full screen background image

நிஜ திருட்டு என்று சுற்றி வளைத்த கமாண்டோ வீரர்களிடத்தில் சிக்கிய நடிகர் தினேஷ்..! 

நிஜ திருட்டு என்று சுற்றி வளைத்த கமாண்டோ வீரர்களிடத்தில் சிக்கிய நடிகர் தினேஷ்..! 

நடிகர் தினேஷ் நடிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை நீலம் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.  கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான் விஜய், ஜானி ஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். 

ஒரு இரவில் இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சண்டை பயிற்சியாளர் சாம் துணையுடன், இயக்குநர் அதியன் ஆதிரை, சென்னை புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் படமாக்கிக் கொண்டிருந்தார். 

நாயகன் தினேஷ் வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக் கொண்டு சண்டை போடும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குநர்.  கேமரா, லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாகவே லாரியில் ஏதோ திருட்டு நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது. 

அந்த நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே லாரியில் திருட்டு நடக்கிறது என்று நினைத்து லாரியை சுற்றி வளைத்து நிறுத்திவிட்டனர். 

இதை அறியாத நாயகன் தினேஷ், ‘நமக்குத் தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே.. இது சீன்லயே இல்லியே என்று அதிர்ச்சியடைந்து தன்னைச் சுற்றி வளைத்த கமாண்டோ போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து ‘இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு..?’ என்று கேட்டிருக்கிறார். தினேஷை நிஜமாகவே திருடன் என்று நினைத்த போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறி வைக்க, இயக்குநர் பதறிப் போய் ஓடோடி வந்து, “சூட்டிங் ஸார், சூட்டிங் ஸார்..” என்று சத்தம் போட்டு சொன்ன பிறகே, போலீஸார் விலகினார்களாம். இதற்கு பிறகே உண்மை தெரிந்து தினேஷும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

நெருங்கி வந்த வீரர்கள் தினேஷை யாரென்று தெரிந்த பின்பே  நிஜமான சினிமா படப்பிடிப்பு என்பதை அறிந்துள்ளனர். இதனால் அந்த இரவில் அந்த நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமாண்டோ படை வீரர்கள் அங்கிருந்து கிளம்பும்போது “உங்களது படப்பிடிப்பு நிஜமான சம்பவம் போல் இருக்கிறது. வாழ்த்துக்கள் தினேஷ்…” என்று பாராட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படப்பிடிப்பு தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

Our Score