“வருங்கால சினிமா குறும்பட இயக்குநர்கள் கையில்தான்..” –  இயக்குநர் சற்குணத்தின் பேச்சு..!

“வருங்கால சினிமா குறும்பட இயக்குநர்கள் கையில்தான்..” –  இயக்குநர் சற்குணத்தின் பேச்சு..!

‘சப் வே’, ‘நான் படிச்ச ஸ்கூல் அப்படி’ என்ற இரண்டு குறும் படங்களின் திரையீடு வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. ஜெனிசிஸ் ஸ்டூடியோஸ் ஆதரவுடன் இந்த விழா நடைபெற்றது.

குற்றவுணர்ச்சி உள்ள குற்றவாளிகள்தான் சிக்கிக் கொள்கிறார்கள். குற்றவுணர்ச்சி இல்லாதவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள் என்று கூறுகிற குறும் படம் ‘சப்வே’.

ஆங்கிலம் தெரியாததை இன்று தமிழ் இளைஞர்கள் எவ்வளவு தூரம் தாழ்வு மனப்பான்மையாக நினைக்கிறார்கள் என்று கூறுகிற குறும்படம் ‘நான் படிச்ச ஸ்கூல் அப்படி’.

IMG_2974

இந்தக் குறும் படங்களை இயக்குநர் சற்குணம் வெளியிட்டு பேசினார். அவர் பேசும்போது, “இரண்டு குறும் படங்களையும் பார்த்தேன். இரண்டு படங்களுமே இரண்டு வகையில் இருந்தன. நன்றாக இருந்தன. தரமாகவும்  இருந்தன. இதில் பணியாற்றியவர்கள் என் குழுவினர் போல இருப்பவர்கள். என் படங்களில் பணியாற்றியவர்கள்.

இன்று குறும் படங்கள் அதிகம் கவனிக்கப்படுகின்றன. இன்றைய தமிழ்ச் சினிமா குறும்பட இயக்குநர்கள் கையில் போய்க் கொண்டிருக்கிறது. குறும் பட இயக்குநர்கள்தான் தமிழ்ச் சினிமாவில் இப்போது தரமான படங்களின் இயக்குநர்களாக, முக்கியமான படங்களின் இயக்குநர்களாக அறியப்படுகிறார்கள்.

முன்பு ஊரிலிருந்து இங்கு வந்துதான் சினிமாவைக் கற்றுக் கொள்வார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஊரிலிருந்து இங்கே வரும்போதே ஒரு குறும் படம் எடுத்துவிட்டு வந்து, தயாரிப்பாளரிடம்  ,நானும் ஒரு சினிமா எடுத்திருக்கிறேன் என்று அதைக் காட்டி வாய்ப்பு கேட்கிறார்கள். வருங்கால தமிழ்ச் சினிமா இனி குறும்பட இயக்குநர்கள் கையில்தான் இருக்கும் என்பதை நான் நம்பிக்கையுடன் கூறுவேன்.” என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தியதுடன் தொழில் நுட்பக் கலைஞர்களின் பெற்றோரையும் மேடையில் ஏற்றி கௌரவப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் ‘சப்வே’   குறும் படத்தின் இயக்குநர் வினோத்ராஜ், ‘நான் படிச்ச ஸ்கூல் அப்படி’ குறும்படத்தை இயக்கிய தினேஷ்குமார், நடிகர்கள் சஷி,  சேகர், தினேஷ்வரன், நடிகை அனுசுயா ஒளிப்பதிவாளர் விக்னேஷ் குமுளை, இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகன், விநியோகஸ்தர் ஜெனிசிஸ் ஸ்டூடியோஸ் – ஜெனீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
error: Content is protected !!