full screen background image

எழுமின் – சினிமா விமர்சனம்

எழுமின் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை வையம் மீடியாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் நாயகனாகவும், நடிகை தேவயானி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், அழகம்பெருமாள், பிரேம்குமார், ரிஷி, மற்றும் சிறுவர், சிறுமிகளான பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, உள்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன், இசை – கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்-பா.விஜய், ஏ.எஸ்.தமிழனங்கு, மோகன் ராஜா, நடிகர் விவேக், படத் தொகுப்பு – கார்த்திக் ராம், கலை-எஸ்.ராம், சண்டை இயக்கம் – மிராக்கல் மைக்கேல் ராஜ்,  மக்கள் தொடர்பு – குமரேசன். தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வி.பி.விஜி.

தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களின் வாழ்க்கையைப் பேசும் படம் இது. கூடவே பள்ளி மாணவர், மாணவியருக்கு தற்காப்புக் கலையை சொல்லித் தர வேண்டியது அவசியம் என்றும் இத்திரைப்படம் வலியுறுத்துகிறது.

விவேகானந்தர் சொன்ன புகழ் பெற்ற வாசகமான, ‘எழுமின்.! விழிமின்..! குறிக்கோளில் வெல்லும்வரை  ஓயாதீர்…!’ என்பதை இளஞ்சிறார்களுக்கு எடுத்துரைக்கும் படமாகவும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெரும் தொழிலதிபரான விவேக்-தேவயானி தம்பதிகளுக்கு ஒரேயொரு மகன். பெயர் அர்ஜூன். படிப்பில் மட்டுமில்லாமல் குத்துச் சண்டை போட்டியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். இவனது இந்தக் குத்துச் சண்டை ஆர்வத்திற்கு விவேக் உற்ற துணையாக இருந்தாலும், அம்மா தேவயானியோ எதிர்ப்பாக இருக்கிறார்.

இருந்தாலும் போட்டியிடும் அனைத்து போட்டிகளிலும் அர்ஜூன் வெற்றிக் கோப்பைகளுடன் வீடு திரும்ப அதை மிகவும் ரசித்துப் பெருமைப்படுகிறார் தேவயானி.

விவேக்கிற்கு பிரவின், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா என்று ஆறு நண்பர்கள். இவர்களும் விளையாட்டு வீரர்கள்தான். குங்ஃபூ, சிலம்பம், கராத்தே, பாக்சிங் என ஒவ்வொரு விளையாட்டிலும் இவர்கள் திறமைசாலிகள்.

இவர்கள் அனைவரும் அழகம் பெருமாள் நடத்தி வரும் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள். மாவட்ட லெவல் போட்டிக்கு அர்ஜூனுடன் அவரது 6 நண்பர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அந்த 6 பேருமே பீஸ் கட்டவில்லை என்பதால் அவர்களை போட்டிக்கு அனுப்ப மறுக்கிறார் அழகம்பெருமாள்.

விவேக் மட்டும் மாவட்ட லெவல் போட்டிக்கு போய் வெற்றி பெறுகிறார். ஆனால் திடீரென்று போட்டி மேடையிலேயே கீழே விழுந்து உயிரிழக்கிறார். விவேக்கும், தேவயானியும் பேரதிர்ச்சியாகிறார்கள்.

இந்த நேரத்தில் அர்ஜூனின் நண்பர்கள் 6 பேரையும் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இருந்து வெளியேற்றுகிறார் அழகம் பெருமாள். இவர்களுக்கு ஆதரவு கொடுக்க முனையும் விவேக்கையும் அவர் அவமானப்படுத்த.. விவேக் தனது மனைவி தேவயானி சொல்லும் திட்டத்தின்படி தனது மகன் பெயரிலேயே ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமியைத் திறக்கிறார்.

அந்த அகாடமியில் இந்த 6 பிள்ளைகளும் சேர்ந்து பயிற்சி  பெறுகிறார்கள். மாவட்ட அளவிலான போட்டியில் அழகம் பெருமாளின் தில்லுமுல்லுவில் சிக்கி தோல்வியடைந்தாலும் அடுத்து நடக்கும் ஒரு போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு ஜெயிக்கிறார்கள்.

இந்த வெற்றியைப் பயன்படுத்தி ஸ்டேட் லெவல் போட்டிக்குத் தயாராகிறார்கள் மாணவர்கள். இதற்காக அவர்கள் திருப்பதிக்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் திடீரென்று அவர்கள் கடத்தப்பட்டு பிணையத் தொகை கேட்கப்பட விவேக் அதிர்ச்சியாகிறார்.

அடுத்து என்ன நடக்கிறது.. மாணவ, மாணவியரை கடத்தியது யார்.. அவர்களிடமிருந்து தப்பித்தார்களா.. குறித்த நேரத்தில் போட்டிக்கு போய்ச் சேர்ந்தார்களா.. என்பதெல்லாம் தியேட்டரில் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

தற்போது தினசரி செய்தித்தாள்களில் குழந்தைகள் கடத்தல், தனியாகச் செல்லும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆண்கள் போன்ற செய்திகள்தான் தவறாமல் இடம் பெறுகின்றன.

குழந்தைகள், மாணவ, மாணவிகளுடன் பெரும்பாலான நேரங்களில் அவர்களது பெற்றோர்கள் இருக்க முடிவதில்லை. மேலும், நகர வாழ்க்கையில் குழந்தைகளை வீதியில் விளையாட அனுப்பாமல் வீட்டுக்குள் அடைத்து வைக்கும் கலாச்சாரத்திலும் மக்கள் உள்ளனர். இதனால் ஒரு எதிர்பாராத தருணத்தில் தன்னைத் தற்காத்து கொள்வது எப்படி என்பது அந்தக் குழந்தைகளுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் தெரிவதில்லை.

இதற்குக் காரணம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை தரக்கூடிய தற்காப்பு கலைகளை இன்றைய சமூகம் கற்றுக் கொடுக்க தவறி வருகிறது. அபாயகரமான சூழ்நிலையில் அவர்களை தற்காத்துக் கொள்ள குறைந்தபட்சம் தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்துவிட்டால் நாட்டில் குற்றங்கள் தடுக்கப்படும் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். இந்தக் கருத்தைத்தான் இத்திரைப்படம் அழுத்தம், திருத்தமாக பதிவு செய்திருக்கிறது.

படத்தின் துவக்கத்திலேயே தமிழகம் மறந்து போன தற்காப்பு கலைகள் பலவற்றை எடுத்துக் காட்டி படத்தைத் துவக்கியிருப்பது சாலச் சிறந்தது. அந்தக் கலைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு அதில் ஏற்கெனவே சிறந்த பயிற்சியும், வீரர்களாகவும் இருப்பவர்களையே இந்தப் படத்திலும் அந்த விளையாட்டின் நாயகர்களாக நடிக்க வைத்திருக்கிறார்கள். இதற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!

மேலும் படத்தில் எந்த இடத்திலும் மது, சிகரெட், குத்துப் பாடல்கள் போன்றவைகள் இடம் பெறவில்லை., இதனை ஒரு டாக்குமெண்ட்ரி ஸ்டைலாக இல்லாமல் கமர்ஷியல் வடிவத்திலேயே உருவாக்கியிருப்பது தனி சிறப்பு.

ஏற்கெனவே இரண்டு படங்களில் நாயகனாக நடித்த அனுபவம் கொண்ட நடிகர் விவேக் இந்தப் படத்தில் ஒரு குணச்சித்திர நடிகராக மட்டுமே தெரிகிறார். பிள்ளைகளிடம் பாசமிக்கவராகவும், அவர்களை உற்சாகப்படுத்துபவராகவும் அவர் பேசும் அனைத்து பேச்சுக்களும் உத்வேகம் தருபவை.

தனது மகனை இழந்த தருணத்தில் “அவன் வந்திருவான். எந்திரிச்சு வருவான் பாரு…”  என்று அதனை ஜீரணிக்க முடியாமல் கலங்கும் தருணத்தில் கண் கலங்க வைத்திருக்கிறார். அதேபோல் பையன்களுக்காக அவரவர் பெற்றோர்களிடத்தில் வாதாடி, பெரும் பிரயத்தனப்பட்டு அவர்களை மறுபடியும் விளையாட வைக்கிறார்.  விவேக்கின் தேர்வு இத்திரைப்படத்திற்கு மிகச் சரியானது என்பதை தனது நடிப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார்.

தேவயானி விவேக்கின் மனைவியாக, அர்ஜூனின் அம்மாவாக.. தனது மகனின் மரணத்தைத் தாங்க முடியாதவராக.. தனது மகனின் நினைவாக ஒரு அகாடமியைத் துவக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுபவராக.. அனைத்து பையன்களையும் தனது பிள்ளைகளாக பாவிக்கும் தாயாக.. வருகின்ற காட்சிகளில் குறையில்லாமல் நடித்திருக்கிறார் தேவயானி.

மேலும் அழகம் பெருமாள் ஒயிட் காலர் கிரிமினலாக நடித்திருக்கிறார். பையன்கள் அனைவருமே நன்கு நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். ‘பசங்க’ சிவக்குமாரின் பொறுப்பான அப்பா என்கிற நடிப்பும் கவர்கிறது. சின்ன கேரக்டர்கள் என்றாலும் அனைத்து பெற்றோர்களுக்கும் சமமான வாய்ப்பளித்து அவரவர் நியாயங்களை பேச வைத்து பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர். துணை கமிஷனராக நடித்திருக்கும் பிரேம்குமாரும், வில்லன் நடிகர் ரிஷியும்கூட தப்பில்லாமல் தங்களது கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் ஒரு புதுமையாக தகவல் தொடர்புக்காக புறா டெக்னிக்கை பயன்படுத்தியிருப்பதும், அது தொடர்பான செய்திகள், பார்வையாளர்களுக்கு புதிய விஷயங்களாக இருப்பதும் சிறப்பு..!

படத்தில் சண்டை காட்சிகளில் அந்தக் குழந்தைகள் கற்றிருந்த தற்காப்புக் கலைகளே இப்போது அவர்களைக் காப்பாற்ற உதவுவதுபோல திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. இதுதான் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம். அதையும் நம்பும்படியாக அமைத்திருப்பதற்கு சண்டை இயக்குநர் மிராக்கில் மைக்கேலுக்கு நமது ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவில் குறையில்லாமல் படம் நெடுகிலும் ஒன்று போலவே இருக்கிறது ஒளியமைப்பு. கணேஷ் சந்திரசேகரின் இசையில் ஒலிக்கும் பாடல்கள் சிறுவர், சிறுமியருக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகின்றன. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் பளிச்சென்று தெரிகிறது.

இப்போதெல்லாம் சிறுவர், சிறுமியர் வீட்டுக்குள்ளேயே செல்போனை நோண்டிக் கொண்டும், டிவியில் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டுமே பொழுதைக் கழிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. ஓடியாடி விளையாடி உடலுக்கு பயிற்சி கொடுத்து அதன் மூலம் உடல் உறுப்புக்களுக்கு வலுவையும், மனதிற்குத் திடத்தையும், நட்புக்கு பழக்கத்தையும் உருவாக்குவதே நல்லது. அந்த உணர்வை இத்திரைப்படம் உருவாக்கியிருக்கிறது.

புதிய இயக்குநர்.. மனதை அரித்துவிடு்ம் அளவுக்கான இயக்கமாக இல்லாமல் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக இயக்கியிருக்கிறார். திரைக்கதையை அழகாக, குழப்பமில்லாமல் தெளிவாக அமைத்திருக்கிறார். சிற்சில லாஜிக் எல்லை மீறல்களை புறந்தள்ளி பார்த்தால் படத்தை பார்க்கும்படியாகவே படைத்திருக்கிறார் இயக்குநர்.

பெரியவர்கள் மட்டுல்ல.. சிறுவர், சிறுமியர்.. மாணவ, மாணவியர்கள் அனைவருமே அவசியம் பார்க்க வேண்டிய படமாக இது வந்திருக்கிறது.

“உங்கள் வீட்டில் ஆண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்கு பெண்மையை மதிக்கக் கற்றுக் கொடுங்கள். பெண் குழந்தை இருந்தால் அவளுக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுங்கள்” என்று இத்திரைப்படம் சொல்லும் நீதி, இன்றைய தமிழகத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்..!

அவசியம் குடும்பத்துடன் சென்று பாருங்கள் மக்களே..!  

Our Score