“என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா…” – ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..!

“என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா…” – ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..!

அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான ‘இளையராஜா 75’ விழா நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தமிழ் சினிமா மற்றும் இசைத் துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

விழாவின் துவக்கத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் பேசும்போது, “எல்லா நாட்டிலும் ஆள்வதற்கு ஒரு ராஜா இருப்பார். ஆனால், பாடல் என்று வரும்போது ஆள்வதற்கு ஒரேயொரு ராஜாதான். அது நமது ‘இசைஞானி’ இளையராஜாதான்.

PHOTO-2019-02-02-19-47-39

அவரின் இசை இல்லையென்றால், நீண்ட தூர பயணம் என்றோ அழிந்திருக்கும். ஒரு கார் டிரைவர் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு முன் இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் இருக்கிறதா என்று தான் முதலில் பார்ப்பார்.  காஷ்மீர் வரைக்கும் என்றால்கூட அவருடைய பாடல்கள்தான் பயணத்தை இனிமையாக்கும்.

இளையராஜா போன்ற ஒரு மாமேதை பிறக்கவும் முடியாது, இப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கவும் முடியாது. தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே மாணிக்கமாக விளங்குபவர் இளையராஜா.

இப்பேர்ப்பட்ட இசைஞானிக்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த ‘இளையராஜா 75’ விழாவை நடத்துவதில் பெருமை மட்டுமல்ல, கடமைப்பட்டிருக்கிறோம்.

தந்தைக்காக மகன் கணக்கில்லாமல் செலவு செய்வது தப்பில்லை. அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தப்பு என்று சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், தந்தைக்கு செய்வது கடமை. அதுபோல், இளையராஜாவிற்காக இந்த விழா நடத்துவதில் எந்த தப்புமில்லை.

இந்த நேரத்தில் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெரும் வசனம்தான் தோன்றுகிறது. ‘சில பேர் பாராட்டியே பேர் வாங்குவார்கள், சிலர் குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குவார்கள்’ என்ற வசனத்திற்கேற்ப நாங்கள் இளையராஜாவை பாராட்டி இந்த விழாவை நடத்தியதனால் தமிழ்ச் சினிமா வரலாற்றில் நிச்சயமாக இடம் பெறுவோம். அதேபோல், இந்நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று எதிர்த்தவர்களும் இடம் பெறுவார்கள்.

இதெல்லாம் நடக்குமென்று தெரிந்துதான் அன்றே நமது இளையராஜா ‘என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா, வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா’ என்று பாடியிருக்கிறார். இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.

வெளியூரில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரின் மனதிலும் இந்த இரண்டு நாள் விழா நீங்கா இடம் பெறும்…” என்றார்.

PHOTO-2019-02-02-19-47-42

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கினார். இளையராஜாவின் சாதனைகள் பற்றிய புத்தகத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.

தொடர்ந்து இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசும்போது, “இந்த ‘இளையராஜா 75′ விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இளையராஜாவின் இசைப் பயணம் என்றும் நிலைத்திருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி தனது லட்சியத்தில் உறுதியாக இருந்ததால்தான் உயரத்தில் இருக்கிறார். 1000 படங்களில் 7000 பாடல்களை இசையமைத்து, 20,000 கச்சேரிகளை நடத்திய அவரை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

1N6A4571

பத்மவிபூஷன் இளையராஜாவிற்கு இப்படி ஒரு விழா எடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கௌரவப்படுத்தி இருக்கிறது. இந்நிகழ்ச்சி பல வருடங்களுக்கு எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும்…” என்றார்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவை பார்த்துதான் இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்துக் கொண்டேன்.

PHOTO-2019-02-02-19-47-41

எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரேயொரு கெட்ட பழக்கம் இசைதான். நான் ஆஸ்கர் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டுதான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால்தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி..” என்றார்.

ரஹ்மான் தனது செல்போனில் இருக்கும் கீ போர்டு மூலமாக ‘புன்னகை மன்னன்’ படத்தில் இடம் பெற்ற தீம் மியூஸிக்கை இசைத்துக் காட்டினார். இதைக் கேட்டு இம்ப்ரஸ் ஆன இளையராஜா தனக்காக மீண்டும் ஒரு முறை இதை இசைக்கும்படி கேட்டுக் கொண்டார். ரஹ்மானும் இரண்டாவது முறையாக இசைத்துக் காண்பித்தார்.

மேலும், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் இருந்த கீ போர்டில் இசைக்க இளையராஜா அதை மேடையில் பாடினார். இதேபோல் ‘தென்றல் வந்து தீண்டு்ம்போது’ பாடலையும் இசைத்துக் காட்டினார் ரஹ்மான்.

இளையராஜா பேசும்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் அவர் அப்பாவிடம் இருந்ததைவிட என்னுடன் இருந்த நேரம்தான் அதிகம். கிட்டத்தட்ட 500 படங்களில் என்னுடன் அவர் பணியாற்றியிருக்கிறார்…” என்றார். “இதை நீதானே சொல்லியிருக்கணும்” என்று ரஹ்மானிடம் கேட்டு அவரைக் கிண்டலடித்தார் இளையராஜா.

1N6A4710

நடிகர் சங்கத்தின் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு மேடையில் தங்கத்தாலான வயலின் கருவியைப் பரிசாக அளித்தார்கள். இந்த பரிசை அந்தக் கால ராஜாக்களின் பல்லக்கில் வைத்து மேடைக்கு கொண்டு வந்தது அழகாக இருந்தது.

நடிகைகள் பூர்ணா, இனியா, ரூபிணி, நதியா போன்றோர் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு நடனமாடினார்கள்.

நடிகர் கார்த்திக்கும், நடிகை ராதாவும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின்போது நடந்த விஷயங்களை மேடையில் பகிர்ந்து கொண்டார்கள்.

PHOTO-2019-02-02-19-47-37

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் இருவரும் நடித்திருக்கும் ‘எல்.கே.ஜி.’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவும் அதே மேடையிலேயே நடைபெற்றது. டிரெயிலரை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்.

மொத்த நிகழ்ச்சியையும் நடிகைகள் சுஹாசினி, கஸ்தூரி, அனுஹாசன், லட்சுமிபிரியா நால்வரும் இணைந்து தொகுத்தளித்தனர்.

நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட், நடிகை ஆண்ட்ரியா மேடையில் பாடிய நிகழ்வுதான்.

“கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்” பாடலையும், “நேற்று இந்த நேரம்” பாடலையும் பாடினார்.

சிக்கென்ற உடையில் அந்த மெலிந்தும், மெலியாமலுமான அவருடைய உடல் அசைவும் ஒட்டு மொத்தக் கூட்டத்தையும் கவர்ந்துவிட்டது.

கூடுதலாக அவர் அணிந்திருந்த சின்ன ஆடையும், இந்த ஷோவுக்கு மட்டும் மேடையில் கொடுத்திருந்த லைட்ஸ் அணி வகுப்பும் அசத்தல்..!

நிச்சயமாக சன் தொலைக்காட்சியில் அதிகமான பிரமோக்களில் இடம் பெறப் போவது ஆண்ட்ரியாதான். இதில் சந்தேகமில்லை.!