full screen background image

இயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..!

இயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..!

தமிழ் சினிமாவின் முக்கியமான கதாசிரியரும், இயக்குநரும், நடிகருமான விசு என்னும் விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் இன்று மாலை சென்னை பெரும்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.

தமிழ்த் திரையுலகில் ஒரு கதாசிரியராக அறிமுகமாகி, பின்பு நடிகர், இயக்குநர் எனத் தன் திறமைகளை முழுமையாக நிரூபித்தவர் விசு.

துவக்கக் காலத்தில் தனது சகோதரரான ராஜாமணியுடன் இணைந்து நாடகத்தில் நடித்தும், எழுதி, இயக்கியும் வந்தார் விசு. இவருடைய ‘பட்டினப் பிரவேசம்’ நாடகத்தை ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் படமாக உருவாக்கியபோது அதில் கதாசிரியராக அறிமுகமானார் விசு.

இதனைத் தொடர்ந்து ‘சதுரங்கம்’, ‘அவன் அவள் அது’, ‘மழலை பட்டாளம்’, ‘தில்லு முல்லு’, ‘நெற்றிக்கண்’, ‘கீழ்வானம் சிவக்கும்’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘கண்மணிப் பூங்கா’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘மணல் கயிறு’, ‘புதுக்கவிதை’, ‘டெளரி கல்யாணம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘புயல் கடந்த பூமி’, ‘ராஜதந்திரம்’, ‘வாய் சொல்லில் வீரனடி’, ‘நாணயமில்லாத நாணயம்’,  ‘புதிய சகாப்தம்’, ‘அவள் சுமங்கலிதான்’, ‘கெட்டி மேளம்’, ‘சிதம்பர ரகசியம்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘அடடே ஆதாரம்’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘காவலன் அவன் கோவலன்’, ‘பெண்மணி அவள் கண்மணி’, ‘சகலாகலா சம்பந்தி’, ‘வரவு நல்ல உறவு’, ‘வேடிக்கை என் வாடிக்கை’, ‘உண்மை ஊஞ்சலாடுகிறது’, ‘நீங்க நல்லாயிருக்கணும்’, ‘பட்டுக்கோட்டை பெரியப்பா’, ‘வா மகளே வா’, ‘மீண்டும் சாவித்திரி’, ‘சிகாமணி ரமாமணி’, ‘மணல் கயிறு-2’  ஆகிய 37 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார்.

இவற்றில் 1982-ம் ஆண்டு வெளிவந்த ‘கண்மணிப் பூங்கா’ படம்தான் இவர் இயக்கிய முதல் படமாகும். இதன் பிறகு ‘மணல் கயிறு’, ‘டெளரி கல்யாணம்’, ‘புயல் கடந்த பூமி’, ‘ராஜதந்திரம்’, ‘வாய் சொல்லில் வீரனடி’, ‘நாணயமில்லாத நாணயம்’, ‘புதிய சகாப்தம்’, ‘அவள் சுமங்கலிதான்’, ‘கெட்டி மேளம்’, ‘சிதம்பர ரகசியம்’, சம்சாரம் அது மின்சாரம், ‘அடடே ஆதாரம்’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘காவலன் அவன் கோவலன்’, ‘பெண்மணி அவள் கண்மணி’, சகலகலா சம்பந்தி, ‘வரவு நல்ல உறவு’, ‘வேடிக்கை என் வாடிக்கை’, ‘உண்மை ஊஞ்சலாடுகிறது’, ‘நீங்க நல்லாயிருக்கணும்’ ‘பட்டுக்கோட்டை பெரியப்பா’, ‘வா மகளே வா’, ‘மீண்டும் சாவித்திரி’, ‘சிகாமணி ரமாமணி’ ஆகிய 25 படங்களை இயக்கியிருக்கிறார்.

தான் இயக்கிய பல படங்களில் நடித்த விசு. தான் இயக்கிய படங்கள் மட்டுமில்லாமல் வேறு பல இயக்குநர்கள் இயக்கிய படங்களிலும் ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்தியவர்.

‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘கண்மணிப் பூங்கா’, ‘மணல் கயிறு’, ‘புதுக்கவிதை’, ‘டெளரி கல்யாணம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘புயல் கடந்த பூமி’, ‘ராஜதந்திரம்’, ‘வாய் சொல்லில் வீரனடி’, ‘நாணயமில்லாத நாணயம்’, ‘ஊருக்கு உபதேசம்’, ‘புதிய சகாப்தம்’, ‘அவள் சுமங்கலிதான்’, ‘கெட்டி மேளம்’, ‘சிதம்பர ரகசியம்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘ஊமை விழிகள்’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’, ‘ஆனந்தக் கண்ணீர்’, ‘வீடு மனைவி மக்கள்’, ‘மாப்பிள்ளை சார்’, ‘உழைப்பாளி’, ‘சின்ன மாப்ளே’, ‘வனஜா கிரிஜா’, ‘வாங்க பார்ட்னர் வாங்க’, ‘மாயாபஜார்’, ‘காட்பாதர்’, ‘இரட்டை ரோஜா’, ‘நேசம்’, ‘அரவிந்தன்’, ‘அடிமை சங்கிலி’, ‘வாசுகி’, ‘அருணாச்சலம்’, ‘சிஷ்யா’, ‘வாய்மையே வெல்லும்’, ‘பகவத் சிங்’, ‘அன்புள்ள காதலுக்கு’, ‘மன்னவரு சின்னவரு’, ‘காக்கை சிறகினிலே’, ‘வானவில்’, ‘கிருஷ்ணா கிருஷ்ணா’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘வடுகப்பட்டி மாப்பிள்ளை’, ’லூட்டி’, ‘தித்திக்குதே’, ‘மகா நடிகன்’, ‘ஜி’, ‘சீனாதானா 001’, ‘நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘இன்னொருவன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’, ‘அடடே ஆதாரம்’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘காவலன் அவன் கோவலன்’, ‘பெண்மணி அவள் கண்மணி’, ‘சகலாகலா சம்பந்தி’, ‘வரவு நல்ல உறவு’, ‘வேடிக்கை என் வாடிக்கை’, ‘உண்மை ஊஞ்சலாடுகிறது’, ‘நீங்க நல்லாயிருக்கணும்’, ‘பட்டுக்கோட்டை பெரியப்பா’, ‘வா மகளே வா’, ‘மீண்டும் சாவித்திரி’, ‘சிகாமணி ரமாமணி’, ‘மணல் கயிறு-2’ ஆகிய 69 திரைப்படங்களில் ஒரு நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்.

குடும்பக் கதைகள் என்றால் அது விசுதான் என்கிற டிரேட் மார்க் அடையாளத்தோடு கடைசிவரையிலும் தன்னுடைய ஸ்டைலை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தவர் விசு.

தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு பிறகு அதிகமான குடும்பக் கதைகளை வழங்கியவர் இயக்குநர் விசுதான்.

இவருடைய கதையிலும், நடிப்பிலும் வெளிவந்த ‘குடும்பம் ஒரு கதம்பம்’ திரைப்படம்தான் இவருடைய பெயரை தமிழ்நாட்டில் பிரபலப்படுத்திய முதல் திரைப்படம். இதன் பின்பு வந்த ‘மணல் கயிறு’ தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகளுக்கு டிரெண்ட் செட்டரானது.  

அத்திரைப்படத்தின்  மூலம்தான் எஸ்.வி.சேகருக்கு தமிழ்த் திரையுலகத்தில் நிரந்தரமாக ஒரு இடம் கிடைத்தது. மாப்பிள்ளையான எஸ்.வி.சேகர் போடும் 8 நிபந்தனைகள் பற்றி தமிழக மக்களிடையே ஒரு பெரிய பட்டிமன்றப் பேச்சையே உருவாக்கியது இத்திரைப்படம்.

1986 ஜீலை 18-ம் தேதி ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் விசு இயக்கத்தில் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் தமிழகத்தில் பட்டி, தொட்டியெங்கும் வெற்றியைப் பெற்றது. அதோடு முதல் முறையாக மத்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தங்கத் தாமரை விருதையும் பெற்றது. அந்த வருடத்திற்கான அனைத்து திரைப்பட விருதுகளையும் இந்த ஒரு படமே வாரிச் சுருட்டியது தமிழ்ச் சினிமாவில் முக்கியமான தருணம்.

இதன் பின்பும் அசுர வேகத்தில் பல குடும்பக் கதைகளை மையமாக வைத்து படங்களை உருவாக்கி வெற்றியடைந்தார் விசு.

இவர் கதை, எழுதி, நடித்து, இயக்கிய பல திரைப்படங்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன என்பது இவருக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பெருமையாகும்.

இவர் கடைசியாக இயக்கிய படம் 2001-ம் ஆண்டு வெளியான ‘சிகாமணி ரமாமணி’. இதன் பின்பும் சில படங்களில் நடித்த விசு.. பட வாய்ப்புகள் குறைந்த பொழுது தொலைக்காட்சி உலகத்தில் நுழைந்தார்.

இவர் ‘சன் தொலைக்காட்சி’யில் நிகழ்ச்சி ‘அரட்டை அரங்கம்’ என்னும் மக்கள் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நீடித்தது. பெரும் வெற்றியைப் பெற்ற இந்த நிகழ்ச்சி பின்பு ‘ஜெயா தொலைக்காட்சி’யிலும் தொடர்ந்தது. இதிலும் ஒரு டிரெண்ட் செட்டராக தனக்குப் பின் பல தொலைக்காட்சிகள் இது போன்ற நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கு முன்னோடியாக இருந்தவர் விசு.

தமிழ்த் திரைப்படத் துறையின் முக்கியமான சங்கமான தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் பொருளாளர், செயலாளர் ஆகிய பொறுப்புகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். இதேபோல் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும், அதன் டிரஸ்ட்டிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர் விசு.

கடைசியாக நான்காண்டுகளுக்கு முன்பு 2016-ல் வெளியான ‘மணல் கயிறு-2’ படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி, அதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விசு.

2017-ல் அவருக்கு திடீரென்று சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போதில் இருந்து வாரத்திற்கு 2 முறை டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.

இந்தச் சூழலிலும் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து கட்சிப் பணியையும் ஆற்றினார். பல வீடியோ பதிவுகளை வெளியிட்டு அதில் இந்தியா, அரசியல். சினிமா, நாடகம் என்று பலவற்றைப் பற்றியும் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார் விசு.

கடைசியாக ‘நெற்றிக்கண்’ படத்தின் ரீமேக் தொடர்பாக நடிகர் தனுஷிடம் விளக்கம் கேட்டு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

சென்ற மாதத்தில் திடீரென்று அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்து வாரத்திற்கு 3 முறை டயாலிசிஸ் செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டது. இன்று மார்ச் 22 மதியம் 4.30 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட பெரும்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் விசு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே இயக்குநர் விசு காலமானார்.

இவருடைய மனைவியின் பெயர் உமா. இவருக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என 3 மகள்கள் இருக்கிறார்கள். அனைவருக்குமே திருமணமாகிவிட்டது.

திரைப்படத் துறை என்பது சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நல்லதை சொல்ல வேண்டும்.. மக்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைவில் வைத்திருந்து தனது அத்தனை படைப்புகளையும் மக்களுக்காகவே படைத்திருக்கும் மிகப் பெரிய படைப்பாளி இயக்குநர் விசு அவர்கள்..!

அவருடைய குடும்பத்தினருக்கு எங்களது ஆழந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!

அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்..!

Our Score