full screen background image

இனம் படத்திற்கு இயக்குநர்கள் சங்கம் ஆதரவு..!

இனம் படத்திற்கு இயக்குநர்கள் சங்கம் ஆதரவு..!

பிரபல ஒளிப்பதிவாளர்-இயக்குநர் சந்தோஷ் சிவனின் தயாரிப்பு-இயக்கத்தில் நாளை வெளிவர இருக்கும் இனம் திரைப்படம் மிகச் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் என்று ஒரு சிலர் கூறினாலும், இன்னொரு பக்கம் ஈழ விடுதலை ஆதரவாளர்களர்களும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் இந்தப் படம் ஈழ மக்களுக்கு எதிரானது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

Inam 6

2 நாட்களுக்கு முன்பாக சத்யம் தியேட்டரில் சினிமா பிரபலங்களுக்காக இந்தப் படம் காண்பிக்கப்பட்டது. அன்றைக்கு தமிழ்த் திரையுலகில் இருக்கும் ஈழ விடுதலை ஆதரவாளர்களான தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் கவுதமன், வீ.சேகர், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல இயக்குநர்கள் படத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

Inam 6 copy

இவர்களுக்குப் படம் மிகவும் பிடித்துப் போயிருக்க.. படம் நல்லவிதமாகவே ஈழத்தில் நடந்த போரை பற்றி முடிந்த அளவுக்கு சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் விடுதலைப்புலிகள் பற்றி தரக்குறைவான செய்திகளை மறைமுகமாக சொல்வதை போன்ற காட்சிகள் இதில் இருப்பதால் இந்தப் படத்தைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறி ஒரு சாரார் இன்றைக்கே தங்களது பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டார்கள்.

inam-movie-poster

தோழர் கொளத்தூர் மணிகூட இந்தப் படத்திற்கு எதிர்ப்பாக இருப்பதாகச் செய்திகள் வந்திருக்க.. அவசரம், அவசரமாக இன்றைக்கு மதியம் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் ஒரு அவசர பிரஸ் மீட்டை நடத்தினர்.

r.k.selvamani

இதில் பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “இந்தப் படம் முறையாக சென்சார் சர்டிபிகேட் வாங்கப்பட்டுவிட்டது.  மிக நல்ல முறையில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது.. இதற்கு எதிர்ப்பு தெரிவி்பபது என்பது தவறானது.. ஒரு படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கிடைத்த பின்பு யாரும் இதில் தலையிட முடியாது. இது இயக்குநரின் கருத்து சுதந்திரம்…” என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம்.

படைப்பாற்றல், கருத்துச் சுதந்திரம், சென்சார் சர்டிபிகேட் வாங்கியாச்சு போன்ற வார்த்தைகளெல்லாம் இந்த ஒரு படத்துக்கு மட்டும்தானா..? அல்லது மற்றவைகளுக்கும் இது பொருந்துமா என்று தெரியவில்லை.

DAM-999

முல்லைப் பெரியாறு பற்றி எடுக்கப்பட்ட ‘டேம் 999’ படம்கூடத்தான் சென்சார் சர்டிபிகேட் வாங்கப்பட்டுதான் ரிலீஸுக்கு தயாரானது. ஆனால் என்ன ஆனது.. இதே இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில இயக்குநர்கள்தான் பிரசாத் லேப்புக்குள் நுழைந்து அடிதடி கலாட்டா செய்து பிரஸ் மீட் நிகழ்ச்சியையே நடத்தவிடாமல் செய்தார்கள்.

madras cafe

பிரபல ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் தயாரித்து, நடித்த ‘மெட்ராஸ் கபே’ படமும் முறைப்படி சென்சார் சர்டிபிகேட் வாங்கித்தான் தயாராக வந்தது. ஆனால் படத்தைத் திரையிடவிட மாட்டோம் என்று சொன்னது இதே ஆர்.கே.செல்வமணிதான்.. அப்போதெல்லாம் இயக்குநர்களின் படைப்பாற்றல், கருத்துச் சுதந்திரம், சென்சார் அனுமதி பற்றியெல்லாம் இவர்களுக்குத் தெரியாதா..? இப்போது இந்தப் படத்திற்கு மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல் உதவிகளும், ஆதரவுகளும்..!

சந்தோஷ்சிவன் இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினராகவே இருக்கட்டும். ஆனால் அதற்காக அவர் இயக்கிய படத்தை படைப்பாற்றலாகவும், சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் இயக்கிய படங்களை தமிழர் விரோத படங்களாகவும் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்..?

மாமியார் உடைத்தால் மண்குடம்..? மருமகள் உடைத்தால் பொன்குடமா..?

இயக்குநர்கள் சங்கம் யோசிக்கட்டும்..!

Our Score