“கெத்து’ தமிழ் சொல்தான். வரிவிலக்கு கொடுக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் வைத்த குட்டு..!

“கெத்து’ தமிழ் சொல்தான். வரிவிலக்கு கொடுக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் வைத்த குட்டு..!

‘கெத்து’ என்பது தமிழ் சொல்தான் என்றும், இந்த படத்துக்கு வரிச் சலுகை வழங்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாகவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ என்ற படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கேட்டு தமிழக அரசிடம், இந்த நிறுவனம் விண்ணப்பம் செய்தது.

இதன்படி, தமிழக அரசு நியமித்த 6 பேர் கொண்ட குழு, கெத்து படத்தை பார்த்தது. பின்னர், “கெத்து’ என்ற சொல், தமிழ் சொல் இல்லை..” என்று 6 பேர் கொண்ட குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், இப்படத்துக்கு வரிவிலக்கு சலுகை வழங்க மறுத்து கடந்த ஜனவரி 14-ந்தேதி தமிழக வணிக வரித்துறை செயலர் அரசாணை வெளியிட்டார்.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், ரெட் ஜெயின்ட்  மூவிஸ் நிறுவனத்தின் மேலாளர் சரவணமுத்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், “கெத்து’ என்பது தமிழ் சொல்தான். திருப்புகழில்கூட இந்த வார்த்தை வருகிறது..” என்று கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் சார்பில் வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.துரைசாமி, “கெத்து’ என்பது தமிழ் வார்த்தைதான். ஆகவே ‘கெத்து’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்..” என்று உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதி அளித்த தீர்ப்பில், “கெத்து’ என்ற வார்த்தை தமிழ் இல்லை என்று படத்தை பார்த்த 6 பேர் கொண்ட குழு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அறிக்கையை கொடுத்துள்ளது.

 அதேபோல, தமிழ்நாடு வணிக வரித்துறைக்கு, கடந்த ஜனவரி 25-ம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கெத்து’ தமிழ் சொல் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள அகராதியில் ‘கெத்து’ என்ற வார்த்தை இருப்பதைகூட பார்க்காமல், இப்படி ஒரு முடிவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் வந்துள்ளனர். எனவே, இந்த கருத்தை ஏற்க முடியாது.

எனவே, அகராதியில் இந்த வார்த்தை இடம்பெற்று, அதற்கு அர்த்தமும் கூறப்பட்டுள்ளதால், ‘கெத்து’ என்ற சொல் தமிழ்தான் என்பதற்கு மனுதாரர்கள் சார்பில் பல ஆதார, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழ் அகராதிகளில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் வளர்ச்சித் துறையானது இந்த அகராதிகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் ‘கெத்து’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. அது கன்னட மொழி சொல் என்று கூறியுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த செயல்பாடு வேதனை அளிக்கிறது.

மனுதாரர் தன் விண்ணப்பத்தில் படத்தின் தலைப்பை ‘Gethu’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், இதன்படி பார்த்தால் கெத்து என்பது தமிழ் சொல் அல்ல என்றும், அதே நேரம் ‘Kethu’ என்று குறிப்பிட்டிருந்தால் அது பரிசீலிக்கப்பட்டிருக்கும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

வரிச் சலுகை கேட்டு மனுதாரர் விண்ணப்பித்திருக்கும் மனுவில் படத்தின் பெயரை ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி பார்த்தால் தமிழில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தையைத்தான் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

ஏனெனில் தமிழில் பெயர் வைக்கும் படத்திற்குத்தான் வரிச் சலுகை என்பதே நிபந்தனையாகும். அதை வைத்துப் பார்த்திருந்தால் ‘கெத்து’ தமிழ் வார்த்தை என்று கருதி வரிச்சலுகை வழங்கியிருக்கலாம். ஆனால் அரசு அவ்வாறு செய்யவில்லை.

மேலும், ஆங்கில வார்த்தையின் அடிப்படையில்தான் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது என்பதை தன்னுடைய அரசாணையில் தமிழக அரசு குறிப்பிடவில்லை. எனவே, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளின்படி இது தமிழ் சொல் அல்ல என்று அரசுத் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது.

அரசு கூறும் வாத்த்தை ஏற்றுக் கொண்டால் தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் எழுதும்போது ‘TAMILNADU’ என்றுதான் குறிப்பிடுகிறோம். இதன்படி பார்த்தால் ‘டமில்’ என்றுதான் வாசிக்க வேண்டும். ஒரு காலக்கட்டத்தில் ‘இது தமிழே இல்லை’ என்றுகூட கூறிவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆகவே ‘கெத்து’ என்பது தமிழ் சொல்தான் என்பதை உறுதி செய்கிறேன். அதேநேரம், இந்த திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் வழங்கியுள்ள சான்றிதழை கருத்தில் கொள்ளத் தேவையில்லை.

தமிழக வணிக வரித்துறை செயலர், எந்திரத்தனமாக செயல்பட்டு, இப்படத்துக்கு வரிச்சலுகை வழங்க மறுத்துள்ளார். எனவே, ‘கெத்து’ என்ற திரைப்படம் வரிச்சலுகை பெற தகுதி வாய்ந்ததுதான். இந்த படத்துக்கு வரிச் சலுகை வழங்க மறுத்து கடந்த ஜனவரி 14-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறேன்.

இந்த படம் வெளியான நாள் முதல் (ஜனவரி 14-ம் தேதி) படம் பார்க்க வந்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கேளிக்கை வரி தொகையை மனுதாரரிடம் அரசு ஒப்படைக்கவேண்டும்..” என்று கூறியுள்ளார்.