‘ஜோக்கர்’ – தமிழக அரசியல் சூழலை வெளிப்படுத்தும் திரைப்படம்

‘ஜோக்கர்’ – தமிழக அரசியல் சூழலை வெளிப்படுத்தும் திரைப்படம்

தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே வெளியாகப் போகிறது என்று பேச்சு எழுந்து, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜோக்கர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ல் வெளியாக உள்ளது.

‘குக்கூ’ படத்தை இயக்கிய பத்திரிகையாளர் ராஜு முருகனின் அடுத்தப் படம் இது என்பதால் இந்தப் படத்திற்கு இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.

IMG_1755

இந்தப் படத்தில் ‘ஆரண்யா காண்டம்’ படத்தில் அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் சோமு என்கிற சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் பிரபல நாடகக் கலைஞரும், இயக்குநருமான மு.ராமசாமியும் இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். காயத்ரி கிருஷ்ணன், ரம்யா என்ற இரண்டு அறிமுக நாயகிகள் இதில் நடித்திருக்கிறார்கள். பிரபல எழுத்தாளரும், பதிப்பாளருமான பவா செல்லத்துரையும் இதில் நடித்திருக்கிறார்.

IMG_1753

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. திரையிட்டுக் காட்டப்பட்ட காட்சிகளைப் பார்த்தபோது தற்போதைய தமிழகத்தின் அரசியல் களத்தை முழுவதுமாக கொத்து புரோட்டா போட்டிருப்பது போல தெரிகிறது.

‘என்னங்கடா உங்க சட்டம்’ என்கிற பாடல் காட்சியில் இன்றைய அரசியல், ஆளுபவர்களின் அலட்சியம்.. நிர்வாகத் திறமையின்மை. போலியான ஜனநாயகம், அரசியல் கூத்துக்கள், அரசியல்வாதிகளின் அடாவடிகள் என்று பலதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

IMG_1754

காதலித்து திருமணம் முடித்த நாயகிக்காக தனது குடிசை வீட்டுக்கருகிலேயே ஒரு கக்கூஸை கட்டுகிறார் சோமு. ஆனால் அது அரசிடம் முறைப்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்டது என்று கூறி அதிகாரிகள் இடிக்கச் சொல்ல.. அது தொடர்பாக எழும் பிரச்சினையில் இன்றைய ஆளும் அரசுகளின் அவலட்சணத்தை உரித்தெடுத்திருக்கிறார் இயக்குநர் என்று சொல்கிறார்கள்.

இயக்குநர் ராஜுமுருகன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளராகவும் இருப்பதால் பல நிஜமான சம்பவங்களை தொகுத்து அதன் அடிப்படையில் நாட்டுப் பற்றுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

IMG_2178

விழாவில் நடிகை காயதிரி கிருஷ்ணன் பேசும்போது, "படத்துல என்னோட கேரக்டர் ரொம்பவும் போல்டான கிராமத்து பெண் கேரக்டர். பொதுவா கிராமத்து பெண்கள் என்றால் போராட்டம் தைரியம் இல்லாதவர்களாகத்தான் காண்பிப்பார்கள். ஆனால் என்னுடைய கதாப்பாத்திரம் அதை பிரேக் பண்ணி உள்ளது.." என்றார்.

IMG_2202

கலை இயக்குநர் சதீஷ் பேசும்போது, "படம் மொத்தமுமே நகரம் மற்றும் கிராமத்தில் நடக்கின்ற கதை. அதுவும் தர்மபுரி மாவட்டத்திலேயே அதிகமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் வேலை செய்வதற்கு சிரமம் இல்லாமல் இருந்தது. அங்கே அரசு அலுவலகங்கள் சம்பந்தமான செட்டுகள் நிறைய உள்ளது. ஒரு ஒயின்ஷாப் செட் ஒன்னு போட்டோம்.

ஒயின்ஷாப் செட் போட்டதும், உடனே ஒருத்தர் வந்து ஒரு குவாட்டர் பாட்டில் கேட்டார். 'இது படப்பிடிப்பிற்காக போடாப்பட்ட செட்.. விற்பனைக்கு இல்லை'ன்னு சொன்னோம். உடனே, 'இருந்துட்டு போகட்டும்; அவங்களுக்கு மட்டும்தான் குடுப்பியா, நான் மட்டும் என்ன ஒசிலையா கேக்குறேன். குடு' என கடைசிவரை சொல்ல வந்ததை புரிந்து கொள்ளாமல் எங்களை சிரிக்க வைத்தார். இது போல் நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நடந்தன.." என்றார்.

IMG_2124

எழுத்தாளர் பாவா செல்லத்துரை பேசும்போது, "இந்தப் படம் மட்டுமே தருமபுரி மண் சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சினிமாவில் இதுவரையிலும் அதிக முறை டெல்டா ஏரியாவை காட்டியுள்ளனர். ஆனால் தர்மபுரியை யாரும் காட்ட முயலவில்லை. ஆனால் இந்த படத்தில் காட்டியுள்ளனர்.

ஒரு பெண்ணின் தலையில் வரும் வேப்பெண்ணை வாடையைகூட மிகவும் இயற்கையாக காட்டி உள்ளார். தர்மபுரி மாவட்ட மக்களின் பற்களில் ஒரு மஞ்சள் கரை நிச்சயமாக இருக்கும். இது அந்த ஊர் தண்ணியை குடிப்பதினால் வந்த வேதிவினை. அதைக்கூட இயக்குநர் விட்டுவைக்கவில்லை. இது உண்மையிலேயே ஒரு உலகத் தரம் வாய்ந்த படம்.." என கூறினார்.

IMG_2177

நடிகை ரம்யா பாண்டியன் பேசும்போது, "நான் புதுமுகமாக இருந்தாலும் இயக்குநர் இப்படி நடி, அப்படி நடி என என்னிடம் எதுவுமே கூறவில்லை. ரொம்ப சுதந்திரம் குடுத்து நீங்களே இயல்பாக நடியுங்கள் என்றார். அதனாலேயே என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது.." என்றார்.

நாடகக் கலைஞரான மு.ராமசாமி மிகவும் கண்கலங்கி உணர்ச்சியுடன் பேசினார். "1990-களில் இருந்தே நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை நான் எந்த படத்தையும் பார்த்து பெருமிதம் கொண்டதில்லை. இந்த படத்தை என் படமாக பார்க்கிறேன். நான் என்னவெல்லாம் வெளியில் பேச நினைத்தேனோ, அதையெல்லாம் எல்லாம் இந்தப் படத்தின் மூலம் பேசியுள்ளேன். இது என்னுடைய படம் போல் உணரவைத்த ராஜு முருகனுக்கு நன்றி." என்றார் உணர்ச்சிவசப்பட்டவராய்..!

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும்போது, "படத்துல லைவ் மியூசிக்தான் போட்டுள்ளோம். சவுண்ட் மிக்சிங்  செய்யவில்லை. இந்த மாதிரி ரியல் கேரக்டர்கள் நடிச்ச படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும்.." என்றார்.

raju murugan

இயக்குநர் ராஜு முருகன் பேசும்போது, "இப்போது சமூக வலைத்தளங்களில் தைரியமாக அரசியல் பேசும் அளவிற்கு மக்கள் முன்னேறியுள்ளனர். ஆனால் சினிமாவில் மட்டும் அந்த தைரியம் யாருக்கும் வரவில்லை. ஏன் திரையுலகில் மட்டும் அரசியல் நுழையவில்லை என்ற கேள்வி எனக்குள் எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அதனால்தான் இப்படியொரு படத்தை தைரியமாக எடுக்க வேண்டும் என்று நினைத்து இந்த ஸ்கிரிப்ட்டை தயார் செய்தேன். மொதல்ல சென்சார் கிடைக்காதுன்னுதான் நினைச்சோம். ஆனால், நாங்கள் நினைத்ததுபோல எந்த பிரச்சனையும் வரவில்லை. ‘யு’ சர்டிபிகேட் கிடைச்சது. கெட்ட வார்த்தைகள் மற்றும் வன்முறை காட்சிக்கு மட்டும் ‘கட்’ கொடுத்தனர். எல்லோருமே அரசியல் பேசணும் என்கிற கருத்தை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசியல் கட்சிகள் எதுவும் எங்களை மிரட்டவில்லை. இந்தப் படம் தேர்தல் சமயத்தில் வருவதைவிட, சுதந்திர தினத்தில் வருவது இன்னும் பொருத்தமாக இருக்கிறது.." என்றார்.