மலை வாழ் மக்களின் வாழ்க்கைக் கதையைப் பேச வரும் ‘எவனும் புத்தனில்லை’ திரைப்படம்..!

மலை வாழ் மக்களின் வாழ்க்கைக் கதையைப் பேச வரும் ‘எவனும் புத்தனில்லை’ திரைப்படம்..!

‘வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ்’ பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை.’

இந்த படத்தில் நபி நந்தி, சரத் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுரும் நடித்துள்ளார். மற்றும் ஒரு கெளரவ வேடத்தில் பாடலாசிரியர் சினேகன் நடித்துள்ளார்.

மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, சிங்கமுத்து, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவக்குமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், ‘காதல்’ சரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜா c.சேகர், இசை – மரியா மனோகர், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், பாடல்கள் – சினேகன், வசனம் – S.T.சுரேஷ்குமார், சண்டை இயக்கம் – அன்பு அறிவு,  மிராக்கில் மைக்கேல், நடனம் – அசோக்ராஜா, சங்கர், கலை இயக்கம் – A.பழனிவேல், இணை தயாரிப்பு – கே.டி.எஸ்.பாஸ்கர், K.சுப்ரமணியன்,  I.ஜோசப் ஜெய்சிங், M.கார்த்திகேயன், V.C.சூரியன், தயாரிப்பு  –   வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ், எழுத்து, இயக்கம் – S.விஜயசேகரன்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா இன்று மதியம் லீ மேஜிக் தியேட்டரில் நடை பெற்றது. இயக்குநர் எஸ்.விஜயசேகரனின் திரையுலக குருக்களான மூத்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வெளியிட இன்னொரு மூத்த இயக்குநரான தளபதி அதனை பெற்றுக் கொண்டார்.

vijayasekaran

இந்த நிகழ்ச்சியில் படம் பற்றிப் பேசிய இயக்குநர் எஸ்.விஜயசேகரன், “இதுவொரு ஜனரஞ்சகமான படம். இந்த உலகத்தில் யாரும் புத்தனாக வாழ்ந்துவிட முடியாது. உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் யாருக்காவது துரோகம் செய்துவிட்டுத்தான் வாழ்ந்தாக வேண்டும். அப்படித்தான் உலக அமைப்பியல் இருக்கிறது. இதைத்தான் இந்தப் படத்தில் நான் சொல்லியிருக்கிறேன்.

மேலும் இது அண்ணன், தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் திரில்லர் படமாக மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம். மலையில் வசிக்கும் விலங்குகளுக்கு அங்கேயிருக்கும் மக்களால் தீங்கு என்கிறார்கள். அது அப்படியல்ல. மலைவாழ் விலங்குகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு மனிதர்களுக்கும் உண்டு. அவர்கள் அங்கேதான் இருந்தாக வேண்டும்.

அந்த மலை வாழ் மக்களின் வாழ்க்கையில் விளையாடும் அரசியல் சக்திகளின் சதியை இந்தப் படத்தில் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறேன். படம் மூணாறு அருகில் ஒரு மலை உச்சிப் பகுதியில் படமாக்கப்பட்டது. படம் பிடிக்கப்பட்ட 40 நாட்களும் அனைத்து நடிகர், நடிகைகளும் அங்கே கிடைத்த குறைந்தபட்ச வசதியையும் பொறுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..” என்றார்.