“கவிப்பேரரசு வைரமுத்துதான் சினிமாவில் என் குரு..” – இயக்குநர் சாமியின் பெருமிதம்..!

“கவிப்பேரரசு வைரமுத்துதான் சினிமாவில் என் குரு..” – இயக்குநர் சாமியின் பெருமிதம்..!

கங்காரு படம் பற்றி பக்கம், பக்கமாக எழுதும் அளவுக்கு விரிவாகப் பேசும் அப்படத்தின் இயக்குநர் சாமி, அப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவையும் வானளாவப் புகழ்கிறார்.

“கங்காரு படம் பற்றிப் பேசும்போது, கவிப்பேரரசு வைரமுத்து சார் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். இந்தப் படத்தில் அவர் பாடல்கள் எழுத வேண்டும் என்று நான்தான் விரும்பினேன்.

வைரமுத்து அவர்களை அணுக முதலில் எனக்கு பயமாகத்தான் இருந்தது. அவருக்கு சம்பளம் எப்படியோ என எனக்குள் ஒரு தயக்கம். நம் படத்தின் பட்ஜெட்டுக்கு அவர் வாங்கும் சம்பளத்தைக் கொடுக்க முடியுமா என்றும் பயந்தேன். எனவே நன்கு யோசித்த பின்புதான் அவரிடம் சென்றேன்.

இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ் மூலம்தான் அவரிடம் போனோம். கதை கேட்டார். சொன்னேன். சம்பள விஷயம் பற்றி தயங்கிக் கேட்டதும் எங்கள் பட்ஜெட் நிலையறிந்து  எழுதிக் கொடுத்தார்.. தன் 5 பாடல்கள் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்துவிட்டார். எனக்குப் பணம்  முக்கியமில்லை என்று குறைத்துக் கொண்டு எங்கள் பட்ஜெட்டுக்குள் வாங்கிக் கொண்டார்.

அவரிடம் பேசியபோது தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர் யோசிக்கவில்லை. என்னைப் பற்றி, என் படத்தைப் பற்றி, படப்பிடிப்பு பற்றி, பட்ஜெட் பற்றி, சினிமாவின் இன்றைய தொழில் சூழல் பற்றி, படைப்புச் சூழல் பற்றியெல்லாம் பேசினார். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நம் சினிமா பற்றி, உலக சினிமா பற்றி எல்லாம்  நிறைய பேசினார். நான் வியப்புடன் கேட்டுக் கொண்டு இருந்தேன்.

ஒரு பாடல் உருவாகும்போது அவர் எடுத்த அக்கறை சாதாரணமானதல்ல. ஒலிப்பதிவுக்கு வந்தார். உன்னிப்பாகக் கவனித்தார். வரிகளைப் பாடிக் காட்டினார்.அவருக்கு இருக்கும் வேலைகளில் அவர் இருக்கும் உயரத்தில் இதெல்லாம் அவருக்கு அவசியமில்லை. இருந்தாலும் செய்தார். அதுதான் அவரது தொழில் நேர்த்தி. அதனால்தான் அவர்  இவ்வளவு காலம் கடந்தும் இன்றும் நிற்கிறார்.

படத்தில் வரும் பாடல் காட்சிகளை யார் யார் எல்லாம் எந்தெந்த விதத்தில் எல்லாம் சிறப்பு சேர்க்க முடியும் என்று அவர் விளக்கியதும் எனக்குள் பல ஜன்னல்கள் திறந்த உணர்வு.

‘கங்காரு’ பாடல்கள் இப்போதே வெற்றி பெற்றுவிட்டன. படம் வந்ததும் மேலும் பட்டையைக் கிளப்பும். அவருக்கு இன்னொரு தேசிய விருது நிச்சயம்.

அவர் இருக்கிற உயரத்துக்கு என்னைப் புகழ்ந்து பேச அவசியமில்லை. அவர் அப்படிப்பட்ட மனிதரும் அல்ல.  ஆனாலும் ‘நான் தமிழ்ச் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்’ என்று சொல்லியிருக்கிறார். இத்தனை நாட்கள்  வைரமுத்து சாரை சந்திக்கவில்லையே என வருத்தப்பட்டேன். அவர் இப்போது எனக்கு சினிமாவில் குருநாதர் ஆகிவிட்டார். இனி என் எல்லாப் படங்களுக்கும் அவரிடம் ஆலோசனை கேட்கலாம் என்றிருக்கிறேன்….” என்று உருகித் தள்ளுகிறார் இயக்குநர் சாமி..!