின் ஒளிப்பதிவிற்காக நாங்கள் செழியன் சாரைத் தொடர்பு கொண்ட போது, மிக மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்.

இயக்குநர் ராஜூ முருகன், நடிகர் குரு சோமசுந்தரத்தினை முதலில் வேறு கதாபாத்திரத்திற்குத்தான் முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அவருடன் தொடர்ந்து பணியாற்றும்போதுதான் அவருடைய திறமையைத் தெரிந்து கொண்டு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தினை அவருக்குக் கொடுத்தார். 

எங்களுடைய நிறுவனத்திற்கு இந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன்..” என்றார்.

பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி பேசும்போது, “என்னங்க சார் உங்க சட்டம்’ மாதிரியான பாடல் எழுத 15 வருடங்கள் காத்திருந்தேன். ஷான் ரோல்டனின் இசைக்கு மட்டுமல்ல, பாடல் வரிகளுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். ‘சூது கவ்வும்’ படத்தில் வரும் ‘எல்லாம் கடந்து போகுமடா’ பாடல் வரிகளில் என்னை பிரமிக்க வைத்தவர் அவர். ஒரு திரைப்படம் உருவாக பணம் மட்டுமே போதாது. தைரியம் அதை விட முக்கியம். அந்த வரிசையில் ‘ஜோக்கர்’ குறிப்பிடத்தக்க ஒரு படம்..” என்றார்.

IMG_9851

நடிகர் குரு சோமசுந்தரம் பேசும்போது, “இந்த ‘ஜோக்கர்’ படத்தின் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகியுள்ளன. பாடலாசிரியர் யுகபாரதியின் வரிகளில், ஷான் ரோல்டனின் இசையில் வந்துள்ள பாடல்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.  

என்னிடம் சில பேர்  கேட்டார்கள், ‘என்ன சார் முதல் படம் ஹீரோவா பண்றீங்க, அதுவும் அரசியல் படமா?’ என்று. இது வெறும் அரசியல் பற்றிய படம் மட்டுமல்ல. சினிமா என்பது இயக்குனர்களின் மீடியம். அவ்ர்கள் நிச்சயமாக நல்ல படங்களைத்தான் தருவார்கள். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு ‘அல்வா’ சாப்பிடுவது போல அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் இயக்குனரிடமும், ஒளிப்பதிவாளரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இருவரும் வெளிப்புறப் படப்பிடிப்பு நேரங்களில், மக்கள் கூட்டங்களுக்கிடையே மிகவும் பொறுமையாக மக்களை அனுசரித்து படப்பிடிப்பினை நடத்தினார்கள்…” என்றார்.

IMG_0113

நடிகை காயத்ரி கிருஷ்ணா பேசும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலை’ என்னுடைய முதல் படம். நான் இந்தப் படத்தில் ‘இசை’ என்கிற கதாபத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நடிக்கும்போது இயக்குநர் ராஜூ முருகனிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.  ‘ஜோக்கர்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியாகி உள்ளது. நிச்சயமாக இந்தப் பாடல்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார்.

IMG_4280

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “ஷான் ரோல்டன் மற்றும் பிரதீப் ஆகிய இருவர்தான் என்னுடைய குருமார்கள். உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஷான் ரோல்டனும் ஒருவர். இந்த ‘ஜோக்கர்’  படத்தில் அப்படி ஒரு அற்புதமான இசையை வெளிப்படுத்தியுள்ளார். சரியான விதத்தில் கண்டறியப்பட்டால் ஷான் ரோல்டன் உலகின் தலைசிறந்த, கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக நிச்சயமாக இருப்பார்…” என்றார்.

​இயக்குநர் ராஜு முருகன் பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், படம் உருவாகிக் கொண்டிருக்கும்போது எந்தவித இடையூறும் செய்யாமல், என்னுடைய வேலையை என்னைச் செய்யவிட்டார்கள்.

IMG_9839

இந்தப் படம் ‘Block Buster’ பட வரிசையில் இருக்குமா என்று எனக்குத் தெரியாது. தமிழகத்தில் இருக்கும் 10 கோடி மக்களில் படிப்பறிவு இல்லாத 6 கோடி மக்களைக் குறி வைத்துத்தான் சமூகத்தின் ஆதிக்க சக்தியாக இருக்கும் அரசியல்வாதிகள், பெருவர்த்தக முதலாளிகள், திரையுலகினர் ஆகியோர் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.​ இவர்களால் அவர்களுக்காவது என்ன என்பதைத்தான் இந்தப் படத்தின் மூலம் சொல்லியிருக்கிறேன்..” என்றார்.

IMG_9900

இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “ஜோக்கர்’ மாதிரியான கதைக் களம் உள்ள படங்களைக் கவனமாகக் கையாள வேண்டும். இந்த மாதிரியான கதையம்சம் உள்ள படத்தினைத் தயாரிக்க, தயாரிப்பாளருக்கு ஒரு துணிச்சல் வேண்டும். தயாரிப்பாளர் பிரபுவுக்கு என் பாராட்டுக்கள். நடிகர்  சோமசுந்தரத்தினை நடிப்பினை ஒரு நாடகத்தில் பார்த்து பிரமித்துப் போனேன். இரட்டை வேடங்களில் அவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார். அவரை இந்தப் படத்தின் கதாநாயகனாகப் பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..” என்றார்.

IMG_9885

இயக்குநர் பாலா பேசும்போது, “இந்தப் படத்தினை முதலில் நான்தான் தயாரித்திருக்க வேண்டும். S.R. பிரபு என்னை விட சிறந்த தயாரிப்பாளர். அவர் முந்திக் கொண்டார். படம் நிச்சயமாக வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..” என்றார்.