நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நடிக்கும் ‘ஜருகண்டி’ திரைப்படம்

நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நடிக்கும் ‘ஜருகண்டி’ திரைப்படம்

நடிகர் நிதின் சத்யாவின் ‘ஷ்வேத்’ நிறுவனமும்  பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா எண்ட்டெர்டெயின்மெண்ட்’  நிறுவனமும் இணைந்து ஒரு படத்தைத் தயாரித்து வருகின்றன.

நடிகர் ஜெய் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். அறிமுக நாயகியான ரேபா ஜான் இப்படத்தில் கதாநாயகி வேடத்தை ஏற்றுள்ளார். மற்றும் ரோபோ ஷங்கர், டேனி, ‘சிறுத்தை’ அமித், இளவரசு, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

போபோ சஷி இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். K.L.பிரவீன் படத் தொகுப்பில், அர்வியின்  ஒளிப்பதிவில், ரேமியனின் கலை இயக்கத்தில், அஜய் ராஜின் நடன இயக்கத்தில்  இப்படம் உருவாகவுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வந்த நாளிலிருந்தே அப்படத்தின் தலைப்பு குறித்து பரவலான எதிர்பார்ப்பும் யூகங்களும் உருவாகியிருந்தது.

இந்த யூகங்கள்  எல்லாத்தையும் உடைக்கும்விதமாக இப்படத்தின் தலைப்பு ‘ஜருகண்டி’ என்று தற்போது அறிவித்துள்ளார் தயாரிப்பாளரும், நடிகருமான நிதின் சத்யா. 

படத்தின் தலைப்பு குறித்து தயாரிப்பாளர்-நடிகர் நிதின் சத்யா பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநரான பிச்சுமணியும் நானும் இக்கதைக்கு பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் தலைப்பாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்தோம். அவ்வாறே ‘ஜருகண்டி’ முடிவானது. இது பிற மொழி வார்த்தையாக இருந்தாலும் நம் தமிழ்நாட்டிலும் இது பிரபலமான வார்த்தையாக இருந்து வருகிறது.

நாங்கள் ஷூட்டிங்கை மிகவும் எதிர்நோக்கியுள்ளோம், ஏனென்றால் இக்கதை அவ்வளவு சுவாரஸ்யமாகவும் அசத்தலாகவும் அமைந்துள்ளது. அருமையான படங்களில் வரிசையாக நடித்து, வளர்ந்து கொண்டே இருக்கும் என் நண்பன் ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் இந்த ‘ஜருகண்டி’ திரைப்படம் ஒரு முக்கிய படமாக இருக்கும். இயக்குநர் பிச்சுமணி எவ்வளவு திறமையானவர் என்பதை இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவார்கள்..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
error: Content is protected !!