டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் ‘இரும்புத் திரை’ படம்..!

டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் ‘இரும்புத் திரை’ படம்..!

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரும்புத் திரை.’

இந்தப் படத்தில் விஷால், சமந்தா அக்கினேனி இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.  ஆக்சன் கிங் அர்ஜுன் படத்தின் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், டெல்லி கணேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாதி திரையிடல் இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் படத்தின் இயக்குநர் மித்ரன், லைகா குழுமத்தை சேர்ந்த கருணா, அயுப்கான், எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

7H7A0284

தற்போது ஹாலிவுட்டில் திரையிடுவதுபோல இந்தியாவிலேயே முதன் முறையாக விஷாலின் ‘இரும்புத் திரை’ திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தின் இரண்டாம் பாகம் படம் வெளியாகும் வெள்ளிக்கிழமையன்று திரையிட்டுக் காட்டப்படுமாம்.

இது குறித்து இந்தத் திரையிடலில் இயக்குநர் மித்ரன் பேசும்போது, “விஷால் ஸார் எப்போதும் புதுமையை விரும்புபவர். அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்து வந்தார். அது இந்த ‘இரும்புத் திரை’ படத்தில்தான் நடந்துள்ளது.

காரணம் ‘இரும்புத் திரை’ படத்துக்கு இந்தப் புதுமையான திட்டம் சரியாக இருக்கும் என்பதால்தான். ‘இரும்புத் திரை’ திரைப்படத்தின் இண்டர்வல் ப்ளாக் எதிர்பார்ப்பை தூண்டுவிதமாக அமைந்துள்ளது.

இந்த ‘இரும்புத் திரை’ திரைப்படம் ஆதாரினால் ஏற்ப்படும் ஆபத்துக்களைப் பற்றி பேசும் படம் அல்ல. டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும்…” என்றார்.