full screen background image

சின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..!

சின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 24 தொழிலாளர் அமைப்புகளின் ஊழியர்களும் சின்னத்திரை தொடர்களிலும், சின்னத்திரை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தத் தொழிலாளர் அமைப்புகளில் லைட் மேன்ஸ், டெக்னீசியன்ஸ், செட் உதவியாளர்கள் மற்றும் தயாரிப்பு உதவியாளர்கள், உடையலங்கார ஊழியர்கள், மேக்கப்மேன் சங்கத்தினர், வாகன ஓட்டுநர்கள், மகளிர் கலைஞர்கள், கேமிரா உதவியாளர்கள் என்று 8 அமைப்புகளைச் சேர்ந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

இவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அவர்களுக்கான ஊதியம் நிர்ணயிக்கப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் மூன்றாண்டு கால ஒப்பந்தம் முடிவு பெறுவதால் புதிய ஊதிய உயர்வு பற்றி, சின்னத்திரை  தயாரிப்பாளர்  சங்கமும்(STEPS), தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்  சம்மேளனமும்(FEPSI) இணைந்து  பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு பிரச்சினையை சுமூகமாக முடித்துள்ளன.

இந்த வகையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான பெப்சி தொழிலாளர்களுக்கான ஊதியம் பற்றிய பேச்சுவார்த்தை இரு தரப்பினரிடையேயும் சில நாட்களாகத் தொடர்ந்து நடந்து வந்தது. முடிவில் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இரு தரப்பினருமே ஏற்றுக் கொள்ளும்வகையில் முடிவாகியுள்ளதாம்.

இந்தப் புதிய ஊதிய உயர்வு பற்றி சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளரான டி.ஆர்.பாலேஷ்வரிடம் கேட்டபோது,இந்த ஒப்பந்தத்தின்படி பெப்சி ஊழியர்களின் சம்பள விகிதம் தற்போது வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தில் இருந்து கூடுதலாக 27 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இதனால் ஒவ்வொரு பெப்சி ஊழியருக்குமான மாதச் சம்பளம் ஒரு லட்சத்து 40 ரூபாயாக உயரும். இந்தச் சம்பள உயர்வினால் சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் 1 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். ஒட்டு மொத்தமாக சின்னத்திரை தொடர் தயாரிப்புத் துறையில் கூடுதலாக வருடத்திற்கு 12 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஊதிய ஒப்பந்தம் வரும் 2020 ஜனவரி முதல் மூன்றாண்டுகளுக்கு அமலில் இருக்கும். இந்தப் புதிய ஊதிய ஒப்பந்தத்தினால் நேரடியாக 10,000 பெப்சி ஊழியர்களும், 7,000 பேர் மறைமுகமாகவும் பயன் பெறுவார்கள்…” என்றார்.

இந்தப் பரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரிடையேயும் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ‘ஸ்டெப்ஸ்’ எனப்படும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் கையெழுத்திட்டுள்ளன.

fefsi-steps-agreement-1

fefsi-steps-agreement-2

fefsi-steps-agreement-3

இந்த உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று காலை பனையூரில் ஒரு சின்னத்திரை தொடரின் படப்பிடிப்பு அரங்கத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை  தயாரிப்பாளர்கள்  சங்கத்தின் (STEPS) சார்பில் அந்த அமைப்பின் தலைவரான திருமதி.சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர்  திருமதி.  குஷ்பு  சுந்தர், பொருளாளர் திரு.D.R.பாலேஷ்வர், இணைச் செயலாளர்  திரு.T.V.சங்கர், செயற்குழு உறுப்பினர் திரு.ஹேமந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்(FEFSI) சார்பாக அதன் தலைவர் திரு.R.K.செல்வமணி, பொதுச் செயலாளர் திரு.A.சண்முகம், பொருளாளர் திரு B.N.சுவாமிநாதன் மற்றும்  பெப்சி  நிர்வாகத்தை  சேர்ந்த  நிர்வாகிகள்  சிலரும்  கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் இரு சங்கங்களின் சார்பாக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நட்பு பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Our Score