“திரைப்பட கலைஞர்கள் காவிரி பிரச்சினையில் தலையிடக் கூடாது..” – பிரபல இயக்குநர் வி.சி.குகநாதன் கருத்து

“திரைப்பட கலைஞர்கள் காவிரி பிரச்சினையில் தலையிடக் கூடாது..” – பிரபல இயக்குநர் வி.சி.குகநாதன் கருத்து

Christ International Productions சார்பில் கே.பிரவிஷ், கே.பிரதீஷ்ஜோஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கடிகார மனிதர்கள்’.

இதில் கிஷோர், லதா ராவ், கருணாகரன், ஷெரீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சங்கர் நாராயணன், இசை – சி.எஸ்.சாம், படத் தொகுப்பு – யோகி, பாடல்கள் – நா.முத்துக்குமார், கார்க்கி, நடனம் – ராதிகா, கூல் ஜெயந்த், எழுத்து, இயக்கம் – வைகறை பாலன்.

இயக்குநர் சசிகுமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இயக்குநர் வைகறை பாலன் இயக்கும் முதல் படம் இதுவேயாகும்.

kadikara-manithargal-1

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் திலகம் கே.பாக்யராஜ், இயக்குநர் வி.சி.குகநாதன் இருவரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முதலில் படத்தின் முன்னோட்டமும், பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன.

முன்னோட்டத்தைப் பார்க்கின்றபோது கதையின் கரு லேசுபாசாக புரிந்தது. கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறிய ஒரு குடும்பம், வாடகை வீட்டில் இருப்பதன் சிரமத்தை அனுபவிப்பதுதான் படத்தின் கதை.

kadikara-manithargal-1

ஒரு குடும்பம் எனில் 2 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றெல்லாம் சில வீட்டு ஓனர்கள் கண்டிஷன் போடுகிறார்கள். அப்படியொரு நிபந்தனை விதித்த வீட்டு ஓனரை ஏமாற்ற வேண்டி தாங்கள் பெற்ற மூன்றாவது பிள்ளையான சிறுவனை யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்து வளர்ப்பதும், அவனை வறுக்கி பெட்டியில் வைத்து தூக்கிச் சென்று, பின்பு அழைத்து வருவதுமாக அந்தப் பையனின் அப்பாவான கிஷோர் பெரும் பாடுபடுகிறார். இது தொடர்பாக எழும் பிரச்சினைகளும், அதன் தீர்வும்தான் படமே என்பது டிரெயிலரை பார்த்தபோது புரிந்தது.

இந்த விழாவில் இயக்குநர் வி.சி.குகநாதன் பேசும்போது, இப்போதைய தமிழகத்தின் ஹாட்டஸ்ட் பிரச்சினையான காவிரி நீர் பிரச்சினை பற்றி பேசினார்.

“கலைஞர்கள் அனைவருக்குமே பொதுவானவர்கள். அவர்கள் அரசியல் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது. கலைக்கு மொழி பேதம் கிடையாது. இங்கே யார் வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம். திறமையைக் காட்டலாம். ஜெயிக்கலாம். நன்றாக இருக்கலாம். தமிழகம் வந்தாரை வாழ வைக்கும். யாரையும் ஏமாற்றாது.

இங்கே நான் ஈழத்தைச் சேர்ந்தவன்.. இந்தப் படத்தின் நடிகரான கிஷோர் கன்னடத்தைச் சேர்ந்தவர். தயாரிப்பாளர் கேரளாவைச் சேர்ந்த மலையாளி.. இயக்குநர் நாயுடு வம்சத்தைச் சேர்ந்த தெலுங்கர்.. இப்படி மொழி, இனம் வேறுபாடில்லாமல் செயல்படும் துறை சினிமா துறை. ஆகவே சினிமாக்காரர்களை எதற்குள்ளும் இழுக்க வேண்டாம்.

kadikara-manithargal-2

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபோது ‘அவர் மலையாளி’ என்று சிலர் சொன்னார்கள். ஆனால் மக்கள் அப்படி சொல்லவில்லையே.. அவரை புரட்சித் தலைவராக, தெய்வமாக பார்த்தார்கள். அது போலத்தான் அரசியல் தலைவர்களுக்கும் மக்கள் ஜாதி பார்த்து, இனம் பார்த்து தலைவராக்குவதில்லை.

கன்னட நடிகர் ராஜ்குமாரை முதன்முதலாக ‘வேட கண்ணப்பன்’ என்கிற கன்னடப் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் நமது தமிழகத்தைச் சேர்ந்த ஏவி.எம். மெய்யப்பச் செட்டியார்தான். ஒரு தமிழன் அறிமுகப்படுத்தியதால்தான் அந்த ராஜ்குமார் கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக ஆக முடிந்தது. ஏவி.எம். செட்டியார் அதைச் செய்யாவிட்டால் ராஜ்குமாரின் நிலைமை இந்நேரம் என்னவாகியிருக்கும்..? ராஜ்குமாரை அப்போதும்கூட ‘கன்னட எம்.ஜி.ஆர்’. என்றுதான் சொன்னார்கள். அப்போதும் அவருக்கென்று ஒரு தனித்துவம் இல்லை. எம்.ஜி.ஆரை போலத்தான் என்றுதான் அழைத்தார்கள்.

இப்போது அங்கேயிருந்துதான் நமக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. காவிரி நீரைத் தரக் கூடாது என்று அங்கேயிருக்கும் கலைஞர்களே சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு. நீங்கள் கலைஞர்கள். உங்களுக்கு இது தேவையில்லாதது. இது அரசியல் பிரச்சனை. இரு மாநில அரசியல்வாதிகளும் பேசித் தீர்த்துக் கொள்வார்கள். திரைப்பட கலைஞர்கள் அரசியலுக்குள் நுழைந்து பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்..” என்று அட்வைஸ் செய்தார்.

இவருக்கு பின்பு பேச வந்த இயக்குநர் கே.பாக்யராஜ், “குகநாதன் கொஞ்சம் டென்ஷனானவர். தமிழ் உணர்வுமிக்கவர். இப்படித்தான் பேசுவார். இப்போ இங்கே பேசாமல் இருந்தாலும் பிரச்சினையாயிரும் போலிருக்கு..

‘அங்க பார்த்தீல்ல.. அவங்க என்னவெல்லாம் பேசுறாங்க. செய்றாங்க.. உங்களுக்கு மானம், ரோஷம் இருக்கா.. சோத்துல உப்பு போட்டு சாப்புடுறீங்களா..?’ன்னு நம்ம ஆளுக்கிட்ட நாலு பேர் கேட்கும்போது நாம என்ன செய்ய முடியும்..? நமக்கே இப்படியிருக்கே..? கர்நாடகால இருந்து வந்து தமிழ்நாட்டுக்கு சூப்பர் ஸ்டாரா இருக்குற ரஜினிக்கு எப்படி இருக்கும்..? அவருக்கு இது எவ்வளவு பெரிய தர்மசங்கடமான பிரச்சினை..? அதுனால இந்த காவிரி நதி நீர் பிரச்சினையை அமைதியாக பேசித்  தீர்த்துக் கொள்வதுதான் சரியான வழி..” என்றார்.

பேச்சு வார்த்தைக்கு வழியில்லாமல்தானே உச்சநீதிமன்றம்வரையிலும் போனார்கள். இனி யார் பேச்சை, யார் கேட்கப் போகிறார்கள்..?

இப்போது இது தொடர்பான பிரச்சினையில் கலைஞர்களை இழுத்துவிடுவதுகூட ஒரு அரசியல்தான். கலையுலகம் இதனைப் புரிந்து கொண்டால் அவர்களுக்கும் நல்லது.. கர்நாடகாவில் வாழும் நமது தமிழ்ச் சொந்தங்களுக்கும் நல்லது..!




error: Content is protected !!