கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘பாபநாசம்’ படத்திற்கு கோர்ட்டு தடையுத்தரவு..!

கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘பாபநாசம்’ படத்திற்கு கோர்ட்டு தடையுத்தரவு..!

‘உத்தமவில்லனு’க்கு பின்பு கமல்ஹாசன் நடிக்கவிருந்தது ‘திரிஷ்யம்’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில்தான்.. அடுத்த மாதத் துவக்கத்தில் துவங்கவிருந்த இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு எர்ணாகுளம் நீதிமன்றம் நேற்று முன்தினம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தச் செய்தி பற்றி ஏற்கெனவே கடந்த ஜூலை மாதமே நாம்  செய்தி   வெளியிட்டிருந்தோம்.

மலையாள திரைப்பட இயக்குநரான சதீஷ்பால், “நான் எழுதிய ‘ஒரு மழைக் காலத்து’ என்ற நாவலில் இருந்துதான் ‘திரிஷ்யம்’ படத்தின் கதை எடுத்தாளப்பட்டிருக்கிறது. நான் இந்தக் கதையை வைத்து தமிழில் ‘சென்னை கிரைம் ஸ்டோரி’ என்ற பெயரில் படமெடுப்பதாக இருந்தேன். இப்போது ‘திரிஷ்யம்’ படத்தின் இயக்குநர் ஜீது ஜோஸப்பே தமிழில் இதனை படமாக்கப் போவதாக அறிகிறேன். என் அனுமதியில்லாமல் அவர் படமெடுக்கக் கூடாது.. அதற்கு தடை விதிக்க வேண்டும்…” என்று கேட்டு எர்ணாகுளம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சதீஷ் பால் எழுதிய ‘ஒரு மழைக் காலத்து’ என்ற அந்த நாவலைப் படித்துப் பார்க்க ஒரு மாத கால அவகாசம் எடுத்துக் கொண்டார் நீதிபதி. இதன் பின்பு ‘திரிஷ்யம்’ படத்தையும் பார்த்திருக்கிறார்.

இதன் பின்பு சென்ற வெள்ளியன்று அவர் அளித்த இடைக்கால தீர்ப்பில், “டைரக்டர் சதீஷ் பாலின் கதையை மையமாக வைத்துதான் ‘திரிஷ்யம்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. எனவே ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் எடுக்க கூடாது.  அப்படி எடுக்க வேண்டும் என்றால், இயக்குனர் ஜீது ஜோசப் 10 லட்சம் ரூபாயை இந்த நீதிமன்றத்தில் கட்ட வேண்டும்..” என்று தீர்ப்பளித்திருக்கிறார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து திரிஷ்யம் படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான ஜீது ஜோஸப், கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன..!

“இப்படி செய்தால் வழக்கு முடிய நீண்ட நாட்களாகும்.. அதோடு தமிழ் ரீமேக்கின் ஷூட்டிங்கை தொடங்கவும் முடியாது என்பதால் 10 லட்சம் ரூபாயை இப்போதைக்கு கட்டிவிட்டு ஷூட்டிங்கை நடத்திவிடலாம்.. கதை உரிமை யாருடையது என்பதை கோர்ட் விசாரணையின்போது பார்த்துக் கொள்ளலாம்…” என்று தமிழ் ரீமேக் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இயக்குநருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாம்..

என்ன நடக்கப் போகிறது என்பது இந்த வாரம் தெரிந்துவிடும்..!