23 நாட்களில் தயாரான ‘என் காதலி சீன் போடுறா’ திரைப்படம்..!

23 நாட்களில் தயாரான ‘என் காதலி சீன் போடுறா’ திரைப்படம்..!

சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஜோசப் பேபி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘என் காதலி சீன் போடுறா.’

இந்தப் படத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ்   நாயகனாக  நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். ‘ஆடுகளம்’ நரேன்,  மனோபாலா, அஞ்சலி அம்மா, ‘அம்பானி’ சங்கர்,  தியா,  தென்னவன், வையாபுரி  ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.   

ஒளிப்பதிவு – வெங்கட், இசை – அம்ரீஷ், பாடல்கள் – ராம்சேவா, ஏகாதசி, கலை –அன்பு, நடனம் – சாண்டி, T.முருகேஷ், சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வா, படத் தொகுப்பு – மாரி, தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி, தயாரிப்பு – ஜோசப் பேபி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ராம் ஷேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்த ‘டீக்கடை பெஞ்ச்’ என்கிற படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் ராம் ஷேவா பேசும்போது, “ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க, முழுக்க காமெடியாக இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம். 

நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும். சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டுவிடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம்தான் இது.

இதை காமெடியாகவும், கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறோம். மனோபாலா காமெடியில்  கலக்கி இருக்கிறார்.  நான்கு பாடல்களையும் வெவ்வேறுவிதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். ‘சின்ன மச்சான்’ பாடலை தொடர்ந்து செந்தில் கணேஷ் –  ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள்.  ‘நிலா கல்லுல செதுக்கிய சிலையா’   என்று துவங்கும் அந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த  ஒரு ஐயமும் இல்லை.

வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். அதற்கு பக்க பலமாக இருந்த என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட் மற்றும் படக் குழு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது.  படம் விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார் இயக்குநர் ராம் ஷேவா.




error: Content is protected !!