போதைகளின் கொடூரத்தைப் பற்றிப் பேச வரும் ‘கோலா’ திரைப்படம்..!

போதைகளின் கொடூரத்தைப் பற்றிப் பேச வரும் ‘கோலா’ திரைப்படம்..!

மோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் ‘கோலா’.

இந்தப் படத்தில் விக்கி ஆத்தியா, வைசாக் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக ஹரிணி நடித்துள்ளார். மற்றும் மோத்தி முகமது, தருண் மாஸ்டர், பாபூஸ், சந்தானலக்ஷ்மி, ஜீவா ரவி, ஜெய சுவாமிநாதன், கிருஷ்ணன், குமார், ஜெய்கணேஷ், அமுதவாணன், ஜுங்கா பாலா, ஸ்ரீகோ உதயா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கமில் ஜே.அலெக்ஸ், இசை – கண்மணி ராஜா, பின்னணி இசை  – எஸ்.எம்.பிரஷாந்த், பாடல்கள்  –  காதல் மதி, டாக்டர் கிருதியா, மோத்தி.பா, கலை  –  ராம்ஜி, படத் தொகுப்பு  – தீபக், நடன இயக்கம்  – ராதிகா, தயாரிப்பு மேற்பார்வை – லினா மோத்தி, எம்.எல்.பிஸ்மி, தயாரிப்பு – மோத்தி முகமது, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோத்தி.பா.

‘கோலா’ படம் பற்றி இயக்குநர் மோத்தி.பா பேசும்போது, “போதை’. இந்த ரெண்டெழுத்து சொல்தான்… உலகம் துவங்கிய காலம் துவங்கி இன்றுவரையிலும், இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் போதையிலும் பல வகைகள் உண்டு. பண போதை, அதிகார போதை, பெண் போதை, மது போதை, கடைசியாக புகழ் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும்வரை புகழ் போதைக்கு ஆசைப்படுகிறான். அதை அனுபவிக்கவும் செய்கிறான்.

இப்படி உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு போதையின் அடிமைகளாக இருப்பவர்கள்தான். விளக்கின் வெளிச்சத்தை தேடிச் சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

உண்மையில் ‘போதை’ என்பதே ஒரு மாயைதான். ஒருவித தற்காலிகமான அமைதியை… இன்னும் சொல்லப் போனால் நம்மை அழமாகவோ, ஒரு முகமாகவோ சிந்தித்து முடிவெடுக்கவிடாமல் செய்வதுதான் இந்த ‘போதை’யின் முக்கியமான வேலை.

இதை எத்தனையோ ஞானிகளும், மகான்களும் பலவிதங்களில் எடுத்துச் சொல்லியும் கேட்பாரில்லை. இருந்தாலும் ஒரு சிலரின் காதில் விழுந்து கருத்தில் நின்றால் அவர்களாவது போதையின் கொடூர பிடியிலிருந்து விடுபட்டு விட மாட்டார்களா என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கியிருக்கும் படம்தான் இந்த ‘கோலா’ திரைப்படம்.

பாடகர்கள் கானா பாலா, அந்தோணி தாஸன், மகாலிங்கம் மூவரும் தலா ஒரு பாடலைப் பாடி அதற்கு நடனமாடியிருக்கிறார்கள் அந்த மூன்று பாடல்களும் மிகப் பெரிய வரவேற்பைப் பெரும். படம் விரைவில் வெளியாக உள்ளது…” என்கிறார் இயக்குநர் மோத்தி.பா.




error: Content is protected !!