ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் – சினிமா விமர்சனம்

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் – சினிமா விமர்சனம்

டி.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் அதர்வா முரளி ஹீரோவாக நடித்திருக்கிறார். ரெஜினா கேஸண்ட்ரா, அதீதி போஹன்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணீதா நால்வரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

மேலும் சூரி, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, சோனியா வெங்கட், டி.சிவா, தீனா, லோகேஷ், நேகா மாலிக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எம்.சரவணன், இசை – டி.இமான், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், பாடல்கள் – யுகபாரதி, கலை இயக்கம் – வைரபாலன், சண்டை பயிற்சி – சிறுத்தை கே.கணேஷ், நடனம் – தினேஷ், ஒப்பனை – பி.எஸ்.குப்புசாமி, ஸ்டில்ஸ் – ஸ்டில்ஸ் ரவி, தயாரிப்பு நிர்வாகம் – என்.மகேந்திரன், நிர்வாகத் தயாரிப்பு – திலீபன் எம்.செங்கோட்டையன், பரஞ்சோதி துரைசாமி, இணை தயாரிப்பு – பி.எஸ்.ரகுநாதன், ஆர்.சந்திரசேகர், ஆர்.சரவணக்குமார், எழுத்து, இயக்கம் – ஓடம் இளவரசு.

நிறைய காதல்.. கொஞ்சம் நடிப்பு, மிகையில்லாத காமெடி என்று ஓரளவுக்கு உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு இருக்கிறது இந்த ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படம்.

காதல் மன்னன் ஜெமினி கணேசன் மீது அதிக பற்று கொண்ட அப்பா டி.சிவா பெற்றெடுத்த பிள்ளைதான் ஹீரோ அதர்வா. தனது மகனுக்கும் ஜெமினிகணேசன் என்றே பெயர் வைக்கிறார். வைத்த்து மட்டுமில்லாமல் ஜெமினியின் காதல் லீலைகளை புட்டுபுட்டு வைத்திருக்கிறார் அப்பா டி.சிவா.

ஜெமினியின் காதல் லீலைகளை கேட்டு, கேட்டு மனதில் காதல் மேல் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்ட ஹீரோ, ஜெமினியை போலவே கல்யாணத்தில் மட்டும் எதிர்ப்பாகவே இருக்கிறார்.

இப்போது கல்லூரியில் படிக்கும் பருவத்திலும் எந்தெந்த ஊரில், எந்த வீட்டில் குடி புகுந்தாலும் அக்கம் பக்கம் இருக்கும் பெண்களை காதலில் கவிழ்த்து கல்யாணத்தில் மட்டும் முடியாமல் பார்த்துக் கொண்டு எஸ்கேப்பாவதில் சமர்த்தர். இதனாலேயே போகிற இடங்களிலெல்லாம் இவரது குடும்பம் ஆறு மாதங்களுக்கு மேல் இருப்பதில்லை.

இப்போது ஹீரோ ஐடி கம்பெனியில் பொட்டி தட்டும் வேலையைச் செய்து வருகிறார். கை நிறைய காசு. எத்தனையோ இளம் பெண்களை காதலித்து கல்யாணம் என்றவுடன் எஸ்கேப்பானவர் இப்போது நிஜமாகவே ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு தயாராகியிருக்கிறார்.

தனது கல்யாண பத்திரிகையை தனது முன்னாள் காதலிகளிடத்தில் கொடுத்து அவர்களை அழைப்பதற்காக தான் முன்பு குடியிருந்த மதுரை வீட்டுக்கு வருகிறார் அதர்வா. அங்கே சுருளிராஜன் என்னும் மொக்கை ரவுடியை சந்திக்கிறார்.

அடுத்த வேளை டீக்கே அல்லாடும் அந்த ரவுடி, அதர்வாவை வைத்து அன்றைய பொழுதைக் கழிக்க நினைத்தவர், கீழ் வீட்டில் குடியிருந்த லாவண்யா என்னும் ரெஜினா கேஸண்ட்ராவின் முகவரியை பெற்றுத் தருகிறேன் என்று சொல்கிறார்.

இதற்காக தனது நெருங்கிய சகாவான மொட்டை ராஜேந்திரனை அவருடைய காருடன் வரச் சொல்லி அதில் பயணிக்கிறார்கள். செல்லும் வழியில் தனது முதல் காதல், இரண்டாவது காதெல்லாம் எப்படி உருவானது, வலுப்பெற்றது.. பின்பு வீழ்ந்தது என்றெல்லாம் ரீல், ரீலாக சொல்கிறார் அதர்வா.

அதர்வாவின் காதல் கதையைக் கேட்டபடியே பயணிக்கும் கதை கடைசியில் என்னவாகிறது..? முன்னாள் காதலிகளை பார்த்தாரா..? அவர்கள் அதர்வாவின் கல்யாணத்திற்கு வந்தார்களா என்பதுதான் திரைக்கதை.

முதல் காதலி ரெஜினா கேஸண்ட்ரா. இரண்டாவது காதலி அதீதி போஹன்கர், மூன்றாவது காதலி பிரணீதா, நான்காவது காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் என்று காதலிகளின் எண்ணிக்கை இருந்தாலும் அனைவருக்கும் சம அளவுக்கான காட்சிகளை வகைப்படுத்தி திரைக்கதை அமைத்து ஜெயித்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்.

இதில் ஐஸ்வர்யாவின் கல்யாண காதலை தவிர மற்ற எந்தக் காதலுமே காதல் இல்லை. வெறுமனே ஈர்ப்பாகவே தோன்ற வைக்கிறது. அதுவும் ரெஜினா மற்றும் அதீதியின் காதலில் அழுத்தமே இல்லை. ஆனால் அழகு உண்டு. ஆண்களுக்கே உரித்தான அயோக்கியத்தனத்தின் முதல்படியாக ஏமாற்றும் வித்தையில் அதர்வா காட்டும் திறமையே படத்தின் முன் பாகத்தை ரசிக்க வைத்திருக்கிறது.

பிற்பாதியில் பிரணீதாவை கவர்வதற்காக தான் செய்யும் அனைத்து செயல்களும் சப்தமேயில்லாமல் ஐஸ்வர்யாவையும் கவர்ந்திழுப்பது அதர்வாவே எதிர்பாராத விஷயம். ஆனால் குட் டிவிஸ்ட் என்றே சொல்லலாம்.

துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் கவுண்ட்டர் அட்டாக் செய்தபடியே இருக்கும் சுருளிராஜனான சூரிக்கு அல்வா கொடுக்கும்வகையில் காதல் கதையை அவ்வளவு ரசிப்பாக சொல்லும் அதர்வாவுக்கு ஒரு சபாஷ் என்றாலும் இயக்குதல் சில இடங்களில் சோம்பித் திரிவதால் பல காட்சிகளில் கொட்டாவிதான் வருகிறது.

அதிலும் டி.சிவா சம்பந்தப்பட்ட காட்சிகள் துவக்கத்தில் ஏனோ தானாவென்று படமாக்கப்பட்டிருப்பதால் என்னடா படம் என்று முணுமுணுக்கவும் வைத்திருக்கிறார்கள்.

சூரியின் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் பேச்சில் அவ்வப்போது கட்டுகளும், விட்டுகளும் தெறித்தாலும் அனைத்தையும் கிளைமாக்ஸ் காட்சி மறக்கடித்துவிட்டது. அப்படியொரு நான்ஸ்டாப் காமெடியை கிளைமாக்ஸின் கடைசி 5 நிமிட காட்சிகள் தோற்றுவித்தது படத்தை காமெடி படமாக காட்டிவிட்டது..!

சுல்தான் கட்டப்பாவாக வரும் மொட்டை ராஜேந்திரனும் வழக்கம்போல நடித்திருக்கிறார். இந்த முறை அவருடைய குரல் கொஞ்சம் இளகி மற்றவர்களை போல வந்திருப்பதால் வசனங்களை முழுமையாக கேட்க முடிந்த்து. அவருக்கு நமது நன்றிகள்.

ரெஜினாவின் அழகு, பிரணிதாவின் அழகையும் ரசிக்க முடிகிறது. கொஞ்சம் காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால் பார்த்தவுடன் காதல் என்று போவதால் காதல் காட்சிகள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. இறுதியாக கல்யாணத்திற்காக காத்திருப்பேன் என்று சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ் அனைவரின் மனதையும் தொட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

இடையில் அதீதியிடனான காதலுக்கு வழிவகை செய்யும்விதமாக அமைக்கப்பட்ட திரைக்கதை ஓகேதான். ஆனால் அதீதிதான் ஓகே இல்லை. இவர்தான் சூரிக்கு வாழ்க்கைப்பட்டவர் என்று கடைசியில் தெரிய வருவதுதான் உண்மையான காமெடி.

ரெஜினா, அதீதி, பிரணீதாவின் அப்பாமார்கள் என்ன சொன்னார்கள் என்பதை சஸ்பென்ஸில் வைத்திருந்து அதனை மண்டை உடைஞ்சிரும் போலிருக்கு.. சொல்லிச் தொலைங்கய்யா என்று கத்தும் அளவுக்கு சஸ்பென்ஸில் வைத்திருந்து கடைசியாக உடைப்பது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது.

டி.இமானின் இன்னிசையில் அனைத்து பாடல்களுமே கேட்கும் ரகம். ‘வெண்ணிலா தங்கச்சி’யும், ‘அம்முக்குட்டியே’வும் ரசிக்கப்படுகிறது. ‘தம்பி கட்டிங்கு’ இளசுகளை கவரும். ‘ஆஹா ஆஹா’வும், ‘கண்மணி’யும் ரம்மியமாக இருக்கிறது. பாடல் காட்சிகளை ரசனையோடு படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

நான்கு தேவதைகளை வைத்து படமெடுத்தால் எப்படியிருந்திருக்க வேண்டுமோ அப்படித்தான் பாடல் காட்சிகளும் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சரவணனின் திறமையில் படம் முழுவதிலும் ஒளிப்பதிவு என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் இருக்கிறது.

அதர்வாவுக்கு நிச்சயமாக இந்தப் படம் ஒரு மாறுபட்ட உணர்வை தந்திருக்கும். அவரால் காமெடியும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். பாவமான முகத்தையும், அப்பாவியான தோற்றத்தையும் காட்ட அவரும் தன்னாலனதையெல்லாம் செய்து காட்டியிருக்கிறார். அப்படியிருந்தாலும் கோர்வையான திரைக்கதை அமையாமல் சிரிக்க வைப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்திருப்பதால் படம் ஒட்டு மொத்தமாய் ஒருவித அயர்ச்சியையே தருகிறது.

முழுக்க, முழுக்க நகைச்சுவை படமென்று சொல்லிவிட்டு பாதியைத்தான் காமெடியாக தந்திருக்கிறார்கள்..!