திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’

திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’

‘ரேடியண்ட் விஷூவல்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் ‘டம்மி ஜோக்கர்’ என்ற திகிலுடன் கூடிய நகைச்சுவை படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் எஸ்.கே.ராமு  நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இதில் நம்ம குமார், ராஷ்மி, விஷ்வா, ‘குட்டிப் புலி’ சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி, தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், சைக்கோ தர்மா, நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இசை – ஆலன் பிரகாஷ், ஒளிப்பதிவு – திருப்பதி ஆர்.சாமி, பாடல்கள் – ஜி.வேணுகோபால், ராஜா, படத் தொகுப்பு – ராம், நடன இயக்கம் – ஜாய் மதி, மக்கள் தொடர்பு – விஜயமுரளி, கிளாமர் சத்யா, எழுத்து, இயக்கம் – வினோ நாகராஜன்-என் கல்யாணசுந்தரம்.

தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ படத்தை இயக்கிய கிருஷ்ணன் – பஞ்சு,

வெள்ளி விழா கொண்டாடிய ‘அன்னக்கிளிட படத்தை இயக்கிய தேவராஜ் – மோகன்.

நூறு நாட்கள் ஓடிய ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தை இயக்கிய பாரதி – வாசு .

‘உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி.

‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி.

இவர்களது வரிசையில்  புதிய இரட்டை இயக்குநர்களாக வினோ நாகராஜன்_ என்.கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள்.

இந்தப் படத்தை பற்றி இயக்குநர்கள் இருவரும் பேசும்போது, “22 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறான் ஒருவன்.

அவனுக்கு அந்த ஊரிலேயே இருக்கும் கதாநாயகனும், நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊரில் அவனது குடும்பத்தைப் பற்றி விசாரிக்கையில் ஒரு பேய் பங்களாவை காட்டுகின்றனர் ஊர் மக்கள்.

அந்தப் பங்களாவில்தான் தேடி வந்தவனின் அப்பா கடைசியாக இருந்ததாகச் சொல்கிறார்கள். மேலும், அந்தப் பங்களாவினுள் தங்கப் புதையல் இருப்பதாகவும் சொல்கிறார்கள் மக்கள்.

நமக்கு புதையலாவது கிடைக்குமே என்றெண்ணி தந்தையைத் தேடி வந்தவனுக்கு உதவுவது போல் நாயகனும், அவனது நண்பர்கள் பலரும் அந்த பங்களாவுக்குள் நுழைகின்றனர். இவர்கள் உள்ளே நுழைந்தவுடன் பங்களாவின் கதவு உள் பக்கமாக மூடிக் கொள்கிறது. எவ்வளவோ முயன்றும் அவர்களால் கதவைக் திறக்க முடியவில்லை. அனைவரும் திகிலடைகின்றனர்.

அதன் பிறகு நிகழும் பரபரப்பான சம்பவங்களால் அவனது தந்தையைக் கண்டு பிடித்தார்களா..? புதையல் அவர்களுக்கு கிடைத்ததா..? இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் செம காமெடிக்கு மாறும்.

தற்போது தமிழ்ச் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபலமான 22 நடிகர்கள்போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை அழைத்து வந்து இதில் நடிக்க வைத்துள்ளோம். அவர்கள் அடிக்கிற லூட்டி காமெடியின் உச்சகட்டமாக இருக்கும்.

காரைக்குடியிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் இந்தப் படத்தை படமாக்கி உள்ளோம்…” என்றார்கள் இரட்டை இயக்குநர்கள்.




error: Content is protected !!