கொரில்லா – சினிமா விமர்சனம்

கொரில்லா – சினிமா விமர்சனம்

ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்தர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, ‘மொட்டை’ ராஜேந்திரன், மதன் குமார், சுவாமிநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.  இவர்களுடன் ‘காங்’ என்னும் சிம்பன்ஸி குரங்கும் நடித்திருக்கிறது.

ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ், இசை – சாம் சி.எஸ்., படத் தொகுப்பு – ரூபன், நடன இயக்கம் – விஜி சதீஷ், சண்டை இயக்கம் – சுதேஷ் குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – டான் சாண்டி.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதையே தொழிலாகக் கொண்டிருப்பவர் நாயகன் ஜீவா. காலை நேரத்தில் பேருந்தில் டிக்கெட் எடுத்துக் கொடுப்பதாகச் சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்தோடும் ஒரு திருடன்.. அடுத்த சில மணி நேரங்களில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்துக் கொண்டே அந்தக் கடை மருந்துகளையே திருடி வெளி மார்க்கெட்டில் விற்கிறார். மாலையில் தனியாக ஒரு கிளினிக்கை திறந்து வைத்து தானே டாக்டர் தொழிலையும் செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நல்லவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் லவ்வாகிறது. அவர் ஷாலினி பாண்டே. பேருந்தில் ஏற்படும் மோதலில் நட்பு ஏற்பட்டு பின்பு அதுவே காதலாகி ஒரு டூயட்டுக்கு வழி வகுக்கிறது.

இவருடைய அறை நண்பர்கள் சதீஷ், விவேக் பிரசன்னா. இதில் சதீஷ் நிறுவனத்தில் நடந்த ஆட்குறைப்பினால் வேலையிழந்து விரக்தியில் இருக்கிறார். விவேக்கிற்கு சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசை. இவர்களுடன் ‘காங்’ என்கிற சிம்பன்ஸி குரங்கு ஒன்றும் இவர்களுடன் இருக்கிறது.

மூன்று பேருக்குமே பணம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எப்படியாவது ஒரே நாள் இரவில் பணக்காரனாகிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள். இந்த நேரத்தில் கிராமத்தில் விவசாயம் செய்ய முடியாமல் ஏதாவது வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து சென்னைக்கு வந்திருக்கும் ஏழை விவசாயியான மதன் குமார், இவர்களது வீட்டுக்குக் கீழேதான் குடியிருக்கிறார்.

இவர்கள் நால்வரும் ஒரு டாஸ்மாக் கடையில் வழக்கமாக மது அருந்துகிறார்கள். அங்கே மது என்னும் அரக்கன் இவர்களை ஆட்கொள்ளும்போதெல்லாம் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கிறார்கள். ஆனால், காலையில் மறந்து போகிறார்கள்.

மதன் குமார் இவர்களை ஒன்று சேர்த்து அவர்களது வங்கிக் கொள்ளை பற்றி\ய விஷயத்தை இவர்களுக்கு எடுத்துச் சொல்லி அதைத் தூண்டிவிடுகிறார். இதனால் நால்வரும், சிம்பன்ஸியுடன் சேர்ந்து ஐந்து பேரும் சேர்ந்து வண்டலூர் அருகே இருக்கும் ‘பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தானை’ கொள்ளையடிக்கச் செல்கிறார்கள்.

இவர்களது கொள்ளையடிக்கும் திட்டம் வெற்றிகரமாக முடிந்ததா..? இல்லையா..? என்பதுதான் படத்தின் திரைக்கதை.

தனக்குப் பின்னால் வந்தவர்களெல்லாம் ஹிட் கொடுத்துக் கொண்டேயிருக்கும் நேரத்தில் தான் எப்படியாவது வருடத்திற்கு ஒன்றாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஜீவா. ஆனால் கதைதான் அமையவில்லை. அல்லது அவரும் நல்ல கதையைத் தேர்வு செய்யவில்லை. இந்தக் கதையை எதற்குத் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை.

இது கொஞ்சம் நகைச்சுவை கலந்த சீரியஸ் படமாக உருவாகியிருக்கிறது. ஒன்று ‘சிவா மனசுல சக்தி’ போல நகைச்சுவை படமாகவே எடுத்துவிட வேண்டும். அல்லது ‘கோ’ போன்று சீரியஸ் படமாகவே எடுத்துவிட வேண்டும். இரண்டுக்கும் நடுவில் நிற்பதைப் போல, இதுபோல படம் எடுக்கக் கூடாது. ஜீவா இனிமேலாவது புரிந்து கொண்டால் நலம்.

ஜாலியான ஒரு பையனாக இருக்கும் கேரக்டர் ஜீவாவுக்கு பொருத்தம்தான். ஆனால் கதையும், திரைக்கதையும் இடிப்பதால் அவருடைய நடிப்புக்கேற்ற ஸ்கோப்பும் படத்தில் இல்லை. சில சுவாரஸ்ய காட்சிகளால் அவர் தப்பித்துக் கொண்டுள்ளார்.

சதீஷ், விவேக் பிரசன்னா, மதன் குமார் மூவரின் நடிப்பும் ஒன்று போலத்தான் இருக்கிறது. சதீஷ் இடையிடையே வழக்கம்போல கமெண்ட்டுகள் அடித்து கதையை நகர்த்தியிருக்கிறார். விவேக் பிரசன்னா சீரியஸ் வசனத்தைக்கூட காமெடியாக்கி பேசி கலகலப்பாக்கியிருக்கிறார். மதன் குமார் உருக்கமான காட்சியில் கொஞ்சம் நெஞ்சம் தொடும் அளவுக்கு விவசாயிகளின் பிரச்சினையை பேசுகிறார்.

ஷாலினி பாண்டேக்கு முதல் தமிழ்ப் படம். காட்சிகள் அதிகமில்லை. வழக்கமான ஹீரோயின்போல தனது முகத்தைக் காட்டிவிட்டுப் போயிருக்கிறார்.

இவரையும் கூடவே கடைசிவரையிலும் வைத்திருக்க விரும்பி இவரும் அந்த வங்கிக்கு வந்திருப்பதுபோல திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். இது திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.

அந்த சிம்பன்ஸியின் சேட்டைகள் சிலவற்றை காட்டுகிறார்கள். ஆனால் இந்தக் கதைக்கு எதற்கு சிம்பன்ஸி என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. அது செய்யும் ஒரேயொரு உருப்படியான விஷயம் ரூபாய் நோட்டுக்களை பறக்க விடுவதுதான். துப்பாக்கி சப்தத்திற்கு சிம்பன்ஸி பயப்படும் என்றால் அதை எதற்கு அழைத்து வருகிறார்கள். லாஜிக் இடிக்கிறதே இயக்குநரே..?

கமல்ஹாசனின் தமிழ், ரஜினியின் அரசியல் பிரவேச தாமதம், ‘சிஸ்டம் சரியில்லை’ என்ற பேட்டி, செல்லூர் ராஜூவின் தெர்மகோல், வங்கி அதிகாரிகளின் கோல்மால், குடிநீர் டம்ளருக்கு செயினும், பேனாவுக்கு கயிறும் கட்டி வைத்திருப்பது.. என்று சகலத்தையும் கிண்டலடித்துத் தீர்த்திருக்கிறார்கள்.

மதன் குமார் இடையில் திடீரென்று மனம் மாறி 20 கோடியை மறந்துவிட்டு “விவசாயிகளின் மொத்தக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்..” என்பது திடீர் டிவிஸ்ட்டுதான் என்றாலும் அதை அழுத்தமாகச் சொல்லாத காரணத்தினால் ரசிகர்களின் மனதில் பதியவில்லையே இயக்குநரே..!

அந்த வங்கி அலுவலகம் செட் போடப்பட்டது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கலாம். சிம்பன்ஸியை எதிர்பார்த்து நம்பி வந்த வாண்டுகளை இப்படி ஏமாற்றியிருக்கக் கூடாது..!

தமிழ்ச் சினிமாவில் இப்போதைக்கு மிக, மிக சென்சிட்டிவ் மேட்டர் விவசாயிகளின் துயரம்தான். வரிசையாக அனைத்து படங்களிலும் விவசாயிகளின் கஷ்டத்தைச் சொல்லியே திரைக்கதையை நகர்த்தி வருகிறார்கள். எல்லாம் சரிதான்.

தற்கொலைவரைக்கும் போய் திரும்பிய ஏழை விவசாயி வங்கியைக் கொள்ளையடித்தாவது பணம் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்ற கொள்கைக்கு வருவது ஏற்கக் கூடிய விஷயமா..? விவசாயிகளுக்கு பெருமையளிக்கும் விஷயமா..? இயக்குநர் ஏன் இப்படி மதன் குமாரின் கேரக்டர் ஸ்கெட்ச்சை கொலை செய்திருக்கிறார் என்று தெரியவில்லை.

கடைசியில் மிகவும் எளிதாக விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வைப்பதாக காட்சியை வைத்திருப்பதுதான் படத்தில் இருக்கும் மிகப் பெரிய காமெடி.

அதே சமயம், இந்த விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையை இப்போதுவரையிலும் மத்திய, மாநில அரசுகள் காமெடியாகவே கையாள்வதும் உண்மைதான். இதை எடுத்துச் சொல்ல வேறு வகை திரைக்கதை வேண்டும்..!

ஆட் குறைப்பால் வேலையிழந்த சதீஷின் தற்கொலை முயற்சியையும் காமெடியாக்கிவிட்டார்கள். டாஸ்மாக்கில் சரளமாக நண்பர்கள் பேசிக் கொள்ளும் காட்சியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

யோகிபாபுவின் வருகை சில நிமிடங்கள் தியேட்டரில் நிமிர்ந்து உட்கார வைத்தாலும், அவரது முகத்தை வைத்து, தோற்றத்தை வைத்து செய்திருக்கும் நகைச்சுவையெல்லாம் தேவையில்லாதது. அதேபோல் யோகிபாபு மற்றவர்களை உடல், முகம், தோற்றம் இவற்றை வைத்து கிண்டல் செய்வதும் போரடிக்கிறது. இன்னும் எத்தனை படங்களில்தான் இதனை பார்த்துக் கொண்டேயிருப்பது..?

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவில் குறைவில்லை. கமர்ஷியல் படங்களுக்கே உரித்தான வசதி, வாய்ப்புகளோடு அனைத்துக் காட்சிகளையும் குறையில்லாமல் படமாக்கியிருக்கிறார். ஆனால் காட்சிகள்தான் கதையை அழுத்தமாகச் சொல்ல போதுமானதாக இல்லை. சி.எஸ்.சாமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.

வங்கிக்குள் அடிக்கும் கூத்துக்களில் இன்னும் கொஞ்சம் நகைச்சுவையை கூட்டி, விவசாயிகள் பற்றிய செண்டிமெண்ட்டையும் அதிகப்படுத்தியிருந்தால், “இது முழு காமெடி கலந்த கமர்ஷியல் படம்டோய்..” என்று நாமளும் சொல்லியிருக்கலாம்..!
error: Content is protected !!