படத்திற்காக தோற்றத்தை மாற்றிக் கொண்ட ’இமை’ படத்தின் நாயகன்

படத்திற்காக தோற்றத்தை மாற்றிக் கொண்ட ’இமை’ படத்தின் நாயகன்

ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஹார்பிக் வி.டோரி தயாரித்துள்ள திரைப்படம் ‘இமை’. 

முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக நடித்ததுடன், தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளவர் சரிஷ். நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

நல்லதொரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும்படி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்  வி.கே.பிரதீப். இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் பணியாற்றியவர்.

மிக்கு காவில் மற்றும் ஆதிஃப்  என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர். பாடல்கள் – யுகபாரதி, நடனம் – தீனா, சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி, ஒப்பனை – மிட்டா ஆண்டனி.

இப்படத்தை இயக்கியிருப்பவர்  இயக்குநர் விஜய் கே.மோகன். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம்’, ‘வேனல் மரம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர்.

கரடுமுரடான  வாலிபனுக்கும், கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல்தான் ‘இமை’ படத்தின் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் சரிஷ், சிரமப்பட்டு தன் தோற்றத்தை பெரிதும் மாற்றிக் கொண்டு நடித்துள்ளாராம்.

இது பற்றி நாயகன் சரிஷ் பேசும்போது, “இது ஒரு ரவுடி சார்ந்த கதை என்று கேள்விப்பட்டதுமே என் தோற்றத்தை இயக்குநர் கூறியபடி மாற்ற ஆரம்பித்தேன். கொழுகொழுவென்றிருந்த எனது உடம்பை மிகவும் இளைக்க வைத்தேன். தாடி வளர்க்கத் தொடங்கினேன். தலையைச் சரியாக வாராமல் முடியை வளர்த்தேன். என் நிறத்தை மங்கலாக்க வெயிலில்  நின்று கறுத்தேன்.

இவ்வளவும் செய்து மாறிய பின், என் தோற்றம் இயக்குநருக்குப் பிடித்து ஒரு வழியாக அவருக்கு திருப்தி வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே போனோம். படத்தில் என்னை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர்.  படப்பிடிப்பின்போதுதான் நடிப்பு என்றால் எவ்வளவு சிரமம் என்று புரிந்தது. ஒவ்வொரு படமும் எவ்வளவு கஷ்டங்களுக்குப் பின் உருவாகி வருகிறது என்பது புரிந்தது.

இப்போதெல்லாம் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. சின்சியரான உழைப்பும் தேவை. யதார்த்தமும் இருக்க வேண்டும். இவை இரண்டுமே இந்த ‘இமை’  படத்தில் இருக்கும்.

தமிழக ரசிகர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. புதியவர்களை வரவேற்பார்கள். திறமைகளுக்கும் புதுமைகளுக்கும்  ஊக்கம் தருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி. ஊட்டி, கேரளாவிலுள்ள சாலக்காடு, கொல்லங்கோடு, கோவிந்தபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

மிக விரைவில் ‘இமை’ திரைப்படம் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது..” என்றார்.