கல்வித் துறையில் இருக்கும் அரசியலைப் பற்றிப் பேசும் படம் ‘இவன் தந்திரன்’..!

கல்வித் துறையில் இருக்கும் அரசியலைப் பற்றிப் பேசும் படம் ‘இவன் தந்திரன்’..!

Masala Pix நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஆர்.கண்ணன், M.K.R.P. Productions நிறுவனத்தின் தயாரிப்பாளரான எம்.கே.ராம்பிரசாத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘இவன் தந்திரன்’.

இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். பல விருதுகளை வாங்கிக் குவித்த கன்னட படமான ‘யூ டர்னில்’ நாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்துள்ளார். இதுதான் இவருக்கு முதல் தமிழ்ப் படமாகும். படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மக்கள் தொடர்பு – ஜான்சன், ஒளிப்பதிவு – பிரசன்னா குமார், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், விவேக், நடனம் – சிவசங்கர், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, கலை – பாப்பி, இணை தயாரிப்பு – எம்.கே.ராம் பிரசாத்,

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.கண்ணன் இந்தப் படத்தைத் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார். இது இவர் இயக்கும் ஆறாவது படமாகும்.

இந்த ‘இவன் தந்திரன்’ திரைப்படத்தில் நடித்தது குறித்து படத்தின் நாயகியான ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசுகையில், “நான் நடித்த ‘யூ டர்ன்’ திரைப்படம் வெளியான அந்த நேரத்தில் இயக்குநர் கண்ணன் அவர்களின் துணை இயக்குநர் ரஜத் என்னை இந்த ‘இவன் தந்திரன்’ படத்தில் நடிப்பது குறித்து தொடர்பு கொண்டு பேசினார்.

பின்னர் பெங்களூரில் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை கூறினார். அதன் பின் சென்னையில் ஸ்க்ரீன் டெஸ்டில் கலந்து கொண்டு 2 கடினமான காட்சிகளில் நடித்து காண்பித்து தேர்வு பெற்றேன்.

Shraddha Srinath (3)

எனக்கு தமிழில் முதல் படமே இயக்குநர் கண்ணன் ஸாரின் படமாகவே அமைந்தது எனக்குப் பெருமைக்குரிய ஒன்று. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் என்னை திரையில் ரசிகர்கள் பார்க்கும்போதும், ‘யூ டர்னில்’ நடித்த பெண்தானே இவர் என்று யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு இந்தப் படம் ஒரு நல்ல வாய்ப்பாக எனக்கு அமைந்திருக்கிறது.

இந்த ‘இவன் தந்திரன்’தான் ஒரு கதாநாயகியாக எனக்கு முதல் தமிழ் படம். எனக்கு படத்தில் இருந்த நீளமான வசனங்கள், உணர்வுபூர்வமான காட்சிகள் போன்றவையெல்லாம் ஒரு பெரிய சவாலாக இருந்தது.

இந்த ‘இவன் தந்திரன்’ படத்தில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரம்தான். ‘யூ டர்னில்’ நான் சிட்டியில் வாழும் இங்கிலீஷ் பேசும் பெண்ணாக நடித்தேன். ஆனால், இந்த ‘இவன் தந்திரனில்’ வரும் ஆஷா முற்றிலும் புதுமையான கதாபாத்திரம்.

actress shraddha srinath

இந்தப் படத்தில் தமிழ் பேசும் லோக்கல் பெண்ணாக நடித்து நிறைய கற்றுக் கொண்டேன். இயக்குநர் கண்ணனின் படத்தை பொறுத்தவரை பெண்களை அவர் மிக அழகாகவும், போல்டாகவும் காட்டுவார். இந்த படத்திலும் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரமாகத்தான் இருக்கும்.

படத்தில் நான் கடினமாக உழைத்து, கஷ்டப்பட்டு முன்னேறிய மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். இங்கே உள்ள கல்வி முறையும், அதில் இருக்கும் அரசியலும் என்னை எப்படி பாதிக்கிறது என்பது போல் கதை நகரும்.

படத்தின் நாயகனான கௌதம் கார்த்திக் மிகச் சிறந்த கோ ஆர்டிஸ்ட். அவர் மிகவும் அமைதியானவர். நல்ல மனிதர். எளிதில் யாருடனும் பழகிவிட மாட்டார். அப்படி பழகிவிட்டால், உண்மையான நண்பராக மற்றும் மிகவும் கேரிங்காக இருப்பார்.

கௌதம் நான் நன்றாக நடித்தால் என்னை பாராட்டுவார். அப்படி அவர் பாராட்டும்போது அடுத்தடுத்து வரும் காட்சிகளில் நன்றாக நடிக்க வேண்டும் என்று நமக்கே தோன்றும். ஊக்கம் அளிக்கும் ஒன்றாகவும் இருக்கும்.

R.J. பாலாஜியை ‘காற்று வெளியிடை’ படப்பிடிப்பின்போதே சந்தித்திருக்கிறேன். தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த சந்தேகமாக இருந்தாலும் பாலாஜியிடம்தான் நான் கேட்பேன். என்னுடைய முதல் படத்தில் இருந்து அவரை நன்றாக தெரியும் என்பதால், அவரிடம் தமிழ் சினிமாவை பற்றி நிறைய கேட்டு தெரிந்து கொள்வேன்.

இயக்குநர் கண்ணன் எப்போதும் இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடியவர். இப்போது ஒரு காட்சி முடிந்து எனக்கு பிரேக் கிடைக்கிறது என்றால் எனக்கு மட்டும்தான் அது பிரேக்காக இருக்கும். அடுத்த நிமிடம், இயக்குநர் கண்ணன் வேறு நடிகர்களை வைத்து மற்ற காட்சிகளை படமாக்கிக் கொண்டிருப்பார். இதுதான் அவருடைய தனித்தன்மை. உழைப்பு என்றால் அது இயக்குநர் கண்ணன்தான்.

இந்த ‘இவன் தந்திரன்’ திரைப்படம் கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடிக்கும் ஒரு படமாக இருக்கும். ஏற்கனவே படத்தின் முன்னோட்டங்கள் வெளியாகி யுடியுபில் மாபெரும் சாதனை படைத்துள்ளது…” என்றார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

‘இவன் தந்திரன்’ படம் சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் வாங்கியுள்ளது. வரும் ஜூன் 30-ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தை Creative Entertainers Distributors நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.