full screen background image

தமிழ் நடிகையை அவதூறாக எழுதிய முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ..!

தமிழ் நடிகையை அவதூறாக எழுதிய முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ..!

முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு சமீப காலமாக சர்ச்சையான விஷயங்களை தொடர்ந்து பேசி வருகிறார்.

தனது பெயரிலேயே இருக்கும் ‘மார்க்கண்டேயன்’ என்கிற வார்த்தைக்கு அர்த்தம் சொல்வதை போல ‘நடிகைகள்’, ‘அழகு’ என்கிற விஷயத்தில் இந்த முன்னாள் நீதிபதி, ஏதோ ஆழ்ந்த தேடல் கொண்டவரை போலவே பேசி வருவது அவருடன் பணியாற்றிய முன்னாள், இன்னாள் நீதிபதிகளுக்கே ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

சென்ற வருடம் அரசியல் ரீதியாகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொத்துக் கணக்கை திடீரென்று கேட்டு அதிர்ச்சியாக்கினார்.

பாலிவுட் நடிகை கேத்ரினா கைபை, இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என்ற அவரது ஆலோசனையால் பல தனியார் தொலைக்காட்சிகளில் விவாத மேடைகள் சூடு பிடித்தன. 

மேலும், “இந்தியாவில் உள்ள அனைத்து அரசுப் பதவிகளுக்கும், சினிமா நடிகைகள் போன்ற அழகான பெண்களை தேர்வு செய்வதைத்தான் நான் ஆதரிப்பேன். ஏனென்றால் இந்திய அரசியல்வாதிகள் ‘நிலாவையே கொண்டு வருவேன்’ என வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால், மக்களின் நலனுக்காக எதுவுமே செய்ய மாட்டார்கள். இதனால்தான் நடிகைகளை பதவிகளில் உட்கார வைத்தால், மக்கள் அவர்களிடத்தில் எதையுமே எதிர்பார்க்க மாட்டார்கள்..” என்றார் கட்ஜூ.

“தற்போது நடைபெறவுள்ள டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கிரண்பேடிக்கு பதில் அதே கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகரான ஷாஜியா இல்மியை களமிறக்கியிருந்தால், அக்கட்சிக்கு ஓட்டுக்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்..”  என்றார் கட்ஜூ. 

“பல நாடுகளில் அழகான முகங்களுக்குதான் மக்கள் வாக்களிக்கின்றனர். என்னை போன்ற வாக்களிக்க விரும்பாத நபர்கள்கூட அழகான ஷாஜியா இல்மிக்குத்தான் வாக்களிப்பார்கள்..” என விளக்கம் வேறு கொடுத்துள்ளார் இந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. 

“ஒரு நீதிபதியாக இருந்தவர் இப்படியெல்லாம் பெண்களை அழகுப் பொருளாக நினைத்து பேசலாமா..?” என்று கட்ஜூ மீது கண்டனக் குரல்கள் எழுந்தவுடன், “உங்கள் அனைவரது பிரச்சினை என்னவென்று தெரியவில்லை. என்னைப் போன்ற வயதானவர்கள் அழகை ரசிக்கக் கூடாதா என்ன..? ஒரு அழகான பூவை நாம் ரசிப்பதாக கூறும்போது, அதனை நாம் பறிக்க நினைக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. தோட்டத்தில் இருக்கும் பூவை தூரத்தில் இருந்து ரசிப்பதில் தவறில்லை. தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்தால்தான் தவறு. அது போலத்தான் நான் அந்த பெண்ணின் அழகை ரசிப்பதாக கூறுகிறேன். அவரை குறித்து தவறாகப் பேசவில்லை. உரிமை எடுத்துக் கொண்டும்  நடக்கவில்லை” என்று கூறி சமாளித்தார்.

இந்த பரபரப்புகளுக்கிடையில் இன்றைக்கு அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி மீண்டும் தமிழகத்தில் நாளை காலை முதல் ஒரு பரபரப்பை உருவாக்கப் போகிறது. (அந்த முகநூல் பக்கம் அவருடையதுதான் என்று நினைத்தே இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது.)

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது முன்னணி தமிழ் நடிகை ஒருவர் தன்னை வீட்டில் வந்து சந்தித்ததாக இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் மார்க்கண்டேய கட்ஜூ. 

markendaya katju-fb-news

மார்க்கண்டே கட்ஜூ எழுதியுள்ளது இதுதான் :

“நான் அப்போது சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தேன். ஒரு நாள் மாலை ஒரு அழகான சினிமா நடிகை என்னைப் பார்க்க எனது இல்லத்திற்கு வந்திருந்தார். நல்ல மேக்கப்புடன் இருந்தார். எனது தனிப்பட்ட செயலாளரின் மூலமாக முறைப்படி அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தார். (நான் அவரைப் பற்றி எந்த அடையாளத் தவலையும் சொல்ல மாட்டேன், சொன்னால் அந்த நடிகை யார் என்பது தெரிந்து விடும்).

என்னிடம் அரை மணி நேரம் அவர் பேசினார். திரும்பவும் வந்து என்னைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். அவர் போன பிறகு, இவர் ஏன் என்னை வந்து சந்தித்தார் என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். நான் ஒன்றும் அவ்வளவு அழகான ஆண் அல்ல.. (சில பெண்கள் வேறு மாதிரியாக நினைக்கிறார்கள், அது வேறு கதை).

இருப்பினும் அந்த நடிகை மீது தமிழக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நான் கேள்விப்பட்டேன். அதில் உதவுவதற்காக அவர் என்னை வந்து சந்தித்திருக்கலாம் என நினைக்கிறேன்.

பிறகு எனது செயலாளரைக் கூப்பிட்டு ‘மறுபடியும் அந்த நடிகை அப்பாயிண்ட்மெண்ட் கேட்டால், எதையாவது சொல்லி பார்க்க முடியாது என்று கூறி விடுங்கள்..’ என சொல்லிவிட்டேன். அழகான நடிகைகளுடன் ‘களியாட்டத்தில்’ ஈடுபட்டார் தலைமை நீதிபதி என்ற பெயரை எடுக்க நான் விரும்பவில்லை..”

இவ்வாறு எழுதியுள்ளார் மார்க்கண்டேய கட்ஜூ.

மார்க்கண்டேய கட்ஜூ கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் 2005-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதிவரையிலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

இந்தக் காலக்கட்டத்தில் ‘பிரபல நடிகை’, ‘புல் மேக்கப்பில்’.. ‘தமிழகம் முழுவதும் அவர் மீது வழக்குகள்’ என்று கட்ஜூ சொல்லியிருக்கும் க்ளூக்களை வைத்து பார்த்தால் அந்த நடிகை யாரென்று யூகிக்க முடிகிறது..!

ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைச் சந்திக்க வருபவர்களை என்ன விஷயம் என்றுகூட கேட்காமலேயே கட்ஜூவின் செயலாளர் நேரம் ஒதுக்கிக் கொடுத்து வரச் சொன்னது எப்படி..?

அரை மணி நேரம் பேசியதில் என்ன பேசினோம் என்பதை மட்டும் மறைத்துவிட்டு “அவர் எதற்கு வந்தார் என்றே தெரியவில்லை. வழக்குகள் குறித்து பேச வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்..” என்று இப்போது கட்ஜூ சொல்வது கொஞ்சமாவது அவர் வகித்த பதவிகளுக்கும், அவரது தகுதிக்கும் பொருத்தமானதா..?

“என்ன விஷயமாக வந்தீர்கள்..?” என்று கேட்காமலேயே இவர் அரை மணி நேரத்திற்கு அப்படியென்ன பேசினாராம்..?

கடைசியாக “அழகான நடிகைகளுடன் ‘களியாட்டத்தில்’ ஈடுபட்டார் தலைமை நீதிபதி என்ற பெயரை எடுக்க நான் விரும்பவில்லை..” என்று சொல்லியிருக்கிறார்.

அந்த நடிகை யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. ஒரு முன்னாள் நீதிபதி.. நீதியரசர் என்று அழைக்கப்படுபவர்.. உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர். அதன் பின் பிரஸ் கவுன்சில் தலைவராக நான்காண்டு காலம் இருந்தவர்.. 68 வயது முதியவர்.. இப்படி ஒரு நடிகையை பொதுவெளியில் கேவலப்படுத்தும் தொனியில் எழுதலாமா..?

ஏதோ ஒரு விஷயமாக பேச வந்த நடிகையை இப்படி அவதூறாக சம்பந்தப்படுத்தி பேச இந்த பெரிய மனிதருக்கு எப்படி மனசு வந்ததோ தெரியவில்லை..?

வீடு தேடி வந்து பேசியவரிடம் என்ன பேசினோம் என்பதை வெளியில் சொல்லாமல், அப்போது மனதில் நினைத்த ‘களியாட்டத்தை’ இப்போதும் நினைத்து பெருமைப்படும் இந்த மனிதர் எப்படி பெரிய மனிதராக இருக்கிறார் என்பதும் புரியவில்லை..!

நீதித்துறையும் களங்கமடைந்து போய் இருக்கிறது..! இது மிகப் பெரிய உதாரணம்..!

Our Score