“ஹவுஸ் ஓனர் திரைப்படமும் நிச்சயமாக வெற்றி பெறும்..”-இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணனின் நம்பிக்கை..!

“ஹவுஸ் ஓனர் திரைப்படமும் நிச்சயமாக வெற்றி பெறும்..”-இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணனின் நம்பிக்கை..!

தமிழ்ச் சினிமாவில் பெண் இயக்குநராக வெற்றி பெற்றிருக்கும் லஷ்மி ராமகிருஷ்ணன் அழகான கதைகளை உருவாக்குவதோடு, அதை உயர்ந்த தரத்தில் சினிமாவாகவும் வழங்குபவர்.

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய வித்தியாசமான படங்களை தமிழ்ச் சினிமாவுக்குக் கொடுத்திருக்கும் இவர். இப்போது தனது அடுத்த படைப்பாக ‘ஹவுஸ் ஓனர்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார்.

2016, அக்டோபர் மாதம் ‘அம்மணி’ படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில், தனது அடுத்த படமான  ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன்.

சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இத்திரைப்படத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். ‘பசங்க’ படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற, ‘கோலிசோடா’வில் பாராட்டுக்களை குவித்த கிஷோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி ஒவ்வொரு வீட்டிலிருக்கும் அம்மாவை  பிரதிபலிக்கும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற சிறப்பான தொழில் நுட்ப கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். ‘வாகை சூட வா’ தொடங்கி சமீபத்திய ‘ராட்சசன்’வரை அவரின் இசை பெரிதும் பேசப்படுகிறது. ‘மகளிர் மட்டும்’ புகழ் பிரேம் படத் தொகுப்பை கையாள்கிறார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்ய, தபஸ் நாயக் ஒலிப்பதிவை கவனிக்கிறார்.

lakshmi ramakrishnan-movie-stills-3

இத்திரைப்படம் பற்றி மிகுந்த மகிழ்ச்சியோடு இயக்குநர் ல‌ஷ்மி ராமகிருஷ்ணன் பேசும்போது, “2018 தமிழ் சினிமாவுக்கு உண்மையாகவே ஒரு மிகச் சிறந்த வருடம். ‘96’, ‘ராட்சசன்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘வட சென்னை’ என்று வரிசையாக நல்ல படங்கள் வெளிவந்து இந்த 2018-ம் ஆண்டை அலங்கரித்திருக்கின்றன.

இந்த நல்ல நேரத்தில் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் என்னுடைய ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை உங்களுக்கு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

என் எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் நிஜ வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்டவைதான். இந்த ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

பல்வேறு பிரபலங்கள் எங்கள் படத்தின் போஸ்டரை பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர்களான சமுத்திரக்கனி மற்றும் பாண்டிராஜ் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்கு நன்றி.

இந்த அக்டோபர் எனக்கு மிகவும் சிறப்பான மாதமாகவே இருந்திருக்கிறது.  இந்த சீசனில் வெளியாகி வரும் தரமான திரைப்படங்களின் லிஸ்டில் எங்கள் படமும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்றார்.