‘கூர்க்கா’ படத்தில் யோகி பாபுவுடன் நடிக்கும் கனடா மாடல் எலிஸ்ஸா…!

‘கூர்க்கா’ படத்தில் யோகி பாபுவுடன் நடிக்கும் கனடா மாடல் எலிஸ்ஸா…!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கவிருக்கும் ‘கூர்க்கா’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வெளிநாட்டுப் பெண் ஒருவரும் நடிக்கவிருக்கிறாராம்.

4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சில முக்கிய நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத் தொகுப்பு பணியினை மேற்கொள்கிறார். மற்றக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கனடா நாட்டைச் சேர்ந்த மாடலிங் அழகியான எலிஸ்ஸாதான் யோகி பாபுவுடன் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அதிலும் அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகவுள்ளாராம்.

படத்தின் இயக்குநரான சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை பார்த்து, சலித்துப் போய், கடைசியாகத்தான் எலிஸ்ஸாவை தேர்வு செய்திருக்கிறார். 

இது குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் கூறும்போது, “கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் எலிஸ்ஸா. எல்லோரும் நினைப்பதுபோல, அவர் யோகிபாபுவின் ஜோடி இல்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கப் போவதில்லை” என்றார். 

டிசம்பரில் தொடங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முழுமூச்சில் முடிக்க, மொத்த குழுவும் முன் தயாரிப்பு மற்றும் ரிகர்சல் பணிகளில் இருக்கிறது.

ஒரு கடத்தல் டிராமாவை கதைக் கருவாய் கொண்ட இந்தப் படத்தில் நாய் ஒன்றும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில், படம் முழுக்க நாயகனோடு வலம் வரவுள்ளது.

இயக்குநர் சாம் ஆண்டன் தற்போது அதர்வா முரளி நடித்துள்ள ‘100’ படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அந்தப் பட வேலைகள் முடிந்தவுடன் இந்த ‘கூர்க்கா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.