‘கோலி சோடா-2’ படத்தை கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது..! 

‘கோலி சோடா-2’ படத்தை கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது..! 

ஒரு சில படங்கள்தான் நமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நம்முடைய விருப்ப பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும். அந்த வகையில் தமிழ்ச் சினிமா ரசிகர்களின் என்றென்றும் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் படம்தான் ‘கோலி சோடா’.

தற்போது இந்த ‘கோலி சோடா’வின் இரண்டாவது பாகமும் தயாராகி இந்தப் படம் தொடர்பான அனைத்து செய்திகளும் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. இந்த படத்தை ரஃப் நோட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

அழுத்தமான கதை மற்றும் புதிய விஷயங்களோடு வரும் ‘கோலி சோடா-2’ இந்த சீசனில் ரசிகர்களை கவரும் படமாக நிச்சயம் அமையும். ரசிகர்கள்  மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் வணிக வட்டாரங்களும்  ‘கோலி சோடா-2’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள். 

பிரபல விநியோகஸ்தரான கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சத்தியமூர்த்தி இந்த கோலி சோடா-2 படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறார் என்பது இந்தப் படக் குழுவை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குநர் விஜய் மில்டன் இது பற்றி கூறும்போது, “நல்ல கதைகள் மீதான நம்பிக்கையும், அவற்றை அப்படியே திரையில் கொண்டு வருவதும் ரசிகர்களை எப்போதுமே ஈர்த்திருக்கிறது.

‘கோலி சோடா’ படத்தின் வெற்றி எனக்குள் இருந்த நம்பிக்கையை ஊற்றெடுக்க வைத்து, உடனடியாக புது களத்தில் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க வைத்தது. ‘கிளாப் போர்டு’ சத்தியமூர்த்தி எங்களை போலவே படத்தின் மீது பெரும் நம்பிக்கையை வைத்து, எங்களுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 

மேலும், இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கும். குறிப்பாக சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் இருப்பது படத்தின் ஆன்மாவை உயர்த்தி, எல்லோரையும் வசீகரிக்கும்” என்றார்.

‘கோலி சோடா-2’ படத்தின் டிரெயிலரை நடிகர் விஜய் சேதுபதி வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடுகிறார்.