full screen background image

ரஜினிக்கு ஜெயலலிதா எழுதிய நன்றி கடிதம்..!

ரஜினிக்கு ஜெயலலிதா எழுதிய நன்றி கடிதம்..!

‘அடுத்தத் தமிழக முதல்வர்’ என்று பா.ஜ.க.வால் முன் வைக்கப்பட்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, நேற்று திடீரென்று தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு கடிதம் அனுப்பியதைக் கண்டு அவர்களே கொஞ்சம் வருத்தப்பட்டுத்தான் போயிருக்கிறார்கள்.

ரஜினி ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் “நீங்கள் மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு நல்ல நேரம் அமைவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்களுக்கு ஆரோக்கியமான உடல் நலம், அமைதி கிடைக்க வாழ்த்துகிறேன்…’’ என்று ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வாழ்த்துக் கடிதத்தை உடனடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லெட்டர்பேடில் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கையொப்பம் பெற்று அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்ததில் இருந்தே இதன் முக்கியத்துவம் அரசியல் வட்டாரங்களுக்கு தெரிந்துவிட்டது..

அதோடு இல்லாமல் இன்றைக்கு ரஜினிக்கு பதில் கடிதத்தையும் எழுதியிருக்கிறார் ஜெயலலிதா.
அந்தக் கடிதத்தில், “நேற்று தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு என் மீதான கனிவு மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வாழவும், அனைத்து நடவடிக்கைகளிலும் வெற்றி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். எனது வாழ்த்துக்களை உங்களது குடும்பத்தினர் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெயலலிதா.

இந்த இரண்டு கடிதங்களிலுமே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய வார்த்தைகள் இரண்டு..!

ரஜினி எழுதியதில் “நீங்கள் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது..” என்ற வாசகம் அரசியல் பார்வையாளர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது..!

ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து திரையுலகத்தில் ஒரு சாரார் உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் நடத்தினார்கள். அதில் ரஜினி கலந்து கொள்ளவில்லையென்றாலும் அத்தீர்ப்பு குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் “மீண்டும் முதல்வராக வருவீர்கள்..” என்றோ.. மற்ற சினிமா பிரபலங்கள் சொன்னதுபோல “அரசியல் சதியால் தீர்ப்பினை பெற்றுள்ளீர்கள்..” என்றோ சொல்லாமல், வெறுமனே “போயஸ் தோட்டம் திரும்பியதில் தனக்கு மகிழ்ச்சி” என்று சொன்னதில் இருக்கும் சூட்சுமத்தை ஜெயலலிதாவே அறிவார்..!

அதனால்தான் ஜெயலலிதாவும் தன் பங்குக்கு “உங்களது அனைத்து நடவடிக்கைகளிலும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்..” என்று ரஜினிக்கும் பதில் சொல்லியிருக்கிறார்..

இதன் அர்த்தத்ததை ரஜினியும் உணர்வார் என்றே நம்புகிறோம்..!

Our Score