“வாலு பட ரிலீஸிற்கு சினிமா துறையில் இருக்கும் சிலரே தடையாக இருக்கிறார்கள்..” – டி.ராஜேந்தர் ஆவேசப் பேட்டி

“வாலு பட ரிலீஸிற்கு சினிமா துறையில் இருக்கும் சிலரே தடையாக இருக்கிறார்கள்..” – டி.ராஜேந்தர் ஆவேசப் பேட்டி

‘வாலு’ படத்திற்கு தடை கேட்டு அந்தப் படத்திற்கு பைனான்ஸ் உதவி செய்த ஒரு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது குறித்து அந்தப் படத்தை வாங்கி வெளியிடவுள்ள சிம்பு சினி ஆர்ட்ஸின் உரிமையாளரும், நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார்.

Vaalu press meet - 8

அப்போது அவர் பேசும்போது, “ரமலான் மாதத்தின் பிறந்த நாளான, வரும் ஜுலை 17 முதல் என்ற தேதியிட்டு ‘வாலு’ திரைப்படம் சிம்பு சினி ஆரட்ஸ் மூலமாக வெளியிடப்படுகிறது என்ற விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். ரம்ஜானைக் கொண்டாடுவதற்காகத்தான் ‘இன்ஷா அல்லா’ என்றும் போஸ்டர்களில் விளம்பரம் கொடுத்திருக்கிறேன்.

இறைவனுடைய நாட்டம் இருந்தால் இந்தப் படம் நிச்சயமாக ஜுலை 17-ம் தேதி வெளியாகும் என்ற எண்ணத்தில்தான் அந்த விளம்பரத்தைக் கொடுத்தேன். இந்த ‘இன்ஷா அல்லா’ என்ற வாசகத்தை நான் ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்து பயன்படுத்தி வருகிறேன். நான் எல்லா கடவுளையும் நம்புபவன். அது அல்லேலுயாவாக இருந்ததாலும் சரி, ஆஞ்சநேயராக இருந்தாலும் சரி.

Vaalu press meet - 5

இப்போது வாலு படத்திற்கு உரிமை கொண்டாடக் கூடியவர்கள் விளம்பரம் வெளியிடப்பட்ட ஜுன் மாதம் 19-ம் தேதியிலிருந்து எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு இப்போது படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்கள் என்றால் என்ன காரணம்..?

இந்தப் படம் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலமாக வெளியாகவிருப்பதை தடுக்கச் சென்றுள்ளாரா என்பது பார்வையாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தெரியும்.

நீதிமன்றத்தில் நேற்றுதான் வழக்கு வந்திருக்கிறது. தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கேவியட் மனு போட்டிருப்பதால் சக்கரவர்த்தி பதில் மனு தாக்கல் போட அவகாசம் கேட்டதால் நீதிபதி ‘ஸ்டேட்டஸ் கோ’ என்றுதான் சொன்னார். இது என்னவெனில் ‘இப்போது இருக்கக் கூடிய இந்த நிலை இப்படியே தொடர வேண்டும்’ என்பதுதான் நீதிபதி சொன்னது,

ஆனால் சில பத்திரிகைகளில் இடைக்காலத் தடை என வந்திருக்கிறது. இடைக்காலத் தடை என்றால் ‘இன்டரிம் இன்ஜெக்ஷன்’ என்று நீதிபதி சொல்லியிருப்பார். அப்படி அவர் சொல்லாதபோது ‘இடைக்காலத் தடை’ என ஏன் போட வேண்டும் என்பதுதான் என் கேள்வி. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடாதா..?

இப்போது இந்தப் படம் வருமா வராதா என்ற விவாதத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்.? தமிழகம் முழுவதும் நான் பல திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் இப்படி ஒரு வழக்கு போட என்ன காரணம். ஜுலை 13-ம் தேதியன்று நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை நான் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு கட்டுப்பட நான் தயாராக இருக்கிறேன். 

சிம்புவின் படம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் படம் சிம்புவின் ரசிகர்கள் இடையில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண பொது மக்கள்கூட இந்தப் படத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். பல திரையரங்கு உரிமையாளர்களும் இந்தப் படத்தை திரையிட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறார்கள்.  

ஆனால், திரையுலகத்தில் இருக்கக் கூடிய ஏதோ ஒரு சின்ன கூட்டம் மட்டும், இந்தப் படம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பெரிய சதியை செய்து கொண்டிருக்கிறார்கள். 

நான் 35 வருடங்களாக திரையுலகில் இருக்கிறேன். சிம்பு சினி ஆரட்ஸ் மூலமாக படத்தை வெளியிடுகிறேன் என்று சொன்னால் அதை நான் சரியாக செய்வேன் என்ற பெயர் இருக்கிறது. என்னுடைய நம்பகத் தன்மையை குலைக்கும் வகையில் தற்போது இந்த இடைக்காலத் தடை செய்தி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்...” என்றார் சிம்புவின் தந்தையும் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர்