கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்திற்கான தடை நீக்கம்..!

கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்திற்கான தடை நீக்கம்..!

கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘பாபநாசம்’ படத்தை வெளியிட விதித்திருந்த தடையை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று விலக்கிக் கொண்டுள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘திரிஷ்யம்’. இதே படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். கமல்ஹாசன், கவுதமி, சார்லி , கலாபவன் மணி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து ஜோஸப் இயக்கியிருக்கிறார். 

சில மாதங்களுக்கு முன்பு சதீஷ்பால் என்ற திரைப்பட இயக்குநர், திரிஷ்யம் படத்தின் கதை தான் எழுதிய ‘ஒரு மழை காலத்தில்’ என்னும் நாவலில் உள்ள கதைதான் என்றும், திரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர்கள் தனது அனுமதியில்லாமல் தனது கதையைத் திரைப்படமாக்கிவிட்டார்கள். எனவே திரிஷ்யம் படத்தின் தமிழ் பதிப்பான பாபநாசம் படப்பிடிப்பை நிறுத்தக் கோரியும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் பாபநாசம் படப்பிடிப்பிற்கு தடை விதித்தது.

தயாரிப்பாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த தடையுத்தரவை விலக்கினார். பாபநாசம் படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் எர்ணாகுளம் 2-வது நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்பால் தொடர்ந்திருந்த இவ்வழக்கினை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார். 

இதனால் ‘பாபநாசம்’ படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளது. ‘பாபநாசம்’ படத்தின் இசை மற்றும் பட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுமென்று தயாரிப்பு தரப்பினர் இன்றைக்குக் கூறியுள்ளனர்.




error: Content is protected !!