full screen background image

“நான் நிறைய முறை ‘கஞ்சா’வைப் பயன்படுத்திருக்கிறேன்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் ஒப்புதல் பேச்சு..!

“நான் நிறைய முறை ‘கஞ்சா’வைப் பயன்படுத்திருக்கிறேன்…” – இயக்குநர் கே.பாக்யராஜின் ஒப்புதல் பேச்சு..!

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலா’. அறிமுக இயக்குநரான மோத்தி.பா  எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம் இருவரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0L4A6349

இந்த விழாவில் படத்தின் இயக்குநரரான பா.மோத்தி பேசும்போது, “இந்தக் ‘கோலா’ படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்று கூறும் விழாதான் இவ்விழா. இசை அமைப்பாளருக்கும், நடனத்தை சிறப்பாக அமைத்து தந்தவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மாஸ்டர் தருண் அவர்களுக்கும், மற்றும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. எங்களது அழைப்பினை ஏற்று இந்த விழாவுக்கு வருகை தந்து படத்தின் பாடல்களை வெளியிட்டிருக்கும் இந்தியாவின் அடையாளமான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி..” என்றார்.

படத்தின் பாடல்களை வெளியிட்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்தக் ‘கோலா’ படத்தின் விழா நாயகனான மோத்தி.பா உள்பட அனைவருக்கும் பணிவான வணக்கம்.

விழா நாயகனான இசை அமைப்பாளர் எங்க ஊருக்காரர் என்பதால் எனக்கு மிகவும் சந்தோசம். படத்தில் பாடல்களுக்கு சிறப்பான நடனத்தை நடன இயக்குநர் ராதிகா அமைத்துள்ளார். இங்கே படத்தின் ஒளிப்பதிவாளரும் மிக சிறப்பாக பேசினார்.

k.bhagyaraj

எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல; மனசு சம்பந்தப்பட்டது. ஒரு நாள் ஒரு முடி வெட்டும் கடைக்கு சேவிங் செய்ய வந்த ரவுடி, அந்தக் கடைக்காரனிடம் ‘சேதாரம் இல்லாமல் செய்தால்தான் விடுவேன். இல்லையென்றால் உன்னை இங்கேயே வெட்டி விடுவேன்’ என்றானாம்.  இதைக் கேட்டு அந்த ரவுடிக்கு சேவிங் செய்துவிட அனைவருமே பயந்தார்கள்.

ஒரு சிறுவன் மட்டும் தைரியமாக முன் வந்து அந்த ரவுடிக்கு சேவிங் செய்து விட்டான். அந்த ரவுடி ஆச்சர்யப்பட்டு சிறுவனிடம் ‘உனக்கு என்னைப் பார்த்து பயம் இல்லையா?’ என்று கேட்டான். அதற்கு அந்தச் சிறுவன் “ஏதாவது கிராக்காகி நீங்கள் என்னை வெட்டுவதற்காக அரிவாளை எடுக்கும் முன்பாக, நான் என் கையில் இருக்கும் கத்தியை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தி விடுவேன்..” என்றானாம். ஆக துணிச்சலுக்கும், வயசுக்கும்கூட சம்பந்தமில்லை.

0L4A6392

கஞ்சா அடிப்பதைப் பற்றி இங்கே பல பேர் பேசினார்கள். நானே நிறைய முறை கஞ்சா அடித்திருக்கிறேன். நான் கோவையில் வசித்துவரும்போது என் நண்பர்கள் சிலர் சிகரெட்டில் கஞ்சாவைக் கலந்து கொடுத்தார்கள். அப்படியே அது எனக்கும் பழக்கமாகிவிட்டது.

சில நேரங்களில் அடித்த கஞ்சா நல்லவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறிய பிறகு எல்லாரும் கெக்கே பிக்கேன்னு காரணமே இல்லாமல் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போதுதான் யோசித்தேன். லைப்ல என்னென்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே. ஆனால், இப்படி இருக்கோமே என்று…! அன்றுதான் தோன்றியது. புத்தருக்கு போதி மரம் மாதிரி, எனக்கு போதை மரம்தான் புத்தி கொடுத்தது. அன்றோடு அந்தக் கஞ்சாவுக்கு விடை கொடுத்தேன். இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன்.

0L4A6350

தருண் மாஸ்டர் நல்லா பண்றார் என்று கேள்விப்பட்டு என் படத்தில் வேலை செய்ய அவரைக் கூப்பிட்டேன். அது பற்றிப் பேசுவதற்காக எனது அலுவலகத்திற்கு தருண் மாஸ்டர் வந்தார். வந்தவர் என்னுடைய அலுவலக அறையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். ‘ஏன்..?’ என்று கேட்டதற்கு, ‘இல்ல ஸார்.. எப்படியாவது இந்த ஆபிஸுக்குள்ள ஒரு நாளாவது நுழைய வேண்டும் என்பது என் கனவு. அது இன்னிக்குத்தான் இப்படி நிறைவேறியிருக்கு..’ என்றார். அவர் தொழிலை தொழிலாக செய்யக் கூடியவர்.

0L4A6403

தயாரிப்பாளர் மூர்த்தியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் என்னிடம், உங்களுடைய படங்கள்லேயே ‘முந்தானை முடிச்சு’ படம்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.’ என்றார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் என் காதோரம் வந்து, ‘எனக்குப் பிடிச்ச படம் சின்ன வீடுதான்’ என்றார். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கதைகள் பிடிக்கும்.

தயாரிப்பாளர் போலீஸ்காரர் என்பதால் அவருக்கு வாங்கித்தான் பழக்கம் என்று நினைத்தேன். ஆனால் இவர் அனைவருக்கும் சம்பளத்தைச் சரியாக கொடுத்திருக்கிறார். ஒரு போலீஸ்காரரே கதை எழுதி படத்தையும் இயக்கி இருப்பதால், இந்தக் ‘கோலா’ படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கும்னு நினைக்கிறேன்…” என்றார். 

Our Score