சங்கத்தில் மெம்பரா இருந்தால்தான் நிகழ்ச்சிக்கே வருவோம் – இயக்குநர் விக்மரன் கண்டிப்பு..!

சங்கத்தில் மெம்பரா இருந்தால்தான் நிகழ்ச்சிக்கே வருவோம் – இயக்குநர் விக்மரன் கண்டிப்பு..!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்தால்தான், சம்பந்தப்பட்ட இயக்குநர் இயக்கிய படத்தின் நிகழ்ச்சிகளுக்கு சங்கத்தின் நிர்வாகிகள் வருவார்கள் என்று இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்மரன் தெரிவித்துள்ளார். 

agila-audio

சமீபத்தில் நடைபெற்ற 'அகிலா முதலாம் வகுப்பு' படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரமன், "இந்தப் படத்தின் இயக்குநர்கள் இன்னமும் எங்களது சங்கத்தில் உறுப்பினராகலைன்னு சொன்னாங்க.. சீக்கிரமா வந்து சங்கத்துல சேர்ந்திருங்கன்னு நான் அவங்களை கேட்டுக்குறேன்.. ஏன்னா.. இந்த மாதிரி நேரத்துல இங்க வர்றதுக்கு எங்களுக்கும் சில சங்கடங்கள் இருக்கு.

இயக்குநர்கள் சங்கத்துல மெம்பரா இல்லாதவங்க நடத்துற நிகழ்ச்சிகளுக்கு சங்க நிர்வாகிகள் போகவே கூடாதுன்னு எங்க சங்கத்துல ஒரு தீர்மானமே போட்டு நிறைவேத்தியிருக்கோம். அப்படியிருந்தும். இந்த இயக்குநர்கள் சங்கத்துல சீக்கிரமே சேர்ந்திருவோம்னு சொன்னதாலதான் இங்க வந்திருக்கேன். நீங்க முன்னாடியே வந்து சேர்ந்திருந்தீங்கன்னா நிறைய இயக்குநர்கள் இந்த விழாவுக்கு வந்திருப்பாங்க..

ஒரு சில பேர் சங்கத்துல சேராமல் அலட்சியமா இருந்திட்டு கடைசி நேரத்துல பிரச்சினைன்னு வந்துட்டா உடனே சங்கத்துக்கு ஓடி வர்றாங்க.. அப்போ அவங்க  சங்கத்துல மெம்பரா இல்லைன்ற ஒரே காரணத்துக்காக அவங்ளுக்கு நாங்க எந்த உதவியும் செய்ய முடியாமப் போகுது.. இதையெல்லாம் முன்னாடியே தவிர்க்கணும்னுதான் இதைச் சொல்றோம்.. இனிமேலும் எங்க சங்கத்துல மெம்பரா இல்லாதவங்க நடத்துற நிகழ்ச்சில, நிர்வாகிகள் யாரும் கலந்துக்க மாட்டோம்ன்றதை உறுதியாவும் சொல்றேன்..” என்றார்.

பெப்சி அமைப்பில் இருக்கும் 27 சங்கங்களில் நடிகர்கள் யூனியன், இயக்குநர்கள் சங்கம் இந்த இரண்டில்தான் சங்க உறுப்பினர்களாக அல்லாதவர்களும் படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது.

நடிகர்கள் சங்கத்தைப் பொறுத்தமட்டில் ஷூட்டிங் போன இடத்தில் அங்கேயே இருக்கும் மக்களை நடிக்க வைப்பது அனைத்துத் திரைப்படங்களிலும் நடப்பதுதான். ஆகவே இதனை ஒன்றுமே சொல்ல முடியாது..!

இயக்குநர்கள் சங்கத்தில் மெம்பர்ஷிப் கட்டணம் ஒரு லட்சம். சோத்துக்கே லாட்டரியடிக்கும் நிலையில்தான் தங்களது முதல் பட வாய்ப்பையே இயக்குநர்கள் பெறுகிறார்கள். இதில் அவர்களுக்குக் கிடைக்கும் முதல் படத்துக்கான சம்பளமே சொற்பமாகத்தான் இருக்கும். இதில் 1 லட்சம் ரூபாயை கட்டச் சொன்னால் எப்படி..? என்கிறார்கள் ஒரு சிலர். சங்கத்தில் இதனைத் தவணையிலும் கட்டலாம் என்று ஒரு விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் "இந்தப் படம் ஓடினா இங்க நிப்பேன்.. இல்லைன்னா ஓடிரலாம். எதுக்கு இங்க போய் 1 லட்சத்தை தண்டத்துக்கு கட்டணும்.." என்று சொல்லி பலரும் சங்கத்தில் சேராமலேயே படத்தை இயக்கி வருகிறார்கள்.

இவர்களுக்கு படத் தயாரிப்பில் ஏதேனும் பிரச்சினை என்று வந்தால் அதில் இயக்குநர்கள் சங்கம் தலையிடாது. தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் ஏதேனும் பிரச்சினை வந்தால் இதில் தயாரிப்பாளர்தான் நிச்சயமாக ஜெயிப்பார். இயக்குநர்கள் இப்போதுதான் சங்கத்திற்கு ஓடி வருவார்கள். புதிதாகச் சேரும் இயக்குநர்களின் புகார் மனுக்களைக்கூட சங்கத்தில் சேர்ந்து ஒரு வருடம் கழித்துத்தான் எடுத்துக் கொள்வார்கள்.. ஆகவே.. எப்படியும் படம் எடுப்பதற்கு முன்பேயே சங்கத்தில் சேர்வதுதான் அவர்களுக்கு சேப்டி என்கிறார்கள் மூத்த இயக்குநர்கள்..!

தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரத் துடிக்கும் கேப்டன் விஜயகாந்த் 'விருதகிரி' என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். இந்தப் பட ஷூட்டிங்கின்போது அவரைச் சந்தித்த அப்போதைய இயக்குநர் சங்க நிர்வாகிகள், “நீங்களும் எங்க இயக்குநர் சங்கத்துல சேர்ந்தீங்கன்னா நல்லாயிருக்கும்..” என்று கேட்க.. “அட போங்கப்பா.. இந்த ஒரு படம் பண்ணிட்டு விட்டுறப் போறேன்.. அதுக்கெதுக்கு ஐம்பதாயிரத்தை கட்டி சங்கத்துல சேரணும்..? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. எனக்கு நடிகர் சங்க மெம்பர்ஷிப்பே போதும்..” என்று சொல்லி வந்தவர்களுக்கு காபி, டீ மட்டும் கொடுத்து திருப்பியனுப்பிவிட்டார்..

ஆனானப்பட்ட விஜயகாந்தே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு கணக்கு பார்க்கும்போது.. புதுமுக இயக்குநர்கள் யோசிக்க மாட்டார்களா என்ன..?