எடிட்டர் பீட்டர் பாபியா தயாரிப்பில் லயோலா கல்லூரி மாணவர்களின் ‘எமோஜி’

எடிட்டர் பீட்டர் பாபியா தயாரிப்பில் லயோலா கல்லூரி மாணவர்களின் ‘எமோஜி’

எடிட்டர் மோகனிடம் சிஷ்யராகவும், பாலு மகேந்திராவிடம் உதவி எடிட்டராகவும் பணி புரிந்தவர் பீட்டர் பாபியா.

இவர் ‘பூமணி’ படத்தின் மூலம் எடிட்டராகி, கமலின் ‘ஆளவந்தான்’,  ‘சதிலீலாவதி’,  ‘புதுமைப்பித்தன்’,  ‘கள்ளழகர்’, ‘டிஸ்யூம்’,  ‘ரோஜா கூட்டம்’,  ‘கலாபக் காதலன்’,  ‘காத்தவராயன்’ உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர்.

இப்போது இவர் முதன்முறையாக மிராக்கிள் தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனத்தின் மூலம் ‘எமோஜி’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஜித்து, சதீஷ், சிவநேசன் ஆகிய மூவரும் நாயகர்களாகவும் சாய் நாயகியாகவும்  நடிக்கிறார்கள். நால்வருமே லயோலா கல்லூரி மாணவர், மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் டெக்னிக்கல் மற்றும் கதை, திரைக்கதை விஷயங்களை கவனிப்பவர்கள் கீதா, ஜபா, வேணி மூவரும். படத்தை இயக்குபவர் வெங்கட்.. படம் சம்மந்தப்பட்ட அனைவருமே லயோலாவில் படிக்கும் மாணவர்கள். தயாரிப்பு   -  மிராக்கிள் தியேட்டர்ஸ்  பீட்டர் பாபியா.

படத்தின் கதையே வித்தியாசமானது.. ஷார்ட் பிலிம் எடுக்க நினைக்கும் நால்வரும் இன்றைய தலைமுறையினரின் அனைத்து அம்சங்களும் கொண்டவர்கள். துடிப்புள்ள அவர்களின் குறிக்கோள் அதிகப்படியான லைக்குகளை அள்ள வேண்டும் என்பதுதான்.

என்ன வழி என்று யோசிகிறார்கள்... முக்கிய பிரமுகர் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை கதைக் கருவாக்குகிறார்கள். பிரச்னையின் வீரியம் தெரியாமல் தொட்ட அந்த விஷயம் எப்படி விபரீதமானது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா என்பது கதைக் கரு.

இன்றைய தலைமுறையினரின் தகவல் பரிமாற்றத்தில் உள்ள விஷயமே ‘எமோஜி’. அதாவது குறியீட்டின் மூலம் தங்களது எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும் வழிமுறையே ‘எமோஜி’.  ஆக்‌ஷன் படமாக உருவாகும் ‘எமோஜி’ படப்பிடிப்பு சென்னை, மும்பை, ஊட்டி, கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.