கஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்

கஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செங்கோடன் துரைசாமி தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘இ.பி.கோ. 302.’ 

இந்தப் படத்தில் நடிகை கஸ்தூரி கதையின் நாயகியாக, ‘துர்கா ஐ.பி.எஸ்.’ என்கிற பவர்புல்லான ஒரு போலிஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு கதாநாயகனுக்கு உருவாக்கப்படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இளம் காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா.. இருவரும் அறிமுகமாகியிருக்கிறார்கள். மற்றும் வையாபுரி, ராபின் பிரபு, போண்டாமணி, வின்ஸ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – தண்டபாணி, இசை – அலெக்ஸ் பால், படத் தொகுப்பு – காளிதாஸ், கலை இயக்கம் – மணிமொழியான், நடன இயக்கம் – தினா, சண்டை இயக்கம் -தீப்பொறி நித்யா, பாடல்கள் – முத்துவிஜயன். தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர், இணை தயாரிப்பு – ஆர்.பிரபு, தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி, எழுத்து, இயக்கம் – சலங்கை துரை.

இவர் ஏற்கெனவே கரண் நடித்து வெற்றி பெற்ற ‘காத்தவராயன்’ என்கிற படத்தை இயக்கியவர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் சலங்கை துரை பேசும்போது, “கஸ்தூரி காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் பகுதியில் மூன்று வழக்குகள் வருகின்றன. முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாதபடி   படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது. செத்தவன் யார் என்றும் தெரியவில்லை. கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை.

அடுத்த வழக்கு.. காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடி வந்த இளம் ஜோடிகள். வெளியே போனால் ஜாதி கொலையாகக் கூடிய வாய்ப்புள்ள பிரச்சனை.

இன்னொரு படுகொலை வழக்கு. இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை. அந்த முடிச்சை அவிழ்க்கிற துர்கா ஐ.பி.எஸ்.தான் கஸ்துரி. ரொம்பவும் பவர்புல்லான வேடம் அவருக்கு. அவர் நிறைவாக செய்திருக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

இந்த படம் நடந்து கொண்டிருக்கும்போதே  புதுமுகம் நிர்மல்ராஜ் என்பவரை வைத்து ‘எதிர்வினை’ என்கிற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறேன். அதையும் இதே செளத் இந்தியன் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம்தான் தயாரிக்கிறது. இரண்டு திரைப்படங்களும் தரமான படைப்புக்களாக உருவாகியிருக்கின்றன…” என்றார் இயக்குநர் சலங்கை துரை.