full screen background image

“இயக்குநர் அட்லியை பார்த்து பொறாமைப்படுகிறேன்…” – இயக்குநர் சுந்தர்.சி பேச்சு..!

“இயக்குநர் அட்லியை பார்த்து பொறாமைப்படுகிறேன்…” – இயக்குநர் சுந்தர்.சி பேச்சு..!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மெர்சல்.’ வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பார்த்திபன், நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ், நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

mersal-function-stills-6

விழாவுக்கு முன்பாகவே வந்த இளைய தளபதி  விஜய், வாசலில் நின்றபடியே விழாவுக்கு வந்த அனைத்து பிரபலங்களையும் கை குலுக்கி வரவேற்றார்.

படக் குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் பெருமளவில் விழா அரங்கில் குவிந்திருந்தனர். மேடையில் ஒவ்வொரு நட்சத்திரமும் வரும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.

நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி பேசும்போது, “இயக்குநர் அட்லியை பார்க்கும்போது எனக்கு ரொம்ப பொறாமையாய் இருக்கு. நான் சினிமாவுலகத்துக்கு வந்து 30 வருஷத்துக்கும் மேல  ஆச்சு. ஆனாலும் விஜய்யை வைச்சு ஒரு படம்கூட இயக்க முடியலை. ஆனால் அட்லி உள்ளே நுழைந்த ஐந்தாவது வருஷமே விஜய்யை வைச்சு இரண்டாவது படத்தையே இயக்கிட்டாரு. அவருக்கு எனது வாழ்த்துகள்.

விஜய் தம்பியை வைத்து நான் படம் இயக்கவில்லை என்றாலும், என்னுடைய பல படங்களின் வெற்றிக்கு அவர்தான் காரணம். அவர் எந்தெந்த படங்களையெல்லாம் ‘வேண்டாம்’.. ‘நேரமில்லை’ன்னு சொல்லி ஒதுக்கினாரோ, அதையெல்லாம் வேற, வேற நடிகர்களை வைச்சு இயக்கி ஹிட் கொடுத்திட்டேன்.

இப்போ அடுத்து நான் இயக்கப்போற ‘சங்கமித்ரா’கூட விஜய்யால்தான் சாத்தியமானது. அவருக்கு இதற்காக தனியா ஒரு நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.

Our Score