‘இசை ஞானி’ இளையராஜாவின் இசைக் கச்சேரி – முழு ரிப்போர்ட்..!

‘இசை ஞானி’ இளையராஜாவின் இசைக் கச்சேரி – முழு ரிப்போர்ட்..!

‘இசை ஞானி’யின் 76-வது பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி வருவதையொட்டி அதற்கு முதல் நாளான நேற்று மாலை சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் இருக்கும் ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் ‘இசை ஞானி’யின் பாடல் கச்சேரி நடைபெற்றது.

இந்த இசை நிகழ்வை ‘ஐஸ்வர்யா ஜனனி’ நிறுவனத்தின் தலைமையில் ‘தினமணி’ நாளேடு உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து நடத்தின.

விழா நடந்த ஈ.வி.பி. பிலிம் சிட்டி அமைந்திருக்கும் சென்னை-வேலூர் சாலையில் நேற்று மாலையில் இருந்தே  கடுமையான டிராபிக் ஜாம். “எல்லா சாலைகளும் ரோம் நோக்கியே செல்கின்றன” என்பதைப் போல சென்னையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இசை ரசிகர்கள் கார்களில் வருகை புரிந்தனர்.

ilayaraja-76-concert-1

போக்குவரத்து போலீஸார் சாலையின் இருமருங்கிலும் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும், சாரை, சாரையாக வாகனங்கள் வந்து கொண்டேயிருக்க.. அந்தப் பகுதியே மிகவும் பரபரப்பாக இருந்தது.

ஈ.வி.பி. பிலிம் சிட்டியின் உள்ளே சென்ற கார்கள் மூன்று இடங்களில் மறிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டு பார்க்கிங்கிற்காக பிரித்து அனுப்பப்பட்டன. ஆனாலும் சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் வந்த வாகனங்கள் மட்டும் அலங்கார வளைவு அருகில்வரைக்கும் அனுமதிக்கப்பட்டன.

அலங்கார வளைவுகளின் அருகில் ‘இசை ஞானி’ இசையமைத்த படங்களின் புகைப்படங்களை போஸ்டர்களையும், புகைப்படங்களையும் இருபுறமும் ஒட்டி அழகுபடுத்தியிருந்தார்கள். ‘இசை ஞானி’யை வரவேற்க நாதஸ்வரக் கலைஞர்களும், தவில் வித்வான்களும் 6 மணியில் இருந்தே கால் கடுக்க நின்று கொண்டிருந்தனர்.

அந்தப் பகுதி டிராபிக்கில் சிக்கி ரசிகர்களே விழி பிதுங்கிக் கொண்டிருக்க.. ‘இசை ஞானி’யும் இதில் மாட்டிக் கொண்டார். 6 மணிக்கே வருவதாகச் சொன்னவரால் மைதானத்துக்கு 7.15 மணிக்குத்தான் வர முடிந்தது.

இதற்கிடையில் நிகழ்ச்சியை ஏற்பாடு ‘ஐஸ்வர்யா ஜனனி’ நிறுவனத்தைச் சேர்ந்த ஜனனி பாலு தன் குடும்பத்தினரோடு மேடையேறி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

ilayaraja-76-concert-4

நாதஸ்வரக் கலைஞர்கள் மற்றும் தவில் வித்வான்களின் வாத்திய இசையோடு மைதானத்துக்குள் கூட்டத்தோடு கூட்டமாக அழைத்து வரப்பட்ட ‘இசை ஞானி’யை வீடியோக்களைவிடவும் கையடக்க செல்போனில் படம் எடுத்தவர்கள்தான் அதிகம்.

வந்த கையோடு அப்படியே கேரவன் வேனுக்குள் போய்விட்டார் இளையராஜா. நாதஸ்வரக் கலைஞர்களும், தவில் வித்வான்களும் அப்படியே மேடையேறி இளையராஜாவின் பல பாடல்களை வாசித்துக் காண்பித்துவிட்டுக் கிளம்பினார்கள்.

பத்து நிமிட நேரத்திற்குள்ளாக ஹங்கேரியில் இருந்து வந்திருந்த வாத்தியக் கருவி இசைக்கும் கலைஞர்கள் அனைவரும் மேடையேறி தயாராக காத்திருந்தார்கள். கீழே இறங்கிச் சென்ற நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களை மீண்டும் மேடையேற்றி ‘ஜனனி ஜனனி’யை வாசிக்க வைத்தனர்.

நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் மேடையிறங்கிய பிறகு ஏ.வி. ஒன்று திரையிடப்பட்டது. ராஜாவின் குரலில் ஒலித்த அந்த ஏ.வி.யில் தன் வாழ்க்கையில் தன்னால் மறக்க முடியாத பலரையும் பற்றி புகைப்படத்துடன் குறிப்பிட்டுப் பேசினார் இளையராஜா.

ilayaraja-76-concert-3

அவருடைய தாய், தந்தையர், சகோதரி கமலம், அண்ணன்களான பாவலர் வரதராஜன், ஆர்.டி.பாஸ்கர், குருநாதர்களான டி.வி.சந்தானகோபாலன், தன்ராஜ் மாஸ்டர், ஜி.கே.வெங்கடேஷ், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், திரையுலகத்தில் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரக் பஞ்சு அருணாச்சலம், தான் பெரிதும் ஆராதிக்கும் ரமண மகிரிஷி என்று அனைவரைக்கும் மரியாதை செலுத்தினார் இளையராஜா.

இதன் பின்னர்தான் மேடையில் பிரசன்னமானார் இசைஞானி இளையராஜா.  

முதல் பாடலாக வழக்கம்போல ‘ஜனனி ஜனனி’ ஒலித்தது. இதன் பின்பு ‘நான் கடவுள்’ படத்தில் இடம் பெற்ற ‘ஓம் ஸ்வோகம்’ பாடலை குழுவினர் பாடினார்கள்.

இதையடுத்து ‘ஹேம் ராம்’ படத்தில் இடம் பெற்ற ‘ரகுபதி ராகவ ராஜாராமை’ பாடினார்கள். ‘நம்ம பாட்டை எப்பய்யா ஆரம்பிப்பாங்க?’ என்று யோசிப்பதற்குள்ளாக மனோ மைக்கைப் பிடித்துக் கொண்டு முன்னுக்கு வந்து நின்றார்.

எடுத்த எடுப்பிலேயே ‘இதயத்தை திருடாதே’ படத்தின் ‘ஓ ப்ரியா.. ப்ரியா’ பாடல். துள்ளியெழுந்து அமர்ந்தனர் இசை ரசிகர்கள்.. யார் கண் பட்டதோ தெரியவில்லை. பாடலின் இடையில் இளையராஜாவே “ஸ்டாப் ஸ்டாப்…” என்று சத்தமாகச் சொல்லி நிறுத்தச் சொன்னார்.

அனைவரும் அதிர்ச்சியாய் அவரைப் பார்க்க.. ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருக்குப் பின்புறமாக நின்று கொண்டிருந்த ஒரு செக்யூரிட்டியை இளையராஜா கையசைத்து “இங்க வா” என்றழைத்தார். தயங்கித் தயங்கி வந்த செக்யூரிட்டியிடம் “உனக்கு இங்க என்ன வேலை. ரொம்ப நேரமா மேடைல உக்காந்திருக்க.?” என்று ஆங்கிலத்தில் கோபமாக கேட்டார். அந்த செக்யூரிட்டியோ  மிகவும் பயந்து போய் “தண்ணி கொடுக்க வந்தேன்” என்றேன் என்றார் திக்கித் திணறி.

உடனேயே ரசிகர்களிடத்தில் திரும்பிய இளையராஜா.. “பாருங்க. இரண்டு மணி நேரமா இவங்க எல்லாம் உக்காந்திருக்காங்க.. இவரும் இரண்டு மணி நேரமா இங்கதான் இருக்காரு..

இங்க ஐநூறு ரூபா டிக்கெட் எடுத்தவங்களெல்லாம் பத்தாயிரம் ரூபா டிக்கெட்டுல உக்காந்திருக்கீங்க. இதுனால நிஜமாவே பத்தாயிரம் ரூபா டிக்கெட் வைச்சிருக்குறவங்களுக்கு உக்கார இடமில்லை. அவங்க என்ன செய்வாங்க..? என்னைத்தானே திட்டுவாங்க.. இதெல்லாம் நியாயமா..?

உங்களுக்காகத்தான் நான் கச்சேரி செஞ்சுக்கிட்டிருக்கோம். நான் எத்தனையோ கச்சேரி செஞ்சிருக்கேன்.  நான் வயசானவன்.. இந்த 75 வயசுல 5 மணி நேரம் இந்த மேடைல நின்னுக்கிட்டே கச்சேரி செய்யப் போறேன். உங்களால இப்படி மேடைல 5 மணி நேரம் தொடர்ந்து நிக்க முடியுமா..? நான் நிக்குறேன்ல..? யாருக்காக..? உங்களுக்காகத்தான..? என்னோட இசைதானே உங்களை வாழ வைக்குது. இப்படி என் வேலைல இடைஞ்சல் செஞ்சா எப்படி..?.” என்றார் கோபமாக.. மனோ பட்டென்று தன் கையில் இருந்த மைக்கில் அந்த செக்யூரிட்டியை மன்னிப்பு கேட்க வைத்து ராஜாவின் காலிலும் விழ வைத்து அனுப்பி வைத்தார்.

அப்படியும் கோபம் அடங்காத இளையராஜா, “இங்க பாட்டுக் கேட்கத்தான வந்தீங்க.. தண்ணியா முக்கியம்.. தண்ணி குடிக்கவா வந்தீங்க..?” என்றார் கோபமாக.  மனோ எதுவுமே பேச முடியாமல் பேசாமடந்தையாக மேடையில் பாவமாய் நின்று கொண்டிருந்தார்.

ராஜாவின் கோபம் தீர்ந்தவுடன், மீண்டும் விட்ட இடத்திலிருந்து பாடலின் இசை ஒலிக்கத் துவங்க… அதுவரையில் இருந்த இறுக்கம் தளர்ந்து கை தட்டல் ஒலிக்கத் துவங்கியது.

அடுத்து பாம்பே ஜெயஸ்ரீ வந்து ஒரு பாடலைப் பாடினார். இந்தப் பாடலைப் பாடிய பின்பு பாம்பே ஜெயஸ்ரீ முதன்முதலாக தன்னைச் சந்தித்தது எப்போது..? எப்படி அந்தப் பாடல் பதிவானது என்பதை பற்றியெல்லாம் ராஜாவே ஜெயஸ்ரீயிடம் கேட்டு சொல்ல வைத்தார்.

ilayaraja-spb-1

பின்னால் இருந்த 1000 ரூபாய் ரசிகர்கள்தான் முதன்முதலில் அடையாளம் கண்டு கொண்டு கரகோஷம் எழுப்ப.. என்னவோ ஏதோவென்று நினைத்து முன் வரிசை மகா புருஷர்கள் எட்டிப் பார்த்தபோதுதான் ‘பாடும் நிலா பாலு’வான எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடந்து வருவது தெரிந்தது.

ரசிகர்களின் கை தட்டலை எஸ்.பி.பி. இளையராஜாவுக்குக் காண்பிக்க.. அவர் பதிலுக்கு ரசிகர்கள் பக்கம் கை காட்டி ரசிக்க.. வெகு ஜோராக இருந்தது அந்த சில நிமிடங்கள்.

இளையராஜாவுக்கு மேடையிலேயே ரமண மகிரிஷியின் புகைப்படத்தை தனது பிறந்த நாள் பரிசாக அளித்தார் எஸ்.பி.பி. அந்த புகைப்படம் மேடையிலேயே முன் புறத்தில் கடைசிவரையிலும் வைக்கப்பட்டிருந்தது.

எஸ்.பி.பி. தனது முதல் பாடலாக ‘மடை திறந்து’ பாடலை பாடி அசத்தினார். அதில் வரும் புகழ் பெற்ற வரியான “புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே” என்னும்போது இளையராஜாவை நோக்கி விரல்களை நீட்டி அவரைப் பெருமைப்படுத்தினார் எஸ்.பி.பி.

ilayaraja-spb-2

இதற்கடுத்து இசை பற்றிய ஒரு பாடலை எஸ்.பி.பி., இளையராஜா இருவருமே இணைந்து பாடினார்கள். “இசை எங்கேயிருந்து வந்தது” என்று ஆரம்பித்த பேச்சு போகப் போக பெரிய பாடலாகவே ஆரம்பித்து “மரத்தில் இருந்து குதிச்சு வந்தனா” என்கிற சரணத்தை மையமாக வைத்து அந்தப் பாடல் அமைந்திருந்தது.(என்ன படம்.. தெரியவில்லை)

மீண்டும் 1000 டிக்கெட் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி முன் வரிசைக்காரர்களை எழுப்பிவிட எழுந்து நின்று பார்த்தபோது ‘கானக் குயிலான்’ கே.ஜே.ஜேசுதாஸ் வருகை தெரிந்தது.

வணக்கம் போட்ட கையோடு “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்று ஜேசுதாஸ் பாடத் துவங்க.. மொத்தக் கூட்டமும் உடன் சேர்ந்து பாடித் தீர்த்தது..!

ஜேசுதாஸ் உள்ளே போக அடுத்து வந்த பாடகியை மேடையில் நிற்க வைத்துவிட்டு, “இது என்னோட தாய் போன்ற பாட்டு” என்றார் இளையராஜா. தொடர்ந்தது “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” பாடல்.

இந்தப் பாடல் உருவானவிதத்தையும் தெரிவித்தார் இளையராஜா. “பஞ்சு அண்ணனிடம் இந்தப் பாடலை பற்றி முன்னாடியே சொன்னேன். ரிக்கார்டிங்கிற்கு சில நாட்கள் இருக்கும்போது தினமும் மெரீனா பீச்சில் வாக்கிங் போவேன். அப்படிப் போகும்போது எனக்குத்தானே இந்தப் பாடலை பாடிக்கிட்டே இருப்பேன். அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த கடல் அலைகள்கூட மாறியிருக்கும். நான் நடந்து போன தடத்தில் இருந்த மண் துகள்கள்கூட இப்போது காணாமல் போயிருக்கும். ஆனால் நான் இசைத்த இந்தப் பாடல் மட்டும் இப்போதுவரையிலும் மறக்காமல் இருக்கிறது..” என்றார் மகிழ்ச்சியோடு..!

தொடர்ந்து வந்த பவதாரணி துவக்கத்திலேயே இளையராஜாவை வாழ்த்தி ஒரு வாழ்த்துப் பா பாடினார். “லவ் யூ டாடி..” “வி லவ் யூ ராஜா…” என்று மாற்றி மாற்றிப் போட்டு பாடி முடித்தார். மகளின் வாழ்த்தை உவகையோடு ஏற்றுக் கொண்டார் தந்தையான ராஜா.

அடுத்து பவதாரணி கூட்டணி ‘கோழி கூவுது’ படத்தில் இருந்து ‘ஏதோ மோகம் ஏதோ தாகம்’ பாடலை பாடினார்கள்.

மீண்டும் பாம்பே ஜெயஸ்ரீ மேடைக்கு வந்து “நின்னைச் சரணடைந்தேன்” என்கிற பாடலைப் பாடினார். (இது என்ன படம்..?)

ilayaraja-usha udhoop

அடுத்து வங்கத்து மாமியாரான உஷா உதூப் கையில் கட்டுப் போட்ட நிலையில் இருந்தாலும் அதே துள்ளலுடன் மேடைக்கு வந்து நின்றார். வந்த வேகத்தில் பேசிக் கொண்டே போக.. “இந்த மேடையில் அதிகம் பேசினால் ரசிகர்களுக்குப் பிடிக்காது தெரியுமா..?” என்று சொல்லி அவரது பேச்சை கட் செய்ய முயற்சித்தார் ராஜா. ஆனாலும் விடாத உஷா உதூப் தான் பேச வேண்டியதையெல்லாம் பேசிவிட்டுத்தான் பாடலுக்கே வந்தார்.

அவர் பாடிய பாடல் அதிகம் பிரபலமாகாத பாடல். “மேலூரு ஒத்தக்கடை” என்று ஆரம்பித்தது அந்தப் பாடல். என்ன படம் என்றே தெரியவில்லை.  ஆனாலும் குரல் வளம் கணீர் என்று சுண்டி இழுத்தது.

மீண்டும் எஸ்.பி.பி. வந்து நிற்க இம்முறை ‘மெளன ராகம்’ படத்தின் ‘நிலாவே வா’ பாடல் ஒலித்தது. இந்தப் பாடலைப் பாடுவதற்கு முன்பாக இளையராஜாவும், எஸ்.பி.பி.யும் விசிலாலேயே சில வினாடிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அந்த விசில் சப்தத்தின் நிறைவாக.. தொடர்ச்சியாக அந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடத் துவங்க.. அடடா என்று சொல்ல வைத்தது அந்தக் கணம்.

அடுத்துத் துவங்கியது ‘ஓ பட்டர்பிளை’ பாடல். இந்தப் பாடலைப் பாடத் துவங்கியதில் இருந்தே எஸ்.பி.பி. செம ரொமான்ஸ் மூடில் இருந்தார். ராஜாவை மேடையிலேயே ‘போடா’, ‘வாடா’ என்றெல்லாம் எஸ்.பி.பி. அழைத்தது நன்கு தெரிந்தது.

ilayaraja-spb-3

இந்தப் பாடலில் இடையே ‘எனக்கா திறந்தாய் மனக் கதவை’ என்கிற வரியை பாடும்போது ராஜாவை நோக்கி கை நீட்டி பாடிய எஸ்.பி.பி. திரும்பவும் இரண்டாவது முறையாகவும் அதைப் பாடி கை தட்டல்களைக் கூட்டினார். இந்தப் பாடலுக்கு எவரோ ஒருவர் ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு வைக்க.. அதுவும் மிகச் சரியாக ராஜாவின் காதுகளில் விழுந்து தொலைத்துவிட்டது.

“இப்படி எல்லா பாட்டுக்கும் ஒன்ஸ்மோர் கேட்டுக்கிட்டேயிருந்தா நீங்க வீட்டுக்குப் போக மாட்டீங்க…” என்று கிண்டலடித்தார்.

அடுத்தது ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை ஜேசுதாஸ் வந்து பாடினார். வெண்தாடி வேந்தராக ஜேசுதாஸை மேடையில் பார்க்க ஒரு முனிவர் போலவே தோன்றினார்.

அண்ணன் கமல்ஹாசனின் வருகை சட்டென நிகழ்ந்தது. முன்பே வந்து அமர்ந்திருந்தது சில நொடி கிளிப்பிங்ஸில் பார்த்திருந்ததால் ஏக எதிர்பார்ப்பாக இருந்தது கூட்டம். எஸ்.பி.பி., ஜேசுதாஸூக்குக் கிடைக்காத கை தட்டல்கள் கமலுக்குக் கிடைத்தது மட்டும் உண்மை.

மேடையில் பேசத் துவங்கிய கமல் ‘ஹே ராம்’ படத்தின் ஒரு பாடல் உருவான கதையை விளக்கமாகச் சொன்னார். அந்தப் பாடல் காட்சியை திரையில் இசையில்லாமல் ஓட விட்டார்கள். பின்பு பாடலுடன் திரும்பவும் ஓட விட்டார்கள். எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு தான் இசையமைத்தவிதத்தை விளக்கிப் பேசினார் இளையராஜா.

அப்படியே ஓடிவிட நினைத்த கமல்ஹாசனை இழுத்துப் பிடித்து ‘விருமாண்டி’ படத்தின் ‘உன்னைவிட உசந்தது’ பாடலை பாட வைத்துவிட்டார் இளையராஜா. இந்தப் பாடல் உருவான விதத்தையும், பாடலுக்கு தான் எப்படி ஆசிரியரானேன் என்பதையும் கமல்ஹாசன் எடுத்துச் சொன்னார்.

spb-usha udhup-kamal

“கமலுக்கு இசை பற்றிய அறிவும், பாடலாசிரியராகவும் இருப்பதால் அவருக்கு இசைக் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து உறுப்பினர் கார்டு தரப்பட வேண்டும்…” என்று இசைக் கலைஞர்கள் சங்கத்தினருக்கு கோரிக்கை வைத்தார் இளையராஜா. இதை தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டு விடைபெற்றார் கமல்ஹாசன்.

இடையில் எஸ்.பி.பி. ஓடோடி வந்து இளையராஜாவிடம் ஜேசுதாஸ் காத்திருப்பதை சொல்லிவிட்டுப் போனார்.

அடுத்து பைஜாமா, நீள குர்தாவுடன் திடீரென்று பிரசன்னமானார் இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபன். அவர் வந்தவுடன் “வளவளவென்று இழுக்காமல் சுருக்கமாக பேசு” என்று ஒரு கட்டத்தில் இளையராஜாவே சொன்னதினால் பட்டென்று “ஒரு படத்திற்கு பின்னணி இசை எப்படி அமைப்பது என்பதை ராஜா ஸார் இப்போது செய்து காட்டுவார்” என்றார் பார்த்திபன்.

parthiban-ilayaraja

அதையடுத்து ‘மெளன ராகம்’ படத்தின் காட்சி திரையில் காட்டப்பட்டது. போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஜீப்பில் அழைத்துச் செல்லப்படும் வழியில் கார்த்திக் அவர்களிடமிருந்து தப்பித்து ரேவதியைப் பார்க்க ஓடி வரும் காட்சிதான் அது.

முதல் முறை பின்னணி இசையே இல்லாமல் ஓடிய அந்தக் காட்சி, அடுத்து பின்னணி இசையுடன் ஓடியபோதுதான் பெரும் ரசிப்புத் தன்மையை ஏற்படுத்தியது. அசத்தல்..!

தொடர்ந்து மேடைக்கு முந்த ஜேசுதாஸ் ‘கண்ணே கலைமானே’ பாட ஒட்டு மொத்தக் கூட்டமும் சேர்ந்து கொண்டு பாடியது. அந்த அமைதியை பாடலும், மேடையும் கொடுத்தன.

எஸ்.பி.பி. எழுந்து வரும்போதே நிச்சயமாக இந்தப் பாட்டுதான் என்று பெட் கட்டினார்கள் பலரும். இப்போது மேடையில் எஸ்.பி.பி., ஜேசுதாஸ், இளையராஜா என்று மூவேந்தர்கள் நிற்க.. ஜேசுதாஸ் “எஸ்.பி.பி., இளையராஜா இருவரையும் தன்னுடைய தம்பிமார்கள்” என்று சொல்லி பெருமைப்பட்டார். இளையராஜாவுக்கு ஜேசுதாஸ் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல.. “எனக்கு நாளை மறுநாள் பிறந்த நாள்” என்று எஸ்.பி.பி. சொல்லி அவரும் பிறந்த நாள் வாழ்த்தினை அட்வான்ஸாக பெற்றுக் கொண்டார்.ilayaraja-spb-jesudossஇளையராஜாவின் கையசைப்பில் ‘தளபதி’ படத்தின் ‘காட்டுக் குயிலு’ பாடலுக்கான இசை ஒலிக்கத் துவங்க.. அடுத்த 5 நிமிடங்கள் மைதானம் ஆட்டமாக ஆடியது.. பலரும் எழுந்து நின்று இசைக்கேற்ப கை, கால்களை அசைத்து ஆட.. இதையும் பார்த்து உற்சாகமாகவிட்டார் இளையராஜா.

இடையிடையே பாடல் வரிகளுக்கேற்ப வழக்கம்போல எஸ்.பி.பி.யும், ஜேசுதாஸும் பாசத்தைக் கொட்ட.. இளையராஜாவும் இதில் கலந்து கொள்ள.. செம அமர்க்களமாய் முடிவுற்றது இந்தப் பாடல்.

இந்தப் பாடலுக்குத்தான் ரசிகர்களின் ஒட்டு மொத்தக் கை தட்டல்கள் கிடைத்தன என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்தப் பாடல் ஒலித்தபோது ஹங்கேரி இசைக் கலைஞர்கள் மிகவும் பரவசத்துடன் இசையைக் கேட்டனர். இப்போதுதான் முதல்முறையாக இப்படியொரு அதிரடி இசையைக் கேட்கும் தோரணையில் இருந்தது அவர்களது முகம். இசையின் ஒவ்வொரு அசைவுக்கும் தங்களது தலையை அசைத்து, இந்தப் பாடலை விரும்பிக் கேட்பதுபோல டிரம்ஸ் வாசிப்பவரையே திரும்பித் திரும்பிப் பார்த்து ரசித்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர் செய்த நிறுவனங்களின் தலைவர்களெல்லாம் மேடைக்கு வந்து ராஜாவுக்கு சால்வையும், மாலையும், நினைவுப் பரிசும் கொடுத்து வாழ்த்தினார்கள்.

அவர்கள் மேடை இறங்கியவுடன்.. “இந்த நேரத்துல மூணு பாட்டை பாடியிருக்கலாம்ல…?” என்று கேஷூவலாக ராஜா கேட்க கூட்டம் கலகலத்தது.

தொடர்ந்து ‘சின்னக் கலைவாணர்’ விவேக் மேடையேறி ராஜாவை வழக்கம்போல புகழ்ந்து தள்ளினார். லேட்டஸ்ட் பேட்டியில் ராஜா சொன்ன “என் கோபத்தையெல்லாம் பொறுத்துக்குறீங்க பாருங்க…” என்பதை எடுத்துச் சொன்ன விவேக்.. “அதெல்லாம் எங்களுக்குத் தேவையே இல்லை. எங்களுக்கு உங்க பாட்டு வேணும். அவ்வளவுதான்.. நீங்க இதுக்கு மேல என்ன வேண்ணாலும் பேசிக்குங்க..” என்று சொல்லி சர்ச்சை பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இறங்கினார்.

அடுத்து இசைக் கலைஞர்கள் சங்கத்தினர் மேடையேறி இளையராஜாவை வாழ்த்தினார்கள். அப்போது “என்னுடைய சொந்தப் பணத்தில் இசைக் கலைஞர்கள் அரங்கத்தை புதுப்பித்து கட்டித் தருவேன்” என்றார் இளையராஜா. “இந்தக் கட்டிடத்தில் அதி நவீன ரிக்கார்டிங் ஸ்டூடியோவும் இருக்கும்…” என்றார் ராஜா.

இதற்காக அந்தச் சங்கத்தின் தலைவரான தீனா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஸ்ரீகாந்த் தேவா, தேவிஸ்ரீபிரசாத் மற்றும் அச்சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரும் மேடையேறி இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

அடுத்ததாக ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் இருந்து ‘அழகு மலராட’ பாடல் பாடப்பட்டது. இதற்கு மேலும் அங்கே இருக்க.. நேரம் ஒத்துழைக்காத காரணத்தினால் நாம் அரை மனதோடு அங்கேயிருந்து கிளம்ப வேண்டியதாகிவிட்டது.

இந்தக் கச்சேரி மாலை 6.30 மணிக்கு துவங்கியிருந்தால் நிச்சயமாக 11 மணியோடு நிறைவாக முடித்திருக்கலாம். ஆனால் துவங்கியதே 8.15 மணிக்குத்தான் என்பதால் பலருக்கும் முழுமையாக கச்சேரியை கேட்க முடியவில்லையே என்ற பெரும் குறை இருந்தது.

மேலும் இந்த மைதானமும் சென்னையின் மையப் பகுதியில் இருந்து மிக தொலைவில் இருந்ததால் தொலை தூரத்தில் இருந்து ராஜாவை தரிசிக்க வந்தவர்கள் வேறு வழியில்லாமல், மனமில்லாமல்… பாதியிலேயே கிளம்பிச் சென்றார்கள். அடுத்தக் கச்சேரியை ஊருக்குள்ள எங்கேயாவது வைங்கப்பா..!

கச்சேரியில் குறைவில்லாமல் இருந்தாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டது. மைதானத்தில் இணையப் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தும் ஜாமர் கருவியையெல்லாம் கவனமாகப் பொருத்திய நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டில்தான் கோட்டைவிட்டுவிட்டனர்.

துவக்கத்திலேயே ஆயிரம் ரூபாய் டிக்கெட்டில் இருந்தவர்களெல்லாம் கட்டையால் தடுக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி, 2,000, 5,000 டிக்கெட் பகுதிகளுக்குள் வந்து அமர்ந்து கொள்ள.. உண்மையில் 5,000 ரூபாய் டிக்கெட் வாங்கியிருந்தவர்களுக்கு உட்கார சீட்டே கிடைக்கவில்லை.

அவர்கள் பெரும் துயரத்துடன் தங்கள் கைகளில் இருந்த டிக்கெட்டை காட்டி “5,000 ரூபாய் கொடுத்து வாங்கினது ஸார்” என்று கோபப்பட்டும், ஆத்திரப்பட்டும் கத்திக் கொண்டிருந்ததைப் பார்க்கும்போது பாவமாக இருந்தது.

இதற்காக நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே பாடகர் மனோ மைக்கைப் பிடித்து “யாரும் தாண்டிக் குதித்து அடுத்த பகுதிக்குள் வர வேண்டாம். அவரவர் இருப்பிடத்தில் அமர்ந்து கச்சேரியை கேளுங்கள்…” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். ஆனால் யார் கேட்டது..?

போகப் போக 5000 ரூபாய் கட்டணப் பகுதிக்குள் கூட்டம் அலை மோதியது. இதில் சில சினிமா பிரபலங்களும் வந்து நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு சேர் ஒதுக்கி அமர வைப்பதற்குள் விழா குழுவினர் தவியாய் தவித்துப் போனார்கள்.

ஒரு சோபாவை கொண்டு வந்து வைத்துவிட்டு பிரமுகர்களை அழைப்பதற்குள் ஒரு அரசியல்வியாதி தனது குடும்பத்துடன் வந்து அமர்ந்துவிட்டு “நானும் ஒரு வி.ஐ.பி.தான்” என்று மிரட்டல்விட்டார். நொந்தே போய்விட்டார்கள் விழாக் குழுவினர்.

விழா நடந்த இடம் திருவள்ளூர் மாவட்டம்.. திருவள்ளூர் தொகுதி என்பதால் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ராஜேந்திரன் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் துர்கா ஸ்டாலின் தனது மகளுடனும், உறவினர்களுடனும் வந்திருந்தார்.

இவருக்காக போடப்பட்ட சோபாவில்கூட ஒரு கூட்டம் வந்து அமர்ந்து கொண்டு எழுந்திருக்க மறுக்க.. பெரும்பாடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தினார்கள் நிர்வாகிகள். எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் அமர்வதற்கும் சீட்டுக்கள் இல்லாமல் போனது.

மக்கள் தொடர்பாளர் டைமண்டு பாபு ஓடோடி வந்து இரண்டு சோபாக்களை கொண்டு வந்து போட்டு “அமருங்கள்” என்று சொல்ல.. அதற்குள்ளாக ஒரு சோபாவில் வேறொரு கூட்டம் வந்து அமர அவரும் வெறுத்துப் போனார். ஒரு கட்டத்தில் சோபா கிடைக்காமல் வெறும் சேர்களை மட்டும் அலாக்காக தூக்கிக் கொண்டு வந்து வைத்தார் டைமண்டு பாபு. அவர் கொண்டு வந்து வைப்பதும் யாராவது ஒருவர் அதில் அமர்வதும் சேருக்குக் காத்திருந்த பிரமுகர்கள் நிற்பதும் தொடர் கதையாகிவிட்டது.

மக்கள் தொடர்பாளர் டைமண்டு பாபுவும் ஒரு கட்டத்தில் மிகவும் தளர்ந்து போய் “ஆளை விடுங்கய்யா” என்று சொல்லி ஒதுங்கிவிட்டார். தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தனக்குக் கிடைத்த சேரைக்கூட சிலருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு கடைசிவரையிலும் நின்று கொண்டிருந்தது பரிதாபம்தான்.

அதிகப்படியான இடங்களில் குறைவான செக்யூரிட்டிகளை வைத்ததுதான் இந்தக் குளறுபடிகளுக்கு ஒரே காரணம். போதாக்குறைக்கு வந்திருந்த காவல்துறையினரும் தங்களது மேலதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாத்து, பத்திரமாக திருப்பி அனுப்புவதிலேயே குறியாய் இருந்ததும் வேதனையான ஒரு விஷயம்.

நான் அமர்ந்திருந்த வரிசையிலேயே வாட்டசாட்டமான இளைஞர்கள் 8 பேர் வரிசையாக அமர்ந்திருந்தனர். யாரோ என்று நினைத்து பேசாமல் இருந்தோம். பின்பு நிகழ்ச்சி துவங்கிய நேரத்தில் அவர்களை எழுந்து வரும்படி ஒரு போலீஸ்காரர் அழைத்தவுடன் சட்டென்று எழுந்து வெளியேறினார்கள்.

அதன் பின்பு அவர்கள் அமர்ந்திருந்த சோபாக்களில் ஒரு பெரிய குடும்பமே வந்து அமர்ந்தது. விசாரித்தால் சென்னை மாநகர அடிஷனல் போலீஸ் கமிஷனரின் குடும்பமாம். அந்த அடிஷனலும் வந்து அமர்ந்திருந்தார்.

இவர்களுக்கு முன்பாக அமர்ந்திருந்த அந்த இளைஞர்கள் காவல்துறையின் ஆயுதப் படைப் பிரிவைச் சேர்ந்த காவலர்களாம்.  என்னவொரு ஐடியா பார்த்தீர்களா..? இது மட்டுமா..? அமர்ந்திருந்த அந்தக் குடும்பத்தினருக்கு அந்த ஆயுதப் படை காவலர்களே இளநீர், ஸ்நாக்ஸ், பிஸ்கட்ஸ், சிப்ஸ், தண்ணீர் பாட்டில் என்று திரும்பத் திரும்பக் கொண்டு வந்து கொடுத்து தங்களது கடமையுணர்ச்சியைக் காட்டிக் கொண்டேயிருந்தனர்.

இடையில் அந்த அடிஷனல் கமிஷனரும் அவருடைய உறவினரும் பாத்ரூமுக்குச் சென்றபோது வேறு யாரும் வந்து அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அதே ஆயுதப் படை காவலர்கள் 2 பேர் திரும்பவும் வந்து அந்த சீட்டில் அமர்ந்து காவல் காத்தனர். என்னவொரு கடமையுணர்ச்சி..? உங்க கடமைக்கு அளவே இல்லீங்களா ஆபீஸர்ஸ்…?

இதுதான் இப்படியென்றால் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த இன்னொரு போலீஸ் உயரதிகாரியின் குடும்பத்திற்காக போலீஸ் சீருடை அணிந்த போலீஸ்காரர்களே உணவுப் பொட்டலங்களை வரிசையாகக் கொண்டு போய் கொடுத்துக் கொண்டிருந்தனர். என்ன உலகமடா இது..?

உணவுப் பொட்டலங்களின் விலையும் யானை விலை.. குதிரை விலை.. ஒரேயொரு குச்சி ஐஸ் 50 ரூபாய். தண்ணீர் பாட்டில் 100 ரூபாய். பாப்கார்ன் 150 ரூபாய். மினி டிபன் 250 ரூபாய், மில்க் கேக் 80 ரூபாய்.. என்று கொள்ளையடித்தார்கள் உணவகத்தினர். வேறு வழியில்லாமல் அதையும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டனர் ரசிகர்கள்.

அந்த இடம் முழுக்கவே பொட்டல் காடு. பாம்புகள் அதிகம் இருக்கும் இடம் என்றாலும் வெயிலுக்கு ஒதுங்க ஒரு மரம்கூட கிடையாது என்பதால் காற்றே வரவில்லை. வெக்கையில் புழுங்கிக் கொண்டிருந்த ரசிகர்களை இப்படி தண்ணியிலும் விளையாடிவிட்டார்கள் வியாபாரிகள்.

ஆடி காரில் வந்தவர்கள்.. பி.எம்.டபிள்யூ காரில் வந்தவர்கள், டூ வீலரில் வந்தவர்கள்  என்று பாரபட்சமே பார்க்காமல் இடம் கிடைக்காத அனைவரும் தரையில் அமர்ந்து கச்சேரியைக் கண்டு களித்தது அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான விஷயம். இது போன்ற ஒற்றுமையை இந்த இசை ரசிகர்களிடையே மட்டும்தான் பார்க்க முடியும்.

ராஜாவே ஒரு கட்டத்தில் மேடையில் பேசும்போது “இங்க முன்னாடி உக்காந்திருக்கிற எத்தனை பேர் காம்ப்ளிமெண்ட்ரி டிக்கெட் எடுத்திட்டு வந்து சீட்டைப் பிடிச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி எத்தனை பேரு பணம் கட்டி டிக்கெட் வாங்கிட்டும் உட்கார இடம் கிடைக்காமல் நின்னுக்கிட்டிருக்கீங்கன்னும் எனக்குத் தெரியும்…” என்று அழுத்தமாய் சொன்னபோது எழுந்த கோரஸ் சில வினாடிகள் நீடித்தது.

ரசிகர்களுக்கு இருந்த தார்மீகக் கோபம் இதைக் கேட்டவுடன் கண நேரத்தில் மறைந்து போனது. இனி அடுத்து எங்கே கச்சேரியை வைத்தாலும் இதே கூட்டம் இதேபோல் இடமில்லாமல் போனாலும் தரையில் அமர்ந்து பார்க்கவும் தயங்காது.

இதுதான் ‘இசை ஞானி’ இளையராஜாவின் இசையுலகம்..!

இவர்கள்தான் ‘இசை ஞானி’யின் ரசிகர்கள்..!
error: Content is protected !!