full screen background image

திரையுலகத்தினரே… முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்..!!!

திரையுலகத்தினரே… முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்..!!!

ஜி.எஸ்.டி.யையும் சேர்த்தால் தியேட்டர் கட்டணங்கள் கூடுதலாக இருப்பதாகச் சொல்லி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தன்னிச்சையாக ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள்.

இப்போது தியேட்டர் கட்டணத்தில் தமிழக அரசின் கேளிக்கை வரி 30 சதவிகிதம் இருக்கிறது. இந்த 30 சதவிகிதத்தில் 6 சதவிகிதம் உள்ளூர் வரியாக லோக்கல் நகராட்சி, மாநகராட்சி, ஊர்ப் பஞ்சாயத்துக்களுக்கு போய்விடும். மீதமிருக்கும் 24 சதவிகிதம் கேளிக்கை வரியாக வணிகவரித் துறை மூலம் அரசுக்கு போய்விடும்.

பெருநகர சிங்கிள் தியேட்டர்களில் 90 ரூபாய் கட்டணம் என்றால் இதில் 30 சதவிகிதமான 27 ரூபாய் அரசுக்குப் போய்விட, மீதமிருக்கும் 63 ரூபாய் தியேட்டர்காரர்களுக்குக் கிடைத்தது.

மால் தியேட்டர்களில் 120 ரூபாய் கட்டணம் என்றால், இதில் 30 சதவிகிதமான 36 ரூபாய் அரசுக்குப் போய்விட, மீதம் 84 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கு கிடைத்து வந்தது.

இந்த 63 ரூபாய், 84 ரூபாயில்தான் தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் மூவரும் படத்தின் வியாபாரத்திற்கேற்ப தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டார்கள்.

நிற்க..

தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி முழுவதும் ரத்து என்ற அரசாணை 2006 – 2011 தி.மு.க. ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. இதன் மூலமாக வருடத்திற்கு 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என்னும் அரசாணையைப் பெற்றன.

இதன் பின்பு வந்த அ.தி.மு.க. அரசு “தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது.. அது சென்சாரில் யு சர்டிபிகேட்டையும் பெற்றிருக்க வேண்டும்…” என்று கூடுதல் விதிமுறையை விதித்தது.

இதன்படி இந்தப் பத்து வருடங்களில் கணக்குப் போட்டுப் பார்த்தால், சுமார் 1500 திரைப்படங்கள் இது போன்ற விதிமுறைகளைப் பெற்று இந்த கேளிக்கை வரிவிலக்கைப் பெற்றிருக்கின்றன.

உண்மையில் இந்த கேளிக்கை வரிவிலக்கு அரசாணையைப் பெற்ற திரைப்படங்களை திரையிட்ட தியேட்டர்காரர்கள் என்ன செய்திருக்க வேண்டும்…?

மால் தியேட்டர்களில் கேளிக்கை வரியான 36 ரூபாயை கழித்துவிட்டு மீதமிருக்கும் 84 ரூபாயைத்தான் நம்மிடமிருந்து திரையரங்கு கட்டணமாக வசூல் செய்திருக்க வேண்டும்.

பெரிய நகரங்களில் இருக்கும் சிங்கிள் தியேட்டர்களில் 27 ரூபாயை கழித்துவிட்டு 63 ரூபாயைத்தான் நம்மிடமிருந்து திரையரங்கு கட்டணமாக வசூலித்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் எந்த தியேட்டரிலாவது தியேட்டர் கட்டணத்தை இப்படி குறைத்து வசூலித்தார்களா..? இல்லையே..?

இன்றைக்கு தங்களது கழுத்துக்குக் கத்தி வந்துவிட்டது என்பது தெரிந்தவுடன் அவசரமாக ஸ்டிரைக் என்று அறிவித்துவிட்டு அரசுடன் பேரம் பேசும் திரையுலக கனவான்கள்.. பொதுமக்களிடமிருந்து அநியாயமாக கொள்ளையடிக்கப்பட்ட அந்த கூடுதல் கேளிக்கை வரி தொகைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்..?

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்து மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட இந்தப் பணத்தை தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று இந்த மூவர் கூட்டணியே தங்களுக்குள் பிரித்துக் கொண்டது. அதாவது மக்களிடமிருந்து திருடிய, கொள்ளையடித்த பணத்தை தாங்களே வைத்துக் கொண்டு இன்றைக்கு மக்களிடம் நல்ல பெயர் எடுக்க போராடி வருகிறார்கள்.

இதை கண்டு கொள்ளாமல் இருக்க இரண்டு கட்சி ஆட்சியின்போதும் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் லஞ்சத்தைக் கொடுத்து ஆஃப் செய்து வைத்திருந்தார்கள் இத்திரையுலக பெரிய மனிதர்கள்.

இப்போது இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. ஒவ்வொரு வாய்தாவின்போதும் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி சமாளித்து வருகிறது மாநில அரசு. “ஏன் இத்தனை நாட்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தீர்கள்..? நீங்கள் என்ன ஆட்சி லட்சணம் நடத்துகிறீர்கள்..?” என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல நீதிமன்றத்தில் கேள்வியெழுப்பியும், சொரணையில்லாத இந்த அரசு எந்தப் பதிலும் இதுவரையிலும் சொல்லவில்லை. இதேபோல் தியேட்டர்காரர்களும்  பதில் சொல்லவில்லை.

இதற்கிடையில் இன்றைய நிலைமையில் இந்த புதிய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவோம் என்று சொல்லிவிட்டு வேலை நிறுத்த அறிவிப்பை அறிவித்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

உண்மையில் யாருக்கு பாதிப்பாகும்..? டிக்கெட் கட்டணம் 100 ரூபாய்க்குள் இருந்தால் அதற்கு 18 சதவிகிதமும், 100 ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு 28 சதவிகிதமும் ஜி.எஸ்.டி. வரி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி பார்த்தால் திரையரங்கு கட்டணம் 90 ரூபாய் என்றிருந்தால் ஜி.எஸ்.டி.யுடன் சேர்ந்து 110 ரூபாய் வரும். இதிலேயே தமிழக அரசின் கேளிக்கை வரியும் சேர்ந்து வரும்.

110 ரூபாயில் ஜி.எஸ்.டி. கட்டணமாக 20 ரூபாய், கேளிக்கை வரியாக 33 ரூபாய்,  இதை சேர்த்தால் 53 ரூபாய் மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாகப் போய்விடும். மீதமிருக்கும் 57 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் போய்ச் சேரும்.

இதன்படி பார்த்தால் சராசரியாக ஒரு டிக்கெட்டுக்கு 19 ரூபாய்தான் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும். பட விநியோக முறையில் பல வகைகள் இருப்பதால் படத்தை ஒட்டு மொத்தமாய் விலை கொடுத்து வாங்கி வெளியிடும் விநியோகஸ்தரோ அல்லது படத்தை நேரடியாக தியேட்டரில் வெளியிடும் தயாரிப்பாளரோதான் இதில் பெரிதும் பாதிப்படைவர்.

மால்களில் 120 ரூபாய் கட்டணம் என்றால் ஜி.எஸ்.டி.யாக 33 ரூபாயும், கேளிக்கை வரியாக 36 ரூபாயும் சேர்ந்து 69 ரூபாய் கழிக்கப்பட்டு 51 ரூபாய் மட்டுமே தியேட்டர்கார்ர்கள், விநியோகஸ்தர், தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும்.

இதன்படி பார்த்தால் இப்போது இருப்பதைவிட 100 ரூபாய்க்கும் குறைவான டிக்கெட் கட்டணம் கொண்ட தியேட்டர்களில் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் சராசரியாக 20 ரூபாயையும், மற்றும் பெரிய மால்களில் ஒரு டிக்கெட்டுக்குக் கிடைக்கும் மொத்த ரூபாயில் 36 ரூபாயையும் இழப்பார்கள்.

இதனால் விநியோகஸ்தர்களின் பங்கு, தயாரிப்பாளர்களின் பங்கு இவையும் குறைவாகி போவதால் வசூல் பாதிப்பு இந்த இருவரையும் பாதிக்கத்தான் செய்யும்..!

சரி.. இதனை மீட்டுவிடலாம்.. அரசிடம் சொல்லி அந்த கேளிக்கை வரியை நீக்கிவிட்டு வெறுமனே ஜி.எஸ்.டி வரியான 18 மற்றும் 28 சதவிகிதம் மட்டுமே இருக்கும்படி வைத்துக் கொள்ளலாம் என்றால்…

இப்போது பெரிய மால்களில் வசூலிக்கப்படும் 120 ரூபாய் கட்டணத்தில் 2(30-28) சதவிகிதம் குறைக்கப்பட்டு 117 ரூபாய்தான் வசூலிக்கப்பட வேண்டும். ஏனெனில் கேளிக்கை வரியையும் சேர்த்துதானே இந்த மால்களில் 120 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் மால் அல்லாத தியேட்டர்களில் இப்போது வசூலிக்கப்படும் 90 ரூபாய் கட்டணத்திலும் 12(30-18) சதவிகிதம் குறைக்கப்பட்டு 76 ரூபாய்தான் வசூலிக்கப்பட வேண்டும். தியேட்டர்காரர்கள் இதனை செய்வார்களா..? அரசு இதனை செய்ய வைக்குமா..?

ஆனால் இப்போதே மால்களில் 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரியையும் சேர்த்து 153 ரூபாயாக வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதையே சிங்கிள் தியேட்டர்களில் 90 ரூபாய் டிக்கெட்டை 106 ரூபாயாக உயர்த்தியும் வசூலிக்க துவங்கிவிட்டார்கள்.

இதனால் பாதிக்கப்படப் போவது யார்..? ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் தமிழ்த் திரையுலகமே இதனால் நஷ்டமடையப் போகிறது. ஏற்கெனவே பொதுமக்கள் சிக்கன நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு படத்திற்கு குடும்பத்தோடு போனால் போதும் என்கிற கொள்கை முடிவை எடுத்துவிட்டார்கள். தனி நபர்கள், மற்றும் தற்செயலாக தியேட்டருக்கு வருபவர்கள், ஹீரோக்களின் ரசிகர்கள் இவர்களை நம்பித்தான் இப்போது தியேட்டர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த திரையரங்கு கட்டண விலையுயர்வு நிச்சயமாக இவர்களை பாதிக்கும்பட்சத்தில் தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் இன்னமும் குறையும். அப்போது ஒட்டு மொத்தமாய் எந்தப் படம் போட்டாலும் வசூல் குறைந்து, விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் திண்டாடுவார்கள்.

இந்தத் திண்டாட்டத்துக்கெல்லாம் வேறு சில காரணங்களும் உண்டு. வசூலே வராத நடிகர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுப்பது.. அதிக செலவு பிடிக்கும் கதைகளை படமாக்குவது… இதுவும் தயாரிப்புச் செலவு அதிகமாவதற்கு சில காரணங்களாகும்.

ஆனால் இப்போது தங்களுக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் ஸ்டிரைக், வேலை நிறுத்தம் என்று கெத்தாக அறிவித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திரையுலகப் புள்ளிகள்.. பொதுமக்களாகிய எங்களிடமிருந்து கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளையடித்த, திருடிய கேளிக்கை வரியை எப்போது, எப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறார்கள்..? இதனை நாங்கள் யாரிடம் போய் எப்படி கேட்பது..? இதற்காக ரசிகர்களும் ஸ்டிரைக்கில் இறங்கினால் என்ன ஆகும் தெரியுமா..?

தமிழ்த் திரையுலகத்தினர் உண்மையாக பொதுமக்களுக்காக படம் எடுப்பவர்களாக இருந்தால், நேர்மையானவர்களாக இருந்தால்.. உண்மையான கலைஞர்களாக இருந்தால்.. இதற்கு பதில் சொல்லிவிட்டு.. எங்களிடமிருந்து குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்தை அரசிடமாவது திருப்பிக் கட்டிவிட்டு பின்பு நீதி, நேர்மை, நியாயம், நாணயத்தை பற்றிப் பேசட்டும்..!

Our Score